
பாலிவுட்டின் அனைத்து முன்னணி நட்சத்திரங்களையும் வைத்து படங்களை தயாரித்துள்ள பூஜா என்டர்டெயின்மென்ட் நிறுவனம் நயன்தாரா கதாநாயாகியாக நடிக்கும் ‘கொலையுதிர் காலம்’ மூலமாக தமிழ்சினிமாவிலும் அடியெடுத்து வைத்துள்ளளது. ‘உன்னைப்போல் ஒருவன்’, ‘பில்லா-2’ ஆகிய படங்களை இயக்கிய சக்ரி டோலட்டி தான் இந்தப்படத்தையும் இயக்குகிறார்.
பாலிவுட்டில் கிட்டத்தட்ட 32 படங்கள் தயாரித்துள்ள இந்த நிறுவனம் தமிழில் நுழைய காரணம் இந்த நிறுவனத்தின் முதலாளியான வாசு பக்னானிக்கு தமிழகம் மீதுள்ள சென்டிமென்ட் தானாம். உண்மைதான்.. இருபது வருடங்களுக்கு முன் தமிழகம் வந்த வாசு பக்னானி, அப்போது ரிலீஸாகி ஓடிக்கொண்டு இருந்த பிரபு நடித்த ‘சின்ன மாப்ளே’ படத்தை பார்த்தாராம்..
அந்தப்படம் அவருக்கு ரொம்பவே பிடித்துப்போய்விட்டது. அதுவரை தொழிலதிபராக மட்டுமே இருந்த அவருக்கு நாம் ஏன் தயாரிப்பு நிறுவனம் ஒன்றை ஆரம்பித்து இந்தப்படத்தை இந்தியில் ரீமேக் செய்யக்கூடாது. என தோன்றியது. உடனே ரைட்ஸ் வாங்கி இந்தியில் அதை ‘கூலி நம்பர் 1’ என்கிற பெயரில் படமாக்கி முதல் படத்திலேயே வெற்றியை ருசித்தார்.
அதன்பின் திரைப்பட வாழ்வில் அவருக்கு அமோக வளர்ச்சி தான்.. அவரது மகன் கூட தமிழில் த்ரிஷா நடிப்பில் தயாராகி வரும் ‘மோகினி’ படம் மூலமாகத்தான் அறிமுகமாகிறார்.. சினிமா தயாரிப்பதற்கு முன்பாக கோவையிலிருந்து சேலைகள் கொள்முதல் செய்து வட மாநிலங்களில் விற்று அதன்மூலம் மிகப்பெரிய தொழிலதிபரானவர் இவர் என்பதும் இவரது தமிழ்நாட்டு பாசத்துக்கு முக்கிய காரணம்.


