சிங்களத் தடை மீறி முள்ளிவாய்க்காலில் சுடரேற்றிய டொராண்டோ மாநகரமுதல்வர்


கனடாவிலுள்ள டொராண்டோ மாநகர முதல்வர் ஜோன் ரொறி
தமிழீழப் பகுதிகளில் பயணம் செய்திருக்கிறார். வடக்கு முதல்வர் மற்றும் அமைச்சர்களோடு முல்லைத்தீவு சென்றுள்ளார். சிங்கள அரசு தடை செய்துள்ள
முள்ளிவாய்க்காலிலும் சுடரேற்றி அஞ்சலி செலுத்தியுள்ளார். அது பற்றிய விவரம்……

கனடா ரொறன்ரோ மாநகர முதல்வர் ஜோன் ரொறி வடமாகாண முதலமைச்சர் க.வி.விக்னேஸ்வரன் தலைமையிலான குழுவினருடன் ஞாயிற்றுக்கிழமை (19.03.2017) முல்லைத்தீவின் பல்வேறு பகுதிகளுக்கும் சென்று பொதுமக்கள் சந்திப்பு ஒன்றை நிகழ்த்தியுள்ளார்.

கனடா ரொறன்ரோ மாநகர சபைக்கும் யாழ் மாநகர சபைக்கும் இடையிலான புரிந்துணர்வு உடன்படிக்கை ஒன்று ஞாயிற்றுக்கிழமை (19.03.2017) கைச்சாத்திடப்பட்டுள்ளது. யாழ் பொது நூலக மண்டபத்தில் நடைபெற்ற இதற்கான நிகழ்ச்சியில் கலந்துகொள்வதற்கு முன்பாகவே முல்லைத்தீவு மாவட்டத்துக்கான விஜயமொன்றை இவர் மேற்கொண்டுள்ளார்.

கிளிநொச்சி மத்திய கல்லூரி விளையாட்டு மைதானத்தில் உலங்குவானூர்தியில் வந்திறங்கிய ஜோன் ரொறி குழுவினரை வடக்கு முதல்வர் க.வி.விக்னேஸ்வரன் தலைமையிலான குழுவினர் வரவேற்றனர். அதன் பின்னர் நேரடியாகவே முள்ளிவாய்க்கால் சென்று யுத்தத்தில் இறந்தவர்களை நினைவுகொள்ளும்முகமாக மலர்தூவி, சுடரேற்றி அஞ்சலி செலுத்தியுள்ளனர்.
இச்சுடரேற்றும் நிகழ்ச்சியில் வடக்கு முதல்வர் க.வி.விக்னேஸ்வரன், ரொறன்ரோ மாநகர முதல்வர் ஜோன் ரொறி, அவருடன் வருகை தந்திருந்த ரொறன்ரோ மாநகரசபை உறுப்பினர் மைக்கல் தோம்சன், மாநகரசபை உறுப்பினரும் ஈழத்தமிழருமான நீதன் சண், ரொறன்ரோ மாநகர முதல்வர் அலுவலகத்தின் சிரே~;ட ஆலோசகர் கீர்த்தனா கமலவாசன், வடமாகாண விவசாய அமைச்சர் பொ.ஐங்கரநேசன், வடமாகாணசபை உறுப்பினர்கள் து.ரவிகரன், க.சிவநேசன் ஆகியோரும் கலந்து கொண்டிருந்தார்கள்.
இதன் பின்னர் முல்லைத்தீவு மாவட்டச் செயலகத்துக்கு முன்பாக கவன ஈர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்டுவரும் காணாமல் ஆக்கப்பட்டோரின் குடும்ப உறவுகளுடனான சந்திப்பும் முள்ளிவாய்க்கால் கலைமகள் வித்தியாலயத்தில் பொதுமக்களுடனான சந்திப்பும் இடம்பெற்றுள்ளது.

Leave a Response