
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக் கோரியும், விவசாயிகளின் கடன்களைத் தள்ளுபடி செய்யக் கோரியும், உரிய வறட்சி நிவாரணம் அளிக்க வேண்டும் என வலியுறுத்தியும் டெல்லி ஜந்தர்மந்தர் பகுதியில் தமிழக விவசாயிகள் 4-வது நாளாக தொடர் அரைநிர்வாணப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கத் தலைவர் அய்யாக்கண்ணு தலைமையில் நூற்றுக்கும் மேற்பட்ட விவசாயிகள் போராட்டத்தில் பங்கேற்றுள்ளனர். இந்தப் போராட்டத்தில் பெண்களும் கலந்துகொண்டுள்ளனர். போராட்டத்தில் ஈடுபட்டுள்ள விவசாயிகள் மேலுடலில் சட்டை அணியாமல் நாமத்தைப் பூசிக்கொண்டு கழுத்தில் மண்டை ஓடுகளைத் தொங்கவிட்டபடி அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
கட்டி இருக்கும் வேட்டி கூட சொந்தமில்லை. தழைகளும் இலைகளும் தான் ஆடைகள். மண் சட்டிகளை தலைமாட்டில் வைத்து பிச்சைக் கோலமே தங்கள் வாழ்க்கை என்பதை உணர்த்த தமிழக விவசாயிகள், மத்திய அரசின் கவனத்தை ஈர்க்கும் வகையில் தலைநகர் டெல்லியில் போராடி வருகின்றனர்.
போராட்டத்தில் ஈடுபட்டுள்ள விவசாயிகள் தங்களது வேட்டியை அவிழ்த்து சாலையில் விரித்து, அதிலேயே படுத்துள்ளனர். மண் சட்டிகளை தலைமாட்டில் வைத்து அரை நிர்வாணக் கோலத்தில் படுத்திருக்கும் அவர்களைக் கண்டால் நெஞ்சம் பதறுகிறது. நாட்டிற்கே சோறு போடும் விவசாயிகள், ஏதுமில்லா பிச்சைக்காரர்களைப் போல ரோட்டில் படுத்துறங்கி, அரை நிர்வாணக் கோலத்தில் நடத்தி வரும் போராட்டம் சாமானிய மக்களின் நெஞ்சை கசக்கிப் பிழிகிறது.
பார்ப்பதற்கே பரிதாபமாக இருக்கும் இந்தக் காட்சிகளின் வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகி மனதைக் கரைக்கிறது. போரட்டத்தில் ஈடுபட்டுள்ள விவசாயிகள் சிலர், ஆதிவாசிகளைப் போல் பச்சை இலை தழைகளை உடலில் கட்டிக் கொண்டு தங்களின் அவலத்தை வெளிப்படுத்தி போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இதுவரை மத்திய அரசு அவர்களைத் திரும்பிப்பார்க்கவில்லை, தமிழக அரசும் அதுகுறித்து அக்கறை கொள்ளவில்லை.
விதியே விதியே என்ன செய்ய நினைத்திருக்கிறாய் எம் விவசாயக் குடிமக்களை?
