மகளிர் தினத்தில் பெண்கள் பாதுகாப்பு அமைப்பை ஆரம்பித்தார் வரலட்சுமி..!


சமீபத்தில் நடிகை பாவனா பாலியல் விவகாரம் நாடெங்கும் ஒரு அதிர்வை ஏற்படுத்தியது. நடிகை வரலட்சுமியும் தானும் அதுபோல பாலியல் சீண்டல்களுக்கு ஆளானேன் என்று கூறி அதிர்ச்சி ஏற்படுத்தினார். இது திரையுலகினர் மத்தியில் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது.

மேலும் தைரியமாக ஒரு விசயத்தை கையில் எடுத்துள்ள வரலட்சுமி, பெண்களை பாதுகாக்கும் பொருட்டு ‛சேவ் சக்தி’ என்ற அமைப்பை தொடங்கியுள்ளார். மகளிர் தினமான இன்று இந்த அமைப்பை முறைப்படி ஆரம்பித்துள்ளார்.

மேலும், சென்னை வள்ளுவர் கோட்டத்தில் பெண்களை பாதுகாக்கும் பொருட்டு கையெழுத்து இயக்கம் ஒன்றையும் இன்று ஆரம்பித்தார். இதில் ஏராளமான பேர் கையெழுத்து போட்டு வருகின்றனர். பொதுமக்கள் மட்டுமல்லாது திரைத்துறையினரும் வரலட்சுமியின் கையெழுத்து இயக்கத்திற்கு ஆதரவு தெரிவித்து பங்கேற்றுள்ளனர்.

நடிகர் விஷால் உள்ளிட்ட நடிகர் சங்க நிர்வாகிகள் இந்த கையெழுத்து இயக்கத்தில் பங்கேற்று ஆதரவு தெரிவித்தனர். இவர்கள் தவிர இயக்குநர் மிஷ்கின், நடிகர் பிரசன்னா, அவரது மனைவியும் நடிகையுமான சினேகா, நடிகை தன்ஷிகா, நடிகர் ஜெயம் ரவி உள்ளிட்ட பலரும் பங்கேற்றனர்.

Leave a Response