அதே கண்கள் – திரைப்பட விமர்சனம்

சிறு வயதில் பார்வையை இழக்கும் நாயகனின் கதை என்பதால் படத்துக்கு இந்தப் பெயர்.

கண்பார்வையற்ற நாயகன் கலையரசன் உணவு விடுதி ஒன்றை நடத்தி வருகிறார். அவருடைய தோழி ஜனனி ஐயர் நாயகன் கலை மீது காதல் கொள்கிறார். எனினும் தனது காதலை கலையிடம் வெளிப்படுத்தாமல் வைத்துக்கொள்கிறார். (அப்போதுதானே கதை நகரும்).

ஜனனி இருக்கும்போதே நாயகனுக்கு ஷிவதா நாயரின் நட்பு கிடைக்கிறது. ஷிவதாவை நாயகன் கலை காதலிக்கிறார்.

இந்நிலையில் அவருக்கு விபத்து. மருத்துவமனையில் அனுமதிக்கப்படுகிறார்.மருத்துவமனையில் இருந்து வெளியே வரும் கலை ஷிவதாவை தேடுகிறார். ஷிவதா குறித்த தகவல் கிடைக்காத நிலையில், ஜனனி ஐயருடன் அவருக்கு திருமணம் நிச்சயிக்கப்படுகிறது.

தமிழ்த்திரையுலக வழக்கப்படி அந்த நேரத்தில் காதலி ஷிவதா பற்றிய தகவல் தெரிகிறது. அவர் ஓர் ஆபத்தில் இருக்கிறார்.

அப்புறமென்ன நாயகன் ஷிவதாவை காப்பாற்றுகிறாரா, ஜனனி ஐயருடன் திருமணம் செய்கிறாரா என்று படம் பார்த்து நீங்கள் தெரிந்துகொள்ள வேண்டும்.

மெட்ராஸ் படத்தில் கவனிக்க வைத்த கலையரசனுக்கு இந்தப்படத்தில் நாயகனாகப் பதவி உயர்வு. தனக்குரிய கதாபாத்திரத்தில் தேவைக்கேற்ப நடித்துள்ளார். குறிப்பாக கண்பார்வையற்றவராக வரும் காட்சிகளில் அவரது நடிப்பு பாராட்டப்படும்படி உள்ளது.

ஜனனி, ஷிவதா ஆகிய இரண்டு நாயகிகளும் தங்கள் வேலைகளைச் சரியாகச் செதிருக்கின்றனர்.

நகைச்சுவைக்கு பாலசரவணன். தன் பங்கை நிறைவேற்றியிருக்கிறார்.

ஜிப்ரான் இசையில் பாடல்கள் இனிமை. பின்னணி இசை அனைவரையும் கவரும்படி இருக்கிறது.

இயக்குநர் விஷ்ணுவர்தனிடம் பணியாற்றிய அனுபவம் கொண்ட ரோஹின் வெங்கடேசனின் திரைக்கதை மற்றும் ஒளிப்பதிவளர் ரவிவர்மன் நீலமேகம் பங்களிப்பு ஆகியன படத்துக்குப் பலம்.

தொழில்நுட்பத்திலும் பட உருவாக்கத்திலும் செலுத்திய கவனத்தைக் கதைத்தேர்விலும் செலுத்தியிருக்கலாம்.

Leave a Response