
ஈரோடு மாநகராட்சிக்குட்பட்ட கனிராவுத்தர்குளத்திலுள்ள ஆக்ரமிப்புக் கட்டிடங்களை( மாநகராட்சி சட்டவிதி 1972 விதி எண் 7 படி)அகற்றக்கோரியும்.
தமிழக அரசு ஒதுக்கிய 10 கோடி நிதியில் குளத்தைத் தூர்வாரி புனரமைக்க கோரியும்…
காவிரியில் மாநகராட்சி குப்பை கொட்டுவதை உடனே நிறுத்தக்கோரியும், கொட்டிய குப்பையை அகற்றக் கோரியும்
காலவரையற்ற உண்ணாநிலைப் போராட்டம் 26-12-2016 திங்களன்று தொடங்கப்பட்டது.
கனிராவுத்தர்குளம் மீட்பு இயக்க ஒருங்கிணைப்பாளர் தோழர்நிலவன் தலைமையில் வெங்கடாசலம், பழனிச்சாமி, ஏ.பி.பெரியசாமி, (காந்திய மக்கள் இயக்கம்) மூர்த்தி, சுரேசு, செங்கோட்டையன்,தனகோபால், சுப்பிரமணி உள்ளிட்ட குளம் மீட்புக் குழுவினர் பங்கேற்றனர்.
உண்ணாநிலை தொடங்கி ஐந்து நாட்களாக மாநகராட்சி மற்றும் வருவாய்த்துறையிடம் நடந்த பேச்சு வார்த்தைகளில் முடிவு எட்டப்படாத நிலையில் டிசம்பர் 30 அன்று, கனிராவுத்தர்குளம் மீட்பு இயக்கப் போராட்டக்குழு மற்றும் அரசியல் கட்சிகளின் பொறுப்பாளர்கள் ஈரோடு மாவட்ட ஆட்சியரை அவருடைய அலுவலகத்தில் சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தினர்.
அப்போது மாவட்ட ஆட்சியர், மாவட்ட வருவாய் அலுவலரின் உத்தரவை முழுமையாக நடைமுறைப்படுத்துவதாகவும்,
வருகின்ற திங்கட்கிழமை குளத்திலிருந்து 15 மீட்டர் இடைவெளிக்குள் உள்ள கட்டிடங்களை சர்வே செய்து அப்புறப்படுத்த நோட்டீஸ் வழங்குவதாகவும். அகற்றப்படாத ஆக்ரமிப்புகளை முழுமையாக அகற்றுவதாகவும்,
கனிராவுத்தர்குளத்தை உரிய முறையில் அளவீடு செய்து, எல்லைக்கல் நாட்டி, அதன் வரைபடத்தை குளம் மீட்பு இயக்கத்திடம் வழங்குவதாகவும்,
பி.கே.டி நகரிலுள்ள அடுக்குமாடிக் கட்டிடங்களை பூட்டி முத்திரையிடுதல் தொடர்பான வழக்கினை விரைந்து முடிப்பதற்கான முன்முயற்சி மேற்கொள்வதாகவும்,
தமிழக அரசு ஒதுக்கிய10 கோடி நிதியை உடனேபெற நடவடிக்கை எடுப்பதாகவும்,
பி.கே.டி. நகர் வீட்டுமனை அங்கீகாரம் ரத்து செய்வது தொடர்பாக சென்னை நகர் ஊரமைப்பு இயக்குனரகம் எடுக்கும் நடவடிக்கைக்கு ஒத்துழைப்பதாக உறுதி கூறினார்.
அதன் அடிப்படையில் அனைத்துக் கட்சியினர் முன்னிலையில் உண்ணாநிலைப் போராட்டம் கைவிடப்பட்டது.
இரண்டு வாரத்திற்குள் ஆட்சியர் கூறிய உறுதிமொழி நிறைவேறுவதற்கான நடவடிக்கை இல்லையென்றால் மீண்டும் அடுத்த கட்டப் போராட்டம் தொடரும் என்று போராட்டக்குழு அறிவித்துள்ளது.
மக்களின் வாழ்வாதாரம், சுற்றுச்சூழல் ஆகியனவற்றைப் பாதுகாக்க உயிரையும் விடத் துணிந்த உண்ணாநிலையாளர்களை அனைத்துக்கட்சியினரும் பாராட்டி வாழ்த்துத் தெரிவித்தனர்.
மீண்டும் இப்படி ஒரு போராட்டம் நடக்காமல் இருக்க உறுதியளித்தபடி மாவட்ட ஆட்சியர் நடவடிக்கை எடுப்பாரா? என்பதைப் பொறுத்திருந்து பார்ப்போம்.


