உழவர் உலகு உய்ய, பசுமை வளம் பொங்க நம்மாழ்வார் நினைவைப் போற்றுவோம் – சீமான் புகழாரம்

இயற்கை வேளாண்மையின் ஆய்வாளராகவும், செயற்பாட்டாளராகவும், பரப்புரையாளராகவும் தமிழகம் முழுவதும் களப்பணி ஆற்றிக்கொண்டிருந்த முதுபெரும் அறிஞர் கோ. நம்மாழ்வாரின் மறைவு இயற்கையை நேசிக்கும் அனைவரையும் துயரத்தில் ஆழ்த்தியது. அவருடைய நினைவுநாள் இன்று (30-12-2016) அதையொட்டி நாம்தமிழர்கட்சியின் சீமான் வெளியிட்டுள்ள வீரவணக்கக் குறிப்பில்…

மணிநீரும் மண்ணும் மலையும் அணிநிழல்
காடும் உடைய தரண்.
என்ற தமிழ்மறையோன் வள்ளுவப் பெருமகனாரின் மறைமொழிக்கேற்ப நீரையும் மண்ணையும்
மலையையும் காடுகளையும் நேசித்த பாசக்காரன்
சுழன்றும்ஏர்ப் பின்னது உலகம் அதனால்
உழந்தும் உழவே தலை.
என்ற மறையோனின் கூற்றுக்கேற்ப உழவைக் கொண்டாடிய மூத்த குடிமகன்
இந்த மண்ணை நஞ்சாக்கும் கொடியவர்களிடமிருந்து மண்ணைக் காக்க, மக்களை வாழ்விக்க
இயற்கை உழவைக் கற்றவர்! மற்றவருக்கும் கற்பித்தவர்!
தானே முன்னின்று களமாடி வென்ற போராட்டக்காரர்!
மரபணு மாற்றுப் பயிர்களால் மண்ணுக்கும் மக்களுக்கும் ஏற்படும் கேடுபற்றி நாள்தோறும் பறைசாற்றிக் கிளர்ந்தெழுந்த புரட்சியாளர்
நம் மரபு சார்ந்த நெல் வகைகளைப் போற்றி மதித்த பெருந்தகை!
அளவறிந்து செரித்தபின், பசித்தபின் உண்டால் உணவே மருந்து என்னும் அறிவின் வடிவான வள்ளுவப் பெருந்தகையின் கூற்றுக்கு எடுத்துக்காட்டாக வையம் போற்ற வாழ்ந்தவர்!
நம் பெரிய தகப்பன் இயற்கை வேளாண் பேரறிஞர் நம்மாழ்வாரின் நினைவைத் தொழுவோம். அவர் கனவுகளை நடைமுறைப்படுத்த நாடெங்கும் இயற்கை உழவு, இயற்கை உரம் எவரும் ஏற்க, உழவர் உலகு உய்ய, பசுமை வளம் பொங்க, மண்ணின் நலம் காக்க, நாம் தமிழராய் எழுவோம்!

என்று குறிப்பிட்டுள்ளார்.

Leave a Response