ஒன்றுபட்டால் வெல்லமுடியும்-வழிகாட்டும் திருமக்கோட்டை

 

சாதி, மத, கட்சி அடையாளங்களை ஒதுக்கி வைத்துவிட்டு, உள்ளூர் பிரச்சினகளுக்குத் தீர்வுகாண , உள்ளூர் இளைஞர்கள் முயற்சியால் ஒன்றுபட்டு மக்கள் போராடினால் வெல்லமுடியும் என்று  உணர்த்தியுள்ளார்கள், மன்னார்குடி வட்டம், கோட்டூர் ஒன்றியம் , திருமக்கோட்டை கிராம மக்கள்.

திருமக்கோட்டையில் செயல்படும் அரசு மின் உற்பத்தி நிலையத்தில், (இயற்கை எரிவாயுவைப் பயன் படுத்தி மின் உற்பத்தி) நீர் குளிர்விப்பான்களுக்காக, மிகுதியான நிலத்தடி நீரைப் பயன்படுத்தியதால் அப்பகுதியில் நிலத்தடி நீர்மட்டம் வெகுவாகக் கீழிறங்கியது. நிலத்தடி நீர் உப்பாகி பயன்படுத்தத் தகுதியற்றதாகிவிட்டது. இந்நிலையில் மேலும் இரண்டு ஆள்துளைகிணறுகள் அமைக்க , அந்நிறுவனம் முயற்சிப்பதை அறிந்த,அப்பகுதியின் விவரமறிந்த, சமூக ஆர்வமும் போர்க்குணமும் மிக்க இளைஞர்கள் மக்களை போராட்டத்துக்கு திரட்டினர்.கடந்த 19.09.2014 அன்று பெண்கள் பெருமளவில் திரண்டுவந்து கொளுத்தும் வெயிலையும் பொருட்படுத்தாமல் சாலையில் அமர்ந்து போராடினார்கள். ஆனைத்துக்கட்சியினரும், விவசாய சங்கங்களும் இப்போராட்டத்திற்கு ஆதரவளித்தனர்.

தமிழக எரிவாயு சுழலித் திட்டங்களின் தலைமைப் பொறியாளர், 27.12.2014 தேதியிட்ட, தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்துக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் நீர் குளிர்விப்பான்களுக்குப் பதிலாக காற்று குளிர்விப்பான்களை அமைத்து மின் உற்பத்திக்கு பயன்படுத்த த.மி.உ மற்றும் பகிர்மான கழகம் அனுமதி அளித்துள்ளது என்றும், இத்திட்டத்தை விரைவில் செயல்படுத்த துரித நடவடிக்கைகளை தமிழ்நாடு மின் உற்பத்தி  மற்றும் பகிர்மான கழகம் எடுத்துவருகிறது என்றும் தெரிவித்துள்ளார்கள்.

Leave a Response