தமிழிலேயே இருந்தாலும் நீட் தேர்வு வேண்டாம் – கி.வீரமணி அதிரடி

மருத்துவப் படிப்புகளுக்கான ‘நீட்’ நுழைவுத் தேர்வை தமிழில் எழுதலாம் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது.

எம்பிபிஎஸ், பிடிஎஸ் உள்ளிட்ட மருத்துவப் படிப்புகளுக்கு இந்திய அளவில் ஒரே நுழைவுத் தேர்வை (நீட்) நடத்த உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. எனினும் தமிழகம் உள்ளிட்ட சில மாநிலங்களின் கோரிக்கையை ஏற்று நீட் தேர்வுக்கு ஓராண்டு விலக்கு அளிக்கும் அவசர சட்டத்தை மத்திய அரசு பிறப்பித்தது.

வரும் கல்வியாண்டு முதல் மருத்துவப் படிப்புகளுக்கு இந்திய அளவில் ‘நீட்’ நுழைவுத் தேர்வு நடத்தப்பட உள்ளது. இந்தத் தேர்வு தொடர்பாக மத்திய சுகாதார, குடும்ப நலத்துறை இணையமைச்சர் அனுபிரியா படேல் மக்களவையில் டிசம்பர் 9 அன்று எழுத்துப்பூர்வமாக அளித்த பதிலில்,

எம்பிபிஎஸ், பிடிஎஸ் உள்ளிட்ட மருத்துவப் படிப்புகளுக்கு (நீட்) நுழைவுத் தேர்வு நடத்துவது தொடர்பாக பல்வேறு மாநில அரசுகளுடன் மத்திய அரசு ஆலோசனை நடத்தியது.

அதன்படி வரும் 2017-ம் ஆண்டிற்கான ‘நீட்’ நுழைவுத் தேர்வு இந்தி, ஆங்கிலம், தமிழ், தெலுங்கு, மராத்தி, குஜராத்தி, அசாம் ஆகிய மொழிகளில் நடத்தப்படும். இந்த நுழைவுத்தேர்வால் இடஒதுக்கீட்டுக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படாது.

இவ்வாறு இணையமைச்சர் அனுபிரியா படேல் தெரிவித்துள்ளார்.

இதற்குக் கடும் எதிர்ப்புத் தெரிவித்து கி.வீரமணி அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில்,

மருத்துவக் கல்லூரி சேர்க்கைக்கான ‘நீட்’ என்னும் அகில இந்திய நுழைவுத் தேர்வினை தமிழில் எழுத வாய்ப்பளித்தாலும் அதனை நிராகரிக்கவேண்டும் – ‘நீட்’ சமூகநீதிக்கு எதிரானது என்று திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் விடுத்துள்ள அறிக்கை வருமாறு:

அகில இந்திய அளவில் மருத்துவக் கல்லூரி சேர்க் கைக்கு ‘நீட்’ என்ற நுழைவுத் தேர்வு 2016 ஆம் ஆண்டு முதல் செயல்பாட்டுக்கு வந்துள்ளது.

தமிழ்நாட்டைப் பொறுத்தவரை 2007 ஆம் ஆண்டு முதல் நுழைவுத் தேர்வு அறவேயில்லை. தமிழக அரசின் எதிர்ப்பால் கடந்த ஆண்டு நுழைவுத் தேர்வு எழுதுவதிலிருந்து தமிழ்நாட்டுக்கு விலக்கு அளிக் கப்பட்டுள்ளது.

ஆனால், 2017 ஆம் ஆண்டு முதல் தமிழ்நாட்டுக்கும் ‘நீட்’ என்ற நுழைவுத் தேர்வு செயல்பாட்டுக்கு வரும்; இதனைத் தமிழகக் கல்வித் துறை அமைச்சரும் ஒப்புக் கொண்டுள்ளார். பயிற்சி வகுப்புகள் தொடங்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார். இது மறுபரிசீலனை செய்யப் படவேண்டும். அவசரம்; அவசியம்!

இந்தத் திட்டத்தைப் பொறுத்தவரை மாநிலங்களில் கருத்துக் கேட்கப்படவில்லை. தமிழ்நாடு அரசின் கருத்து இதில் என்னவென்று கேட்காமலேயே அகில இந்திய தேர்வு முறையைத் திணிப்பது எந்த வகையில் சரியானது?

தமிழ்நாடு அரசு நுழைவுத் தேர்வை ரத்து செய்து நிறைவேற்றிய சட்டத்துக்கும், தமிழ்நாட்டில் நுழைவுத் தேர்வு ரத்து சட்டப்படி சரியானதே என்ற உயர்நீதிமன்ற தீர்ப்புக்கும்தான் என்ன மரியாதை?

இப்பொழுது நாக்கில் தேன் தடவுவதுபோல ‘நீட்‘ தேர்வைத் தமிழிலும் எழுதலாம் என்று முடி வெடுக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது என்பது கண்ணிவெடியாகும்.

தமிழில் எழுதினாலும் நுழைவுத் தேர்வு கூடாது!

‘நீட்’ தேர்வே கூடாது என்பதுதான் தமிழ்நாட்டின் நிலையே தவிர, ‘நீட்’ தேர்வை எந்த மொழியில் எழுதலாம் என்பதல்ல பிரச்சினை.

மாநில அரசு நடத்தும் பிளஸ் டூ தேர்வில் மாணவர்கள் பெறும் மதிப்பெண்களைக் குப்பையில் தூக்கிப் போட்டுவிட்டு, சி.பி.எஸ்.இ. என்னும் ‘உயர்தட்டு’ – அகில இந்திய பாடத் திட்டத்தில் ஒரு தேர்வை நடத்துவது எந்த வகையிலும் நியாயப்படுத்த முடியாத – கடைந்தெடுத்த அநீதியல்லவா?

இந்தியா முழுமையும் ஒரே மாதிரியான கல்வியா இருக்கிறது? இல்லை என்கிறபோது குறிப்பிட்ட ஒரு பாடத் திட்டத்தின் அடிப்படையில் தேர்வை நடத்துவது – அதுவும் மத்திய அரசே இப்படி நடந்துகொள்வது சரியானதுதானா? மத்திய அரசு என்பது குறிப்பிட்ட ஒரு பிரிவினருக்கு, குறிப்பிட்ட பாடத் திட்டத்தில் படித்தவர்களுக்கு மட்டுமே வசதி செய்துகொடுக்கும் ஒரு முகவரா? நடுநிலை தவறிய இந்தப் போக்குக் கண்டிக்கத்தக்கதாகும்.

இந்த ‘நீட்’ தேர்வின்மூலம் பிளஸ் டூ தேர்வில் குறைந்த மதிப்பெண் வாங்கியவர்களுக்கு இடம் கிடைக்கக் கூடும். பிளஸ் டூ தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெற்றவர்களுக்கு வாய்ப்புக் கிடைக்காமலும் போகக்கூடும். இது மாணவர் கள் மத்தியில் பிளவையும், மன உளைச்சலையும் ஏற்படுத்தக்கூடியது அல்லவா?

கடந்தஆண்டுநடைபெற்றஅகிலஇந்திய நுழைவுத்தேர்வுமிகவும்கடினமாகஇருந்தது என்று பொதுப்படையாகவே மாணவர்கள் கருத்துத் தெரிவித்துள்ளனரே!

கடந்த ஆண்டு தேர்வில் மருத்துவக் கல்லூரியில் இடம்பெற்ற கிராமப்புற மாணவர்களின் சதவிகிதம் எவ்வளவு? திறந்த போட்டியில் தாழ்த்தப்பட்ட, பிற் படுத்தப்பட்ட மாணவர்கள் பெற்ற இடங்கள் எத்தனை? சதவிகிதம் எவ்வளவு? என்கிற புள்ளி விவரத்தை அறிவிக்க மத்திய அரசு தயார்தானா?

2016 ஆம் ஆண்டில் தமிழ்நாட்டில் நுழைவுத் தேர்வு இல்லாத நிலையில், பிளஸ் டூ மதிப்பெண் அடிப்படையில் தேர்வு செய்யப்பட்ட மருத்துவக் கல்லூரி மாணவர்கள்பற்றிய புள்ளி விவரத்தைத் தெரிந்து கொண்டால், பிளஸ் டூ தேர்வு மதிப்பெண் அடிப்படையில் தேர்வு செய்யப்பட்டால், யாருக்கு வாய்ப்பு என்பதை எளிதாகத் தெரிந்துகொள்ளலாமே!

பொதுப் போட்டிக்கான மொத்த இடங்கள் 884.

இதில் பிற்படுத்தப்பட்டோர் 599.

மிகவும் பிற்படுத்தப்பட்டோர் 159

தாழ்த்தப்பட்டோர் 23

அருந்ததியர் 2

மலைவாழ் மக்கள் 1

இசுலாமியர் 32

பொதுப் பிரிவினர் 68

(பார்ப்பனர் மற்றும் பார்ப்பனர் அல்லாதாரில் உயர்ஜாதியினர்)

200-க்கு 200 மதிப்பெண் பெற்ற மூன்று பேரும் பிற்படுத்தப்பட்டவர்களே!

இந்த நிலை ‘நீட்’ தேர்வுமூலம் நீடிக்குமா?

தமிழ்நாட்டில் கடந்த ஆண்டு கிராமப்புறங்களைச் சேர்ந்த மாணவர்களுக்கு 60 சதவிகிதம் வரை இடங்கள் கிடைத்துள்ளன.

பெரும்பாலும் முதல் தலைமுறையாகப் படித்த இவர் களின் இந்த வாய்ப்பு மறுக்கப்பட வேண்டுமா?

இன்னொரு முக்கியமான கருத்து. நுழைவுத் தேர்வு என்பது மருத்துவப் பட்டத்திற்கான தேர்வு அல்ல. மருத்துவக் கல்லூரியில் நுழைவதற்கான தேர்வே! மருத்துவக் கல்லூரியில் சேர்ந்தவர்கள் தேர்வில் போதிய மதிப்பெண்கள் பெற்றால்தான் வெற்றி பெற முடியும்; பட்டங்களையும் பெற முடியும்.

இதனை மறைத்துவிட்டு, மருத்துவக் கல்லூரியில் சேருவோருக்கு ‘தகுதி – திறமை’ வேண்டாமா? என்று கேட்பது பிரச்சினையைத் திசை திருப்புவதாகும்.

‘நீட்’ தேர்வு கூடாது என்பதுதான் அ.இ.அ.தி.மு.க. அரசின் நிலைப்பாடாக இருந்தது.

முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா அவர்கள் இதில் உறுதியாகவே இருந்தார். இன்னும் சொல்லப்போனால் 2006 ஆம் ஆண்டில் நுழைவுத் தேர்வை ரத்து செய்து ஆணை பிறப்பித்தவர் அவரே!

சில சட்ட நுணுக்க அடிப்படையில் அது செல்லாது என்று நீதிமன்றம் அறிவித்த நிலையில், 2007 ஆம் ஆண்டில் கலைஞர் தலைமையிலான ஆட்சி, அதனைச் சரி செய்து சட்டம் செய்த நிலையில், நீதிமன்றமும் ஏற்றுக்கொண்டு விட்டது என்பதை இந்த இடத்தில் நினைவூட்டுகிறோம்.

உச்சநீதிமன்றம் இறுதித் தீர்ப்பு கூறிவிட்டது – எனவே, ‘நீட்’ தேர்வு தவிர்க்கப்பட முடியாதது என்று சொல்லுவது சரியானதல்ல – அதற்கும் தீர்வு உண்டு.

மண்டல் குழு தொடர்பான இந்திரா – சஹானி வழக்கில்கூட இட ஒதுக்கீடு 50 சதவிகிதத்தைத் தாண்டக் கூடாது என்றுதான் ஒன்பது நீதிபதிகளைக் கொண்ட உச்சநீதிமன்ற அமர்வு தீர்ப்பு கூறியது.

அதற்கு மாற்றாக திராவிடர் கழகம் அளித்த கருத்துருவை ஏற்றுக்கொண்டு, தமிழ்நாடு சட்டப்பேரவையில் இந்திய அரசமைப்புச் சட்டம் 31-சி பிரிவின்கீழ் சட்டம் செய்யப்பட்டு, நாடாளுமன்ற இரு அவைகளிலும் ஒப்புதல் பெற்று (76 ஆவது சட்டத் திருத்தம்) ஒன்பதாவது அட்டவணையிலும் சேர்க்கப்பட்டு, தமிழ்நாட்டின் 69 சதவிகிதம் இப்பொழுது பாதுகாப்பாக இல்லையா?

இந்த முன்னுதாரணத்தின் அடிப்படையில் தமிழ்நாடு அரசு செயல்படவேண்டும் என்று வலியுறுத்துகிறோம்; மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா அவர்கள் இதற்கு வழிகாட்டியுள்ளார் என்பதை இன்றைய முதலமைச்சர் மாண்புமிகு ஓ.பன்னீர்செல்வம் அவர்களுக்கும், அமைச்சரவைக்கும் தெரிவித்துக் கொள்கிறோம்.

‘நீட்’ தேர்வைத் தமிழில் எழுதினாலும் ஏற்க முடியாது – கூடாது என்பதுதான் நமது உறுதியான நிலைப்பாடாக இருக்கவேண்டும். இது ஒன்றும் மொழிப் பிரச்சினையல்ல – சமூகநீதிப் பிரச்சினை!

இதனை சாதிப்பதின் மூலம் தமிழ்நாட்டில் திராவிடர் இயக்கம் கட்டிக்காத்துவந்த சமூகநீதியை திரு.ஓ.பன்னீர்செல்வம் அவர்கள் தலைமையிலான அ.இ.அ.தி.மு.க. அரசு நிலை நிறுத்தியது என்ற நல்லதோர் தொடக்கத்தை ஏற்படுத்தலாம் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறோம்.

என்று கூறியுள்ளார்.

Leave a Response