திரண்ட தமிழ் மாணவர்கள், அரண்ட சிங்கள அரசு, உலகத்தமிழர்கள் புத்துணர்ச்சி

யாழ்ப்பாணம் குளப்பிட்டி சந்திப்பகுதியில் யாழ் பல்கலைக்கழக மாணவர்கள் இருவர் கொல்லப்பட்ட சம்பவத்தைக் கண்டித்தும், இழைக்கப்பட்ட அநீதிக்கு நீதி கோரியும் யாழ் பல்கலைக்கழக மாணவர்கள் யாழ்ப்பாணம், கிளிநொச்சி, வவுனியா ஆகிய மாவட்டங்களில் அக்டோபர் 24 அன்று (திங்கள் கிழமை) கவன ஈர்ப்புப் போராட்டத்தை நடத்தினர்.

யாழ் அரசு செயலகம், வடமாகாண ஆளுனர் அலுவலகம் ஆகியவற்றை முற்றுகையிட்டு, ஏ9 நெடுஞ்சாலையை மறித்து யாழ் பல்கலைக்கழக மாணவர்கள் பெரும் எண்ணிக்கையில் இந்தப் போராட்டத்தில் கலந்து கொண்டிருந்தனர்.

கிளிநொச்சியில் கவனயீர்ப்புப் போராட்டமும், வவுனியாவில் விரிவுரைகளைப் புறக்கணித்த போராட்டமும் முன்னெடுக்கப்பட்டது.

யாழ் அரச செயலகத்தின் பிரதான நுழைவாயில்களை மறித்து நடத்தப்பட்ட போராட்டம் காரணமாக அரசுப் பணிகள் பல மணிநேரங்கள் பாதிக்கப்பட்டிருந்தன.

சாலை மறிப்பு போராட்டம் காரணமாக ஏ9 நெடுஞ்சாலை ஊடான போக்குவரத்து முழுமையாகப் பாதிக்கப்பட்டிருந்தது.

அமைதியான முறையில் நடைபெற்ற இந்தப் போராட்டம், யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் நாகலிங்கம் வேதநாயகன், வடமாகாண ஆளுனர் ஆகியோரிடம் கோரிக்கைகள் அடங்கிய மனு கொடுத்தவுடன் முடிவுக்கு வந்தது.

பல்கலைக்கழக மாணவர்கள் இருவர் கொல்லப்பட்ட சம்பவத்தில் சம்பந்தப்பட்டதாக சந்தேகிக்கப்படும் 5 காவல்துறையினர் கைது செய்யப்பட்டிருக்கிறார்கள்.

மாணவர் பேரணி நடைபெற்ற இடங்களில் காவல்துறையினர் தலைகள் தென்படவே இல்லை.

இதற்கிடையே சுன்னாகம் கந்தரோடையைச் சேர்ந்த விஜயகுமார் சுலக்சன் என்ற மாணவனின் இறுதி ஊர்வலத்திலும் பெரும் கூட்டம் திரண்டிருந்தது.

சுமார் இரண்டு இலட்சம் சிங்கள இராணுவம், ஒரு இலட்சத்துக்கும் மேற்பட்ட சிங்கள காவல்துறை ஆயுதங்களுடன் இருக்கிறார்கள். ஆனாலும் பதாகைகளை மட்டுமே ஏந்தி வந்த மாணவர் பேரணியின் போது ஒருவரும் அங்கே வரவில்லை என்கிற செய்தி வியப்பளிக்கிறது. தமிழ் மாணவர்களின் எழுச்சியைக் கண்டு சிங்களர்கள் அஞ்சி நடுங்கிவிட்டார்கள் என்று தெரிகிறது, உற்சாகமாகச் சொல்கிறார் ஓர் ஈழத்தமிழர்.

இரண்டு மாணவர்கள் இழப்பு பெரிதெனினும் அதன் பின் தமிழர்களின் திரட்சி உற்சாகமளிக்கிறது என்றும் சொல்கிறார்கள். இந்த உற்சாகம் உலகெங்கும் உள்ள ஈழத்தமிழர்களுக்குப் புத்துணர்ச்சி ஊட்டியிருக்கிறது.

Leave a Response