தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச் சங்க நிறுவனர், சு.ஆ.பொன்னுசாமி ஓர் அறிக்கை வெளியிட்டுள்ளார். அவ்வறிக்கையில்,
தமிழகம் முழுவதும் சேவை சார்ந்த தொழிலான பால் வணிகத்தில் ஈடுபட்டு வரும் பால் முகவர்கள் அளவிற்கு அதிகமாக வருமானம் ஈட்டுவதாக நினைத்து வரும் ஒரு சிலரில் தற்போது காவல்துறையினரும் சேர்ந்திருப்பது வருத்தமளிக்கிறது.
புயல், மழை, வெள்ளம் என எந்த ஒரு இயற்கை சீற்றங்கள் ஏற்பட்டாலும், தங்களின் இல்லத்தில் சுப நிகழ்ச்சிகளோ அல்லது துக்க நிகழ்ச்சிகளோ என்றாலும் கூட பால் விநியோகம் செய்வதில் தங்குதடையின்றி, தன்னலமற்ற சேவையை வழங்கி வருபவர்கள் பால் முகவர்கள்.
அப்படி தன்னலமற்ற சேவையை வழங்கி வரும் பால் முகவர்களுக்கு பால் நிறுவனங்கள் நள்ளிரவில் பாலினை விநியோகம் செய்து விட்டுப் போக அந்த பாலினை தங்களின் கடைகளுக்கு வெளியே இறக்கி வைத்து அதிகாலை நேரத்தில் பொதுமக்கள், சில்லறை வணிக நிறுவனங்கள், தேனீர் கடை மற்றும் உணவகங்களுக்கு பாலினை விநியோகம் செய்கின்ற பணியில் இருக்கும் போது இரு சக்கர வாகனங்களிலும், நான்கு சக்கர வாகனங்களிலும் இரவு ரோந்துப்பணியில் ஈடுபட்டு வரும் காவல்துறையினர் பால் முகவர்களிடம் நேரில் வந்து குறைந்தபட்சம் இரண்டு பால் பாக்கெட்டுகளையாவது இலவசமாக தரச் சொல்லி கட்டாயப்படுத்தி வாங்கிச் செல்கின்றனர்.
இது தமிழகம் முழுவதும் தினமும் நடைபெற்று வருகிறது என்பதோடு அவ்வாறு ஒவ்வொரு பால் முகவர்களிடமும் வாங்குகின்ற பால் பாக்கெட்டுகள் சுமார் 20முதல் 30வரை சேர்த்து ஏதேனும் ஒரு சில்லறை விற்பனை கடையில் கொடுத்து அதற்கான பணத்தை வாங்கி செல்வது வேதனையிலும் வேதனையான விசயம்.
காவல்துறையினரே வந்து கட்டாயப்படுத்தி பால் பாக்கெட்டுகளை இலவசமாக கேட்பதால் மறுக்கவும் முடியாமல், அதனை எவரிடமும் பகிரவும் முடியாமல் பால் முகவர்கள் பரிதவித்து வருகின்றனர்.
ஏற்கனவே காலி பால் டப்புகள் திருட்டு தொடர்பாக சென்னை, காவல்துறை ஆணையாளர் அவர்களிடம் மூன்றுக்கும் மேற்பட்ட முறை ஆதாரங்களுடன் புகார் அளித்து இரண்டு வருடங்கள் ஆகப்போகிறது. ஆனால் இது வரை எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கப்படாதது வருத்தமளிக்கிறது. ஏற்கனவே உழைப்பிற்கேற்ற ஊதியமின்றி பால் முகவர்கள் தவித்து வரும் சூழ்நிலையில் காவல்துறையினரின் செயல்பாடுகள் வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுவதைப் போன்று இருக்கிறது.
திருடர்கள் பாலை திருடினால் காவல்துறையில் புகார் அளிக்கலாம். ஆனால் காவல்துறையினரே பால் முகவர்களை கட்டாயப்படுத்தி பால் பாக்கெட்டுகளை இலவசமாக கேட்பதை எவரிடம் சென்று புகார் அளிப்பது? அல்லது ஏற்கனவே கொடுக்கப்பட்ட புகார் மீது நடவடிக்கைகள் இல்லாத போது இனிமேலும் புகார் அளித்தால் நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்பதற்கு என்ன உத்தரவாதம்..?
தமிழகம் முழுவதும் சேவை சார்ந்த தொழிலான பால் வணிகத்தில் ஈடுபட்டு வரும் பால் முகவர்கள் அனைவரும் தங்குதடையின்றி பால் விநியோகம் செய்திட காவல்துறையினர் தடை ஏற்படுத்தாமல் ஒத்துழைப்பு தர அறிவுறுத்துவதோடு, பால் முகவர்களை கட்டாயப்படுத்தி பால் பாக்கெட்டுகளை இலவசமாக வாங்குவதை தடை செய்து உத்தரவிட வேண்டும் எனவும் தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச் சங்கம் சார்பில் தமிழக காவல்துறை தலைவர் அவர்களையும், காவல்துறை ஆணையாளர் அவர்களையும் வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறோம்.
இவ்வாறு கூறியிருக்கிறார்.