கொரோனா பெருந்தொற்றிலிருந்து தப்பிக்க தடுப்பூசியே ஒரே தீர்வு என தமிழ்நாடு அரசு, அனைத்து நிலைகளிலும் தடுப்பூசியை அனைவர் மீதும் திணிக்கும் சட்டவிரோதமான – தனிமனித சுதந்திரத்திற்கு விரோதமான – ஒற்றை ஆங்கில மருத்துவத் திணிப்புப் பாசிச முயற்சியில் இறங்கியுள்ளது.
அதனை எதிர்த்து அறவழியில் போராடிய தமிழ்த்தேசியப் பேரியக்கத்தினரை காவல்துறையினர் வலுக்கட்டாயமாகக் கைது செய்தனர்.
இதுதொடர்பாக அவ்வமைப்பினர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்…..
கொரோனா தடுப்பூசி கட்டாயமாக்கப்படவில்லை என உச்ச நீதிமன்றத்திலேயே இந்திய அரசு தெரிவித்துவிட்ட நிலையில், இந்திய நலவாழ்வுத்துறை அமைச்சகமும் அதை உறுதிசெய்துள்ள நிலையில், தமிழ்நாடு அரசு வெவ்வேறு வகைகளில் தடுப்பூசியால் ஏற்படும் பாதிப்புகளுக்கு எவ்வகையிலும் பொறுப்பேற்றுக் கொள்ள முன்வராமல், அனைவர் மீதும் தடுப்பூசியைக் கட்டாயமாக்கித் திணிக்கும் பணியில் இறங்கியுள்ளது. இது ஆங்கில அலோபதி மருத்துவம் மட்டுமின்றி, சித்தா – ஆயுர்வேதா – யுனானி எனப் பல்வேறு மருத்துவ முறைகளை மேற்கொண்டு வரும் மக்களை ஒற்றை அலோபதி மருத்துவத்தின்கீழ் கொண்டு செல்லும் உள்நோக்கம் கொண்டதாக உள்ளது.
எனவேதான், தடுப்பூசியைக் கட்டாயப்படுத்தி பல்வேறு செயல்பாடுகளில் ஈடுபட்டு வரும் தமிழ்நாடு அரசுக்கு நம் எதிர்ப்பினை இந்திய அரசமைப்புச் சட்டம் வழங்கியுள்ள சனநாயக வழியில் ஒன்றுகூடித் தெரிவிக்கவும், அரசின் தடுப்பூசி விழிப்புணர்வால் உந்தப்பட்டு தடுப்பூசி போட்டுக் கொண்டு பாதிப்பைச் சந்தித்துள்ளோருக்கு உரிய நட்ட ஈடு வழங்க வேண்டுமெனக் கோரியும் தமிழ்த்தேசியப் பேரியக்கம் தொடர் போராட்டங்களை நடத்தி வருகிறது.
25.12.2021 அன்று புதுச்சேரியில் முதன் முறையாகப் போராட்டத்தைத் தொடங்கி வைத்தோம். அதன்பிறகு, 03.01.2022 அன்று பெண்ணாடத்திலும், 07.01.2022 அன்று சிதம்பரத்திலும் பேரியக்கம் சார்பில் ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றன. 29.12.2021 அன்று சீர்காழியில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் பேரியக்கத் தோழர்கள் பங்கேற்றனர்.
இதன் தொடர்ச்சியாக, நேற்று (11.01.2022) செவ்வாய் மாலை 4 மணியளவில் – சென்னை நுங்கம்பாக்கம் வள்ளுவர் கோட்டத்தில் தமிழ்த்தேசியப் பேரியக்கம் சார்பில் பல்வேறு தோழமை அமைப்பினர் பங்கேற்கும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டது.
போராட்டம் நடைபெறும் இடத்தில் ஒன்றுகூடுவதற்குக் கூட அனுமதி மறுத்து, கடும் கெடுபிடி செய்து, பெருமளவில் காவல்துறையினரைக் குவித்தனர். அறவழி ஆர்ப்பாட்டத்திற்குக் கடைசி நேரத்தில் அனுமதி மறுத்த காவல்துறையினர், போராட்டத்தில் ஈடுபட்டோரை வலுக்கட்டாயமாகக் கைது செய்தனர்.
போராட்டத்தில் ஆண்கள் – பெண்கள் – முதியவர்கள் – குழந்தைகள் எனப் பலதரப்பட்ட மக்களும் பங்கேற்ற நிலையில், ஒரு கட்டத்தில் தாங்கள் கொண்டு வந்திருந்த மூன்று வாகனங்களில் மட்டும் போராட்டத் தோழர்களைக் கைது செய்து காவல்துறையினர் கொண்டு சென்றனர். கைதாக வந்த 100க்கும் மேற்பட்டோரை கைது செய்யாமல் திருப்பி அனுப்பினர்.
போராட்டத்திற்கு, தமிழ்த்தேசியப் பேரியக்கப் பொதுச்செயலாளர் தோழர் கி. வெங்கட்ராமன் தலைமை தாங்கினார். பேரியக்கத் தலைமைச் செயற்குழு உறுப்பினர் தோழர் க.அருணபாரதி ஒருங்கிணைத்தார். பொதுக்குழு உறுப்பினர் தோழர் பழ.நல்.ஆறுமுகம் முன்னிலை வகித்தார்.
மக்கள் அறிவியல் இயக்க மருத்துவர் கோ. பிரேமா M.D(Hom)., மருத்துவர் பி. ஹரி சங்கர் M.B.B.B.S., அக்குஹீலர் அ. உமர்பாரூக் M.Acu., M.Sc (Psy)., (Ph.D(Psy))., அக்கு ஹீலர் ம. அருள்ராஜ் B.Sc., (Acu), நாம் தமிழர் கட்சி புதுச்சேரி தொழிற்சங்கச் செயலாளர் தோழர் து. இரமேசு, மகளிர் ஆயம் செயற்குழு உறுப்பினர் திருமதி. மாதவி கண்ணன், பேரியக்கத் தலைமைச் செயற்குழு உறுப்பினர் தோழர் இரா. வேல்சாமி, சென்னை நடுவண் கிளைச் செயலாளர் தோழர் மு. வடிவேலன் உள்ளிட்ட திரளானோர் கைது செய்யப்பட்டனர்.
கைதான தோழர்கள் நுங்கம்பாக்கம் ஆர்.ஆர். திருமண மண்டபத்தில் அடைத்து வைக்கப்பட்டு, மாலை 7 மணியளவில் விடுதலை செய்யப்பட்டனர். கைதாகி இருந்த மண்டபத்தில் மருத்துவர்கள் கட்டாயத் தடுப்பூசித் திணிப்பின் பின் விளைவுகளை விவரித்து உரையாற்றினர்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.