எல்லைக்கோட்டிலிருந்து 500 மீட்டர் உள்ளே வந்த கேரளா – பறிபோகிறது தமிழர் நிலம்

தமிழக, கேரள எல்லையான கூடலூரின் கடைக்கோடி தாளூர். சோதனைச்சாவடியின் அருகில் இருக்கும் அவ்வூருக்குள் கேரளா கொஞ்சம் கொஞ்சமாக உள்ளே நுழைகிறது என்று செய்தியை நாம் வெளியிட்ட பிறகு பலர் தொடர்பு கொண்டு அது தொடர்பான ஆதாரங்களைச் சேகரித்துத் தருவதாகச் சொல்லியிருக்கிறார்கள். முதல்செய்தியைக் கொடுத்த பிரகாசு அடுத்துச் சொல்லியிருக்கும் செய்தி இது…

தமிழர் கையிலிருந்து பறிபோகும் நிலையில் தாளூர்.

நீலமலை மாவட்டம் கூடலூர் சட்டமன்ற தொகுதியின் கடைக்கோடி எல்லை தாளூர். ஒரு சோதனைச்சாவடியை கடந்தால் கேரளா. எல்லை என்பதாலோ என்னவோ அங்கு மலையாளத்தின் தாக்கம் அதிகம். அது தமிழர் பகுதி என்பதற்கான அடையாளமே அங்கு இடையிடையே பறக்கும் புலிக்கொடிதான். மற்றபடி பெருவணிக நிறுவனங்கள், கடைகள் என அனைத்தும் கேரள மக்களே கோலோச்சும் இடமாகவே இருக்கிறது. இரண்டு மாநிலங்களிலும் அரசின் சலுகைகள் பெறுபவர்களும் அதிகம். சிலர் இங்கேயே பூர்வக்குடிகளாக வாழ்பவர்களும் இருக்கிறார்கள். ஆனால் தற்போது இங்கு பணபலத்துடன் இருப்பவர்கள் பெரும்பாலும் ஒருசில வருடங்களுக்குள்ளாக வந்து குடியேறியவர்கள். அவர்களில் ஓரிரு ஒப்பந்தகாரர்கள் குறிப்பிட்டு சொல்ல வேண்டியவர்கள். அந்த ஒப்பந்தகாரர்களில் ஒருவர்தான் தாளூர் பகுதியில் பணபலத்தோடு நிற்கும் ஏ.பி.பி. எல்லைக்கோடு வரையறுக்கும் போது, ஒரு ஆற்றின் மையப்பகுதியை நீள்வெட்டாக, ஆற்றின் ஒரு பாகம் கேரள எல்லை தொடங்கும் பகுதியாகவும், மறுபாகம் தமிழ்நாட்டு எல்லை தொடங்கும் இடமாகவும் அறிவிக்கப்பட்டது.
குறிப்பிட்ட ஒரு இடைவெளியில் இரு மாநிலங்களும் சோதனைச்சாவடி அமைத்திருக்கிறார்கள். இத்தனை ஆண்டுகாலம் சேரங்கோடு ஊராட்சிக்கு வரிசெலுத்தப்பட்டுவந்த தாளூர் பகுதியில் கடந்த ஆண்டு புதிதாய் ஒரு கட்டிடம் கட்டப்பட்டது. அதுவரையிலும் சிக்கல் இல்லை. ஆனால் முறைகேடான வழியில் கேரள அரசிடம் பட்டா பெற்று, கேரள மின்வாரியம் மின்சாரமும் வழங்கியிருக்கிறது. இரண்டு மாதங்களுக்கு முன்பு தமிழ்நாடு மின்னிணைப்பு பெற்றிருந்த கட்டிடம் இன்று எல்லையை கடந்து மின் கம்பம் நடப்பட்டு கேரளாவிலிருந்து மின்சாரம் வருகிறது. அப்படியானால் சேரங்கோடு ஊராட்சியில் மின்சாரம் எடுக்க தடையில்லா சான்று கொடுக்கப்பட்டிருக்க வேண்டும். எப்படி கொடுக்கப்பட்டது? யார் கொடுத்தார்கள்? கேரள மின்வாரியம் மின்சாரம் வழங்க தடையில்லா சான்று வழங்கியிருக்க வேண்டும், தமிழ்நாட்டுக்குள் மின்சார இணைப்பை கேரளா எப்படி கொடுத்தது? இன்னும் விடை தெரியாத பல கேள்விகள் இருக்கிறது. தமிழகத்தின் மைல் கல் பிடுங்கி எறியப்பட்டு அந்த இடமும் தற்போது இன்னொரு கட்டிடத்திற்கு தயாராகி வருகிறது. . ஆனால்
கட்டிடம் கட்டப்பட்ட இடம் கேரளாவிற்கு சொந்தம் என கட்டிட உரிமையாளரின் ஆதரவாளர்கள் வரிந்து கட்டிக்கொண்டு வருகிறார்கள். எல்லைக்கோட்டிலிருந்து 50 மீட்டர் தமிழ்நாட்டுக்கு உள்ளே உள்ள பகுதி எப்படி கேரளாவிற்கு சொந்தம் என நாங்கள் கேள்வி எழுப்பிய போது குறிப்பிட்ட ஒரு பகுதியை கையைக்காட்டி அதெல்லாம் கேரளா பட்டா தான் என்று எங்களிடம் சொல்கிறார்கள். அதிர்ச்சி என்னவென்றால் அவர்கள் கைக்காட்டிய பகுதி எல்லைக்கோட்டிலிருந்து சுமார் 500 மீட்டருக்கு அப்பால் இருந்தது.
கடுமையான போராட்டங்கள் இல்லையெனில் தேவிகுளம், பீர்மேடு, மூணாறு போல தாளூரும் இனி நமக்கில்லை என்ற நிலை வந்துவிடும்.
மிகப்பெரும் போராட்டங்களை முன்னெடுக்காமல் விட்டால் தாளூர் கைநழுவிப்போகும் என்பது மட்டும் உறுதி.

தமிழ்நாடு அரசு கவனிக்குமா? இல்லை மௌனம் காக்குமா?

Leave a Response