வாகா – விமர்சனம்

இந்திய எல்லையோர பாதுகாப்புப் படை வீரர் ஒரு பாகிஸ்தானியப் பெண்ணைக் காதலிக்கிறார் என்றாலே அடுத்து என்ன நடக்கும் என்பதைச் சொல்ல வேண்டியதே இல்லை. படத்தில் காதலோடு சேர்த்து தேசபக்தியையும் ஊட்டியிருக்கிறார்கள்.

எல்லைப் பாதுகாப்புப் படை வீரர் வேடத்துக்குப் பொருத்தமாக தன்னைத் தயார் செய்திருக்கிறார் விக்ரம்பிரபு. பாகிஸ்தானிய பெண் வேடத்துக்கேற்ப வெள்ளையாக இருக்கிறார் நாயகி ரன்யா ராவ். காஷ்மீர் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் மொத்தப் படத்தையும் எடுத்திருக்கிறார்கள்.

ஒளிப்பதிவாளர் சதீஷ்குமார் புண்ணியத்தில் காட்சிகள் கண்களுக்கு இதமாக இருக்கின்றன. இமான் இசையில் பாடல்கள் சுமார் ரகம்.

நீங்கள் கூலிக்காக இராணுவத்தில் சேருகிறீர்கள் என்று பாகிஸ்தான் இராணுவ வீரர் சொல்கிறார். இராணுவத்தில் சேர்ந்தால் மது இலவசமாகக் கிடைக்கும் என்று நாயகனின் அண்ணனாக நடித்திருக்கும் சத்யன் சொல்கிறார். இரண்டுக்கும் என்ன வேறுபாடு என்று இயக்குநர்தான் சொல்லவேண்டும்.

பாகிஸ்தானில் இந்தியர்களைச் சித்ரவதை செய்வதற்கென்றே ஓரிடம் இருக்கிறது என்பதும் பாகிஸ்தானியர்கள் எல்லாம் கொலைவெறி பிடித்தவர்கள் என்பதும் தமிழ் சினிமா அரைத்துச் சலித்த பழைய மாவு.

பாகிஸ்தானுக்குள்ளயே போய் அந்த இராணுவத்தையே துவம்சம் செய்துவிட்டு பொண்ண தூக்கிகிட்டு வர்றீங்க என்றதும் புல்லரித்துப் போய்ப் இந்தக் கதையில் நடிக்க விக்ரம்பிரபு ஒப்புக்கொண்டார் போலும். இனிமேலாவது கதைகளைத் தேர்ந்தெடுப்பதில் அவர் கவனமாக இருக்கவேண்டும்.

ஹரிதாஸ் படமெடுத்த இயக்குநரின் படம் என்று நம்பிப் போனால் ஏமாற்றம்தான்.

Leave a Response