நமது – திரைப்பட விமர்சனம்

ஒரு நடுத்தர வர்க்கக் குடும்ப உறுப்பினர்களின் மனநிலைகளைத் தனித்தனியாகக் காட்டும் படமே நமது.

மோகன்லால், ஒரு பல்பொருள் அங்காடியில் உதவி மேலாளர். மேலாளர் பொறுப்புக்கு உயர்வதற்காக அவர் செய்யும் ஒரு செயலால் என்னென்ன நேருகிறது?

கவுதமி. ஒரு குடும்பத் தலைவி, கணவன் வேலைக்கும் மகன் கல்லூரிக்கும், மகள் பள்ளிக்கும் போனபிறகு அவருடைய வேலைகள் மற்றும் மன உணர்வுகள்,

கல்லூரியில் படிக்கும் விஷ்வாந்த், ஆசிரியருக்கே சொல்லிக் கொடுக்கும் திறமைசாலி. அவருக்குக் காதல் வந்ததும் எப்படியெல்லாம் மாறுகிறார்?

பள்ளியில் படிக்கும் மாணவி ரைனாராவ், பள்ளிக்குப் போவதற்கு முன் பல நல்ல காரியங்களைச் செய்வது மட்டுமின்றி ஒரு ஏழைக் குழந்தையைப் படிக்க வைக்கப் போராடுகிறார். திடீரென அச்சிறுவன் காணாமல் போனால். அச்சிறுமி என்ன செய்வாள்?

இப்படி வெவ்வேறு சிக்கல்களை உருவாக்கி அதற்கான தீர்வை மத்தியதர வர்க்க மனநிலை கொண்டு தேடுவதில் இயக்குநர் சந்திரசேகர் எலட்டி வெற்றி பெற்றிருக்கிறார்.

தம் குடும்ப நலனுக்காக தப்பான செயலைச் செய்துவிட்டு அதை எண்ணிப்புலம்புவதோடு நின்று விடாமல் மனசாட்சிக்குக் கட்டுப்பட்டு அச்சிக்கலைச் சரிசெய்யப் போராடும் நடுத்தரக்குடும்பத் தலைவர் வேடத்துக்குச் சரியாகப் பொருந்தியிருக்கிறார் மோகன்லால்.

நடுத்தரக்குடும்பத்தின் தலைவியின் மன உணர்வுகளை அழகாக வெளிக்கொணர்ந்திருக்கிறார் கவுதமி. குடும்பம்தான் தன் சந்தோசம் என்று முழுமையாக நம்பி அவர்களுக்காகவே உழைத்து, அவர்களின் நன்மை தீமைகளைச் சிந்தித்து வாழும் பெண்ணாக இருக்கிறார். இந்தப் பாத்திரப் படைப்பை ஆண்கள் மிகவும் விரும்புவார்கள். பெண்ணுரிமையாளர்கள் கொந்தளிப்பார்கள். ஆனால் ஐயத்துக்கிடமின்றி எல்லாத் தரப்பினரும் கவுதமியின் நடிப்பைப் பாராட்டுவார்கள்.

நான்கு வெவ்வேறு பாத்திரங்களின் வழியே திரைக்கதையை நகர்த்தும் உத்தி நன்றாக இருந்தாலும், தனித்தனியே இவ்வளவு நல்ல குணங்களைக் கொண்டவர்கள் வீட்டுக்குள் அப்படி இருக்கமாட்டார்களா? வீட்டுக்குள் அவர்கள், குறிப்பாக மோகன்லால் அப்படி இருந்தால் கவுதமி இவ்வளவு புலம்பியிருப்பாரா? என்கிற கேள்வி வருகிறது.

திரைக்கதை ஓட்டம் மெதுவாக இருப்பதோடு, சென்னையில் வசிப்பதாகச் சொல்லிக்கொண்டு வேறு மாநிலத்தில் படகுசவாரி போகும் கவுதமி, ஊர்வசி, மோகன்லாலின் தமிழ், அவர் ஓட்டும் வண்டியின் ஆந்திர பதிவு எண் உள்ளிட்டு பல சின்னச்சின்ன விசயங்கள் படத்தை மனதுக்கு நெருக்கமாக்கத் தவறுகின்றன.

தன்னுடைய நடிப்பால் படம் முழுக்க நிறைந்திருக்கும் கவுதமியோடு மோகன்லால், விஷ்வாந்த், ரைனாராவ், ஹனிஷா ஆம்ரோஷ், சிறுமி ரைனாராவ் உட்பட படத்தில் உள்ளவர்கள் நடிப்பினால் படம் பேசப்படும். ஆனால் வெற்றிக்கு அது மட்டுமே போதுமா?

Leave a Response