பொதுவாக சினிமாவுக்கு எதிராக குரல் கொடுப்பது மக்களுக்கு எந்த விதத்திலும் உதவி செய்திராத சில அரசியல் கட்சிகளும், வேலையில்லாமல் சுற்றிக்கொண்டு இருக்கும் சில சிறு அமைப்புகளும் தான். இவர்கள் சினிமாவை சகட்டுமேனிக்கு புரட்டியெடுப்பதற்காக, நல்ல பிள்ளைகள் போல விவசாயத்தை தூக்கி பிடிப்பது வழக்கம் தான்..
விவசாயம் செத்துக்கொண்டு இருக்கிறது.. தமிழர்கள் சினிமாவால் சீரழிகிறார்கள் என்கிற குற்றச்சாட்டை இவர்கள் தொடர்ந்து வைத்துக்கொண்டே இருப்பார்கள்.. சாட்சிக்காரன் காலில் விழுவதைவிட சண்டைக்காரன் காலிலேயே விழுந்துவிட்டால்..? விஷால் அதைத்தான் செய்து வருகிறார்..
ஆம்.. சமீப காலமாக விவசாயப் பெருமக்களுடன் தன்னை ஐக்கியப்படுத்திக்கொண்டு வருகிறார்.. அவர்களுக்கு ஏதாவது ஒருவழியில் சில உதவிகளை செய்தும் வருகிறார். இன்று கூட சென்னையில் விவசாயிகள் அமைப்பு ஒன்று விஷாலுக்கு நன்றி தெரிவிக்கும் கூட்டத்தை அவரது மிகப்பெரிய பிளக்ஸ் படத்தை முன் வைத்து நடத்தி இருக்கிறார்கள்.
ஆக விஷால் என்றால் விவசாயி என அவர்கள் மனதில் பதியவைத்துவிட்டால் பின் விவசாயிகள் தரப்பில் சினிமாவுக்கு எதிர்ப்புக் குரல் ஏது..? இதுதான் விஷாலின் தந்திரம் என்கிறார்கள் விவசாயிகளை சினிமாக்காரர்களுக்கு எதிராக தூண்டிவிட்டு குளிர்காயமுடியாமல் போனவர்கள்.