எங்கள் வேட்பாளர்களை வளைக்கப் பார்க்கிறார்கள் – சீமான் அதிரடி குற்றச்சாட்டு

சட்டமன்றத் தேர்தலில்,  234 தொகுதிகளிலும் தனித்து தனது கட்சியை களமிறக்கி தீவிர பரப்புரையில் ஈடுபட்டுவருகிறார்  நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான். அவரிடம் ஒரு பேட்டி,

” இந்த தி.மு.கவும் அ.தி.மு.கவும் எங்களை முடிந்தளவு ஓரங்கட்டப் பார்க்கிறார்கள். எங்கள் கட்சிக்கு சிறப்பான எதிர்காலம் இருக்கிறது. இந்தத் தேர்தலோடு மக்கள் நலக் கூட்டணி காணாமல் போய்விடும். நாடாளுமன்றத் தேர்தலில் என்ன செய்வது எனத் தெரியாமல் தவிக்கிறது பா.ம.க. வரவிருக்கிற நாடாளுமன்றத் தேர்தலிலும் தனித்துதான் போட்டியிடுவேன். எங்கள் கட்சி சார்பில் இருபது ஆண் வேட்பாளர்கள், இருபது பெண் வேட்பாளர்கள் களமிறங்கப் போகிறார்கள்” என்ற சீமானிடம் தொடர்ந்து பேசியதிலிருந்து….
தேர்தல் கருத்துக்கணிப்புகளை கவனித்தீர்களா?

எல்லாவற்றையும் கவனித்துக் கொண்டுதான் இருக்கிறேன். ஒவ்வொரு தொலைக்காட்சிக்கும் வர்த்தகம் இருக்கிறது. முன்பெல்லாம் ஒரு பத்திரிகையாளன் நேர்மையாக எழுதி, புரட்சி பண்ணுவான் என்பதை சினிமாக்களில் பார்த்திருக்கிறோம். இப்போதெல்லாம், ‘ லஞ்சத்தை ஒழிக்கணும், மதுவை ஒழிக்கணும், நாடு சரியில்லை’ என்று கருத்துக்களை எழுதுகிறார்களே தவிர, அதற்காகப் போராட வருகிறவர்களை வரவேற்கும் நோக்கம் ஊடகங்களுக்கு இருப்பதாகத் தெரியவில்லை. தி.மு.க வரும் இல்லாவிட்டால் அ.தி.மு.க வரும் என்கிறார்கள். இவர்கள் வர வேண்டுமா? என்பதுதான் பிரதான கேள்வி. இவர்கள் மாறி மாறி வருவதை மக்கள் விரும்பவில்லை. புதிய சிந்தனையோடு வரக்கூடிய புதியவர்களைத்தான் மக்கள் விரும்புகிறார்கள்.

அனைத்து தொகுதிகளிலும் தீவிரமாக பரப்புரை செய்கிறீர்கள். களநிலவரம் எப்படி இருக்கிறது?

மிகுந்த நம்பிக்கையோடு இருக்கிறேன். அரசியலை தூய்மைப்படுத்தும் நோக்கத்தில் ஒரு தலைமுறை வலுவாக தயாராகி வருகிறது. தி.மு.கவும் அ.தி.மு.கவும் பணத்தை மட்டுமே களமிறங்கியிருக்கிறார்கள். இவர்களின் பணபலத்தையும் மீறித்தான் ஜனநாயகத்தைக் காப்பாற்ற நினைக்கிறோம். இது ஒரு போர். பணத்தை முதலீடு செய்து பெரும் பணத்தை ஈட்டுகிற நிலையில்தான் கருணாநிதி, ஜெயலலிதா இருக்கிறார்கள். ஆட்சிக்கு வந்தாலும் இவர்களால் நேர்மையாக இருக்கவே முடியாது. பிரசாரத்தில்கூட, ‘இந்த ஐந்து ஆண்டுகளில்தான் அனைத்தும் நடந்ததுபோல’ தி.மு.க பேசுகிறது.

இதுவே மக்களை ஏமாற்றும் செயல்தான். நாங்கள் 2000 என்று வைத்திருந்ததை, அவர்கள் ஆறாயிரமாக மாற்றிவிட்டார்கள் என தி.மு.க சொல்கிறது. இதுவா வளர்ச்சி? இதுவா மக்களைக் காக்கும் லட்சணம்? வளர்ச்சியைத் தடுக்கும் வேர் எங்கே இருக்கிறது என்றுதான் பார்க்க வேண்டும். இப்போது திராவிடத்தின் மிச்ச சொச்சமாக தி.மு.க மட்டும்தான் இருக்கிறது. இத்தனை ஆண்டுகளில் பெரியார் பிறந்தநாளையோ, அண்ணா பிறந்தநாளையோ எழுச்சி நாளாக அறிவித்தார்களா? விவசாயக் கடனைத் தள்ளுபடி செய்கிறோம் என்கிறார்கள். அந்த விவசாயியைக் கடனாளி ஆக்கியது யார்?யார் வேண்டுமானாலும் கடனாளியாக இருக்கலாம். விவசாயி மட்டும் இருக்கக் கூடாது. எல்லாவற்றையும் இவர்கள் செய்துவிட்டு, அதைச் செய்வோம், இதைச் செய்வோம் என நாடகமாடுகிறார்கள்.

அ.தி.மு.கவின் இலவச செல்போன் அறிவிப்பு எடுபடுமா?

இங்கு எந்த மக்கள் செல்போன் வேண்டும் என்று கேட்டார்கள்? கல்விக்கான போராட்டம் அதிகரித்து வருகிறது. கல்வியை காசு கொடுத்து வாங்க வேண்டிய நிலைக்கு உருவாக்கி, அதில் போட்டியை உருவாக்கிவிட்டார்கள். அறிவை வியாபாரமாக்கிவிட்டார்கள். பல லட்ச ரூபாய்க்கு தண்ணீர் வாங்கிக் குடிக்க வேண்டிய நிலைமைக்கு ஆளாகிவிட்டோம். கல்வியைக் கடன் வாங்கிப் படிக்க வைத்ததே இவர்கள்தான். இப்போது கல்விக்கடன் தள்ளுபடி என்கிறார்கள். அடிப்படையே தவறாக இருக்கிறது. ஆட்சிமுறையையே தூக்கி எறிய வேண்டும்.

நீங்கள் போட்டியிடும் கடலூரில் வெற்றி வாய்ப்பு எப்படி இருக்கிறது?

உறுதியாக வெல்வேன். மக்களுக்காக நிற்கிறேன். மக்களை மட்டுமே நம்பி நிற்கிறேன்.

மதுவுக்கு எதிராக கள்ளை பானமாக அறிவிக்கும் உங்கள் முடிவுக்கு வரவேற்பு கிடைக்கிறதா?

பனை, தென்னை தொழிலாளர்கள் மத்தியில் மிகப் பெரிய வரவேற்பைப் பெற்றிருக்கிறது. கள் என்பது மதுவே கிடையாது. அது ஒரு மூலிகைச் சாறு. அருகம்புல் சாறு உடம்புக்கு நல்லது என்கிறார்கள். அதைவிட பெரிய புல் பனை, தென்னை. உடல்நலத்திற்கு ரொம்ப நல்லது. மக்கள் குடித்துவிட்டுப் போகட்டும். விவசாயி வாழ்வான். கள் பானத்தை மிகப் பெரிய போதையாக எடுத்துக் கொள்ள முடியாது.

உங்கள் வேட்பாளர்களை வளைக்கும் முயற்சிகள் நடப்பதாக செய்திகள் வருகிறதே?

உண்மைதான். எங்கள் கட்சி வேட்பாளர்களிடம் தி.மு.க, அ.தி.மு.க நிர்வாகிகள் சிலர் பேசும்போது, ‘ நீங்கள் கொஞ்சம் ஒதுங்கி நில்லுங்கள். நாங்கள் பார்த்துக் கொள்கிறோம்’ என்கிறார்கள். எங்கள் வேட்பாளர்களும், ‘உங்களை வச்சு செய்றதுக்காகத்தான் களத்தில் நிற்கிறோம். நீங்க தள்ளி நில்லுங்க’ எனச் சிரித்தபடியே சொல்கிறார்கள். பொருளாதார பின்னடைவு மட்டும்தான் எங்களை நெருக்குகிறது. நாம் தமிழர் வேட்பாளர்களிடம் ஒன்றை மட்டும்தான் சொல்வேன். ‘ ஒருத்தரையாவது பார்த்துக் கும்பிடு. உனக்காகத்தான் மக்கள் காத்துக் கிடக்கிறார்கள்’ என்று சொல்கிறேன். இது வழக்கமான தேர்தல் அல்ல. பன்னெடுங்காலமாக அழுத்தி வைக்கப்பட்ட மக்களின் உணர்வுதான் வெடித்துக் கிளம்புகிறது.

Leave a Response