அதிமுக தேர்தல் அறிக்கையில் 297 வாக்குறுதிகள் – முக்கியமான 21 இங்கே

தமிழ்நாடு சட்​டப்​பேர​வை​யின் 234 தொகு​தி​களுக்​கும் ஏப்​ரல் 23 ஆம் தேதி ஒரேகட்​ட​மாகத் தேர்​தல் நடை​பெறுகிறது. இந்​நிலை​யில்,அதிமுகவின் தேர்​தல் அறிக்​கையை அதி​முக பொதுச்செய​லா​ளர் பழனிச்​சாமி நேற்று வெளி​யிட்​டார். அதனைக் கட்​சி​யின் துணைப் பொதுச்செய​லா​ளர் கே.பி.முனு​சாமி பெற்​றுக்கொண்​டார்.மொத்​த​மாக அதில் 297
வாக்குறுதிகள் இடம்​பெற்​றிருக்​கின்​றன.

இதுகுறித்து எடப்பாடி கூறும்போது, அதிமுக தேர்தல் அறிக்கை தயாரிக்கும் குழுவினர் தமிழ்நாடு முழுவதும் சென்று, அனைத்துத் தரப்பு மக்களையும் சந்தித்து, அவர்களின் கோரிக்கைகளைக் கேட்டறிந்தனர். அதன் அடிப்படையில், எங்களால் நிறைவேற்றக்கூடிய திட்டங்களைத் தேர்தல் வாக்குறுதிகளாக அளித்திருக்கிறோம் என்றார்.

தேர்தல் அறிக்கையின் முக்கிய அம்சங்கள்…

1. ஒவ்வொரு குடும்பத்திற்கும் ரூ.10,000 சிறப்பு உதவித்தொகை

2. குலவிளக்கு திட்டத்தின் மூலம் அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும், ஒவ்வொரு மாதமும் உதவித்தொகையாக ரூ.2,000 வழங்கப்படும்.

3. மகளிரைப் போல,ஆண்களுக்கும் கட்டணமில்லா பேருந்து பயணத் திட்டம்.

4. வீடு இல்லாத குடும்பங்களுக்கு வீடு வழங்கும் ‘அம்மா இல்லம் திட்டம்’.

5. 100 நாட்கள் வேலைவாய்ப்புத் திட்டம் 150 நாட்களாக உயர்த்தப்படும்.

6. வேலைக்குச் செல்லும் மகளிருக்கு ரூ.25,000 மானியத்துடன் 5 இலட்சம் மகளிருக்கு அம்மா இருசக்கர வாகனங்கள் வழங்கப்படும்.

7. முதியோர் உள்ளிட்டவர்களுக்கான ஓய்வூதியங்கள் ரூ.2,000 ஆக உயர்வு.

8. வங்கிகளில் கல்விக் கடன் பெற்று, வேலைவாய்ப்பு கிடைக்காமல், கடன் தவணையைச் செலுத்த முடியாமல் உள்ளவர்களின் கல்விக் கடனை தள்ளுபடி செய்யும் வகையில் அத்தொகையை அரசே ஏற்கும்.

9. வாழ்வாதார உதவியாக,ஆண்டுக்கு 3 காஸ் சிலிண்டர்கள் வழங்கப்படும்.

10. ஜல்லிக்கட்டில் வீரர்கள் காளையைப் பிடிக்கும்போது அசம்பாவிதம் ஏற்பட்டு உயிரிழக்க நேரிட்டால்,அவர்களது குடும்பத்தினருக்கு ரூ.10 இலட்சம் வழங்கப்படும்.படுகாயமடைந்தவர்களுக்கு மருத்துவ சிகிச்சைக்காக ரூ.2 இலட்சம் வழங்கப்படும்.

11. இஸ்லாமிய, கிறிஸ்தவ மற்றும் ஏனைய சிறுபான்மை வகுப்பைச் சேர்ந்த மகளிர், சுயதொழில் தொடங்குவதற்கு வட்டியில்லாக் கடன் வழங்கப்படும்.

12. மாற்றுத்திறனாளிகள் கூட்டுறவு வங்கிகளில் வாங்கிய கடன் தள்ளுபடி செய்யப்படும்.

13. வேலைவாய்ப்பு அலுவலகங்களில் பதிவு செய்து,வேலைக்காக காத்திருக்கும் பட்டதாரி இளைஞர்கள் மற்றும் இளம்பெண்களுக்கு மாதந்தோறும் ரூ.2,000; பிளஸ் 2 வரை படித்து வேலைவாய்ப்பு அலுவலகங்களில் பதிவு செய்துள்ளவர்களுக்கு மாதந்தோறும் 1,000 ரூபாயும் உதவித்தொகையாக வழங்கப்படும்.

14. மீன்பிடித் தடைக் காலங்களில் மீனவர்களுக்கு, தற்போது வழங்கப்பட்டு வரும் நிவாரண உதவித்தொகை 8,000 ரூபாயில் இருந்து 12,000 ரூபாயாக உயர்த்தி வழங்கப்படும்.

15. ஒவ்வொரு ஆண்டும் தைப்பொங்கல் அன்று வழங்கப்பட்டு வரும் பொங்கல் தொகுப்புடன் ரூ.1,000 ரொக்கமும் வழங்கப்படும்.

16. கைத்தறி நெசவாளர்களுக்கு தற்போது வழங்கப்பட்டு வரும் விலையில்லா மின்சாரம் 300 யூனிட்டில் இருந்து 450 யூனிட்டாகவும், விசைத்தறி நெசவாளர்களுக்கு விலையில்லா மின்சாரம் 1000 யூனிட்டில் இருந்து 1400 யூனிட்டாகவும் உயர்த்தி வழங்கப்படும்.

17. நகரப் பகுதிகளில் நடைபாதை ஓரமாக கடை வைத்திருக்கும் சிறுவியாபாரிகள், கூட்டுறவு வங்கிகளில் வாங்கிய கடன் தள்ளுபடி செய்யப்படும்.

18. ஆட்டோ ஓட்டுநர்கள் சங்கத்தில் பதிவு செய்து,சொந்த ஆட்டோ இல்லாதவர்கள்,புதிய ஆட்டோ வாங்குவதற்கு ரூ.75,000 மானியமாக வழங்கப்படும்.

19. ஆண்டுதோறும் தீபாவளி பண்டிகைக்கு, குடும்பஅட்டை வைத்துள்ள அனைத்துப் பெண்களுக்கும் தரமான, விலையில்லாச் சேலையும், ஆண்களுக்கு தரமான வேட்டியும் வழங்கப்படும்.

20. அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு குளிர்பதனப் பெட்டி (ஃபிரிட்ஜ்) விலையில்லாமல் வழங்கப்படும்.

21. தமிழ்நாட்டில் மதுவிலக்கை அமல்படுத்தும் நோக்கில்,படிப்படியாக மதுபானக் கடைகளை மூடுவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்பது உள்ளிட்ட 297 வாக்குறுதிகள் இந்தத் தேர்தல்அறிக்கையில் இடம்பெற்றுள்ளன.

Leave a Response