மொத்தக் கட்சிக் கூட்டணியை இந்த ஒத்தக் கட்சி மோதி வெல்லும் – சீமான் நம்பிக்கை

வேலூர் மாவட்டத்தில் போட்டியிடும் நாம் தமிழர் கட்சி வேட்பாளர்களுக்கு ஆதரவாக அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் நேற்று பரப்புரையில் ஈடுபட்டார்.அப்போது, இந்தத் தேர்தலில் நீங்கள் வழக்கம்போல் வாக்கு செலுத்திவிட்டு கடந்து செல்லாமல், வரலாறு தந்த கடமையாக உணர்ந்து வாக்களிக்க வேண்டும். கூட்டணிக்கு வந்தால் பணம், துணை முதலமைச்சர் பதவியும் தருவதாகக் கூறினார்கள். நாங்கள் செல்லவில்லை என்றார்.

பின்னர் அவர், செய்தியாளர்களிடம் பேசினார்.

அப்போது அவர் கூறியதாவது….

கனிமொழி மாநில அரசியலில் வருவதற்கும் அவர்கள் வெற்றிபெறுவதையும் யார் எதிர்ப்பார்கள் என்று உங்களுக்குத் தெரியும். கருணாநிதியின் மகள் கனிமொழிக்கு சீட் கொடுக்காதவர்கள் எப்படி கம்யூனிஸ்ட் கட்சிக்கு கொடுப்பார்கள்? அவர்களும் ஒரு சீட் அதிகமாக கொடுங்க. கொடுங்க என்று கேட்டார்கள். கனிமொழி ஆளுமையுள்ள பெண். மாநில அரசியலுக்கு வரும்போது உதயநிதியை முன்னிறுத்த இடையூறாக இருக்கும் என்று நினைப்பார்கள். எனவே, அவரை வரவிட மாட்டார்கள். என்னதான் இருந்தாலும் அவர் உடன்பிறந்த குடும்பத்து பெண் இல்லை என்று நினைப்பார்கள்.

தவாக தலைவர் வேல்முருகன் ஒரு நிலைப்பாட்டை எடுத்துள்ளார். அதற்கு கருத்துச் சொல்ல விரும்பவில்லை. அவர் இப்போதாவது சொல்கிறாரே என்று பாராட்ட வேண்டும். ஒரு சீட்டுக்காக சரணடைந்து சகித்துப் போகாமல் பேசியுள்ளாரே என்று பாராட்டுங்கள். அய்யா இராமதாசை மக்கள் கைவிடுவார்கள் என்று யாரும் நினைக்கவில்லை. நானெல்லாம் அவரது பிள்ளை. 85 வயதில் தமிழைத் தேடி யாராவது நடப்பார்களா? தமிழ்நாட்டில், சமூகநீதியை அவரைத்தாண்டி யாராவது பேசி இருக்கிறார்களா? இந்த நாட்டில் ஈ.வெ.ரா என்ன செய்தார்?இந்த நாட்டில் வகுப்புவாரி பிரதிநிதித்துவம் பேசுவது இராமதாசு மட்டும்தான். அவரது கனவை பிள்ளையாக நான் செய்கிறேன். இந்த வயதிலும் இந்த நாட்டுக்கு ஏதாவது செய்யவேண்டும் என்ற அவரது எண்ணத்தைப் பாராட்ட வேண்டும். இன்றும் அவர் உட்கார்ந்து பேசி இயங்குகிறார் இல்லையா?

தமிழ்நாட்டில் மொத்தக் கட்சிக் கூட்டணியை இந்த ஒத்தக் கட்சி மோதி வெல்லும்.மொத்தத்தில் வீரம் வேண்டும் சுடலைமாடா.

ஒன்றிய அரசின் தனியார்மயம், தாராளமயம் உலகமயத்தில் ஒவ்வொரு நாட்டையும் சார்ந்திருந்ததால் இன்று எரிகாற்று தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.எரிகாற்று உற்பத்தியில் தன்னிறைவு ஏற்படுத்த வேண்டும் என்று சொல்லும் என்னை நீங்கள் தேர்ந்தெடுக்கவில்லை. பேரிடர் காலத்தில் எரிகாற்று உருளை இல்லை, எரிபொருள் தட்டுப்பாடு. பெட்ரோல், டீசல் இல்லாவிட்டால் வண்டியை விட்டுவிட்டுப் போகவேண்டியதுதான். நான் கூட மிதிவண்டியில் ஓட்டு கேட்கப் போகலாம் என்று இருக்கிறேன்.

இவ்வாறு அவர் கூறினார்.

Leave a Response