எடப்பாடி அன்புமணி கூட்டணி அமைந்தது எப்படி? எவ்வளவு தொகுதிகள்?

தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் இன்னும் சில மாதங்களில் நடைபெறவுள்ளது. தேர்தலைச் சந்திக்க கட்சிகள் தயாராகி வருகின்றன. இந்த நிலையில், புதுக்கோட்டை மற்றும் திருச்சியில் நடந்த நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா 2 நாள் பயணமாக திருச்சிக்கு கடந்த 4 ஆம் தேதி வந்தார். அன்றைய தினம் புதுக்கோட்டையில் நடந்த நிகழ்ச்சியை முடித்துவிட்டு திருச்சியில் தங்கினார். அங்கு பாஜகவைச் சேர்ந்த முக்கிய நிர்வாகிகளுடன் 2 மணி நேரத்துக்கும் மேலாக ஆலோசனை நடத்தினார்.

அப்போது, கூட்டணி அமைப்பதில் அதிமுக மெத்தனமாக செயல்பட்டு வருகிறது. எடப்பாடி பழனிச்சாமியின் பிடிவாதத்தால் சில கட்சிகள் கூட்டணிக்குள் வராமல் இருக்கக்கூடிய நிலை உள்ளது என்று பாஜக நிர்வாகிகள் குற்றச்சாட்டுகளை அடுக்கினர். இதையடுத்து, ஒன்றிய அமைச்சர் பியூஸ் கோயல், அதிமுக முன்னாள் அமைச்சர் வேலுமணியை திருச்சிக்கு வருமாறு உத்தரவிட்டாராம். அதன்படி, எஸ்.பி.வேலுமணி திருச்சிக்குச் சென்று அமித்ஷாவை இரண்டு முறை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார்.

அப்போது, அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமியை கைபேசியில் தொடர்பு கொள்ளுமாறு அமித்ஷா கூறினார்.அதன்படி, தமிழ்நாடு பாஜக நிர்வாகி ஒருவர், தனது கைபேசியில் எடப்பாடியைத் தொடர்பு கொண்டார். பின்னர் அந்த அழைப்பை ஒலிபெருக்கியில் போட்டுள்ளார். அப்போது அமித்ஷா பேசியதை, எடப்பாடிக்கு தமிழில் மொழி பெயர்த்து கூறப்பட்டது.

அதில்,அதிமுக, பாஜக கூட்டணியில் யார் யாரைச் சேர்க்க வேண்டும், எவ்வளவு தொகுதிகள் ஒதுக்க வேண்டும், சில கட்சிகளுக்கு குறைந்தளவு தொகுதி ஒதுக்கி மாநிலங்களவை உறுப்பினர் கொடுத்தால் போதுமானது உள்ளிட்ட விசயங்களை நான் பார்த்துக் கொள்கிறேன். நான் சொல்வதை மட்டும் நீங்கள் செய்தால் போதும்’ என்று அமித்ஷா கூறியதாக கூறப்படுகிறது.

அதோடு, அன்புமணி உங்களைச் சந்தித்து கூட்டணி குறித்துப் பேசுவார் என்றும் தெரிவித்துள்ளார்.
அதைத்தொடர்ந்து அன்புமணியிடம்,நீங்கள் கூட்டணிக்கு வாருங்கள். உங்களுக்குத் தேவையானதைச் செய்து தருகிறோம் என்று அமித்ஷா தெரிவித்ததாக தகவல் வெளியாகி உள்ளது.

அதனடிப்படையில்தான் எடப்பாடி பழனிச்சாமியை, அன்புமணி நேற்று காலை சந்தித்துப் பேசினார். அப்போது அதிமுக கூட்டணியில் பாமக இணைவது உறுதி என அறிவிக்கப்பட்டது. இதில் அன்புமணி தரப்பினருக்கு 17 தொகுதிகள் மற்றும் ஒரு மாநிலங்களவை உறுப்பினர் பொறுப்பு என உறுதியளிக்கப்பட்டதாகத் தெரிகிறது.

அமித்ஷா உத்தரவுப்படி ஆடும் பொம்மைகளாக எடப்பாடி பழனிச்சாமியும் அன்புமணியும் மாறிவிட்டது அவ்விருவரின் ஆதரவாளர்களிடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்தியிருப்பதாகச் சொல்லப்படுகிறது.

Leave a Response