தமிழகத்தைத் தமிழர்தான் ஆள வேண்டும் – சீமான் சிறப்புப் பேட்டி

நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் “தினமணி’ க்கு அளித்த பேட்டி

நாம் தமிழர் கட்சி சட்டப்பேரவைத் தேர்தலில் 234 தொகுதிகளிலும் போட்டியிடுவதன் காரணம் என்ன?

கட்சிக்கு நல்ல ஆதரவு உள்ளது. குறிப்பாக, இந்தத் தலைமுறை தமிழ் இளைஞர்களிடம் அமோக வரவேற்பைக் காண முடிகிறது. எங்களது திருச்சி மாநாட்டில் 2 லட்சத்துக்கும் அதிகமான இளைஞர்கள் கூடியதே இதற்கு சிறந்த அத்தாட்சி. கல்லூரிப் படிப்பை முடித்து அரசியல் கனவுடன் வெளிவரும் இளைஞர்களுக்கு சரியான களமாக நாம் தமிழர் கட்சி மட்டுமே இருக்கிறது. எங்கள் கட்சியைத் தமிழகத்தின் குக்கிராமங்கள் வரை கொண்டு செல்வதற்காகத்தான் இந்த சட்டப்பேரவைத் தேர்தலில் 234 தொகுதிகளிலும் தனித்துப் போட்டியிடுகிறோம்.

நீங்கள் ஏன் 2011 சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிட முயற்சிக்கவில்லை?

ஓர் இன அழிப்பில், போராட்டக் களத்தில் உதயமானதுதான் நாம் தமிழர் கட்சி. தொடங்கிய சில நாள்களிலேயே போராட்டத்தில் கைது செய்யப்பட்டு, சிறை செல்ல நேரிட்டது. ஐந்து மாதங்கள் கழித்து சிறையிலிருந்து வெளிவந்த பிறகு, கட்சியின் கட்டமைப்பில் கவனம் செலுத்த வேண்டிய சூழல் ஏற்பட்டது. அதற்குள் 2011 தேர்தல் வந்துவிட்டது. 234 தொகுதிகளிலும் போட்டியிட்டிருக்க முடியாது. ஒரு சில தொகுதிகளில் மட்டுமே போட்டியிட்டிருக்க முடியும்.

முதல் தேர்தலிலேயே தனித்துப் போட்டி என்பது சாத்தியமா?

நாம் தமிழர் கட்சி என்பது வளரக் கூடிய பேரியக்கம். ஒரு மாற்றுத் தத்துவத்தை முன்னிறுத்தித் தூய உள்ளத்தோடு அரசியல் செய்ய வரும்போது, ஏற்கெனவே உள்ள சக்திகளோடு நாம் இணைந்து வேலை செய்ய முடியாது. எந்த அரசியலை வெறுக்கிறோமோ, அதோடு எப்படி கூட்டு வைக்க முடியும்? எனவேதான், துணிந்து தனித்துப் போட்டியிடுகிறோம். சரியானதைச் சொன்னால் மக்கள் நிச்சயம் ஏற்பார்கள்.

அவர்கள் அழைப்பு விடுத்தும்கூட நீங்கள் ஏன் மக்கள் நலக் கூட்டணியில் சேரவில்லை?

தமிழகத்தில் அதிமுக ஆட்சியை அகற்ற வேண்டும் என்றால், மக்கள் நலக் கூட்டணிக்கு சீமான் வந்திருக்க வேண்டும் என அவர்கள் கூறுகிறார்கள். தேர்தலில் மக்கள் நலக் கூட்டணியைவிட நாம் தமிழர் கட்சி அதிக வாக்குகளைப் பெறும். அப்படிப் பெறாவிட்டால் நான் கம்யூனிஸ்ட் கட்சியில் சேர்ந்துவிடுவேன் என்று ஏற்கெனவே கூறியிருக்கிறேன். அதிமுக தயவில் கம்யூனிஸ்ட் கட்சிகள் அனுபவித்து வரும் இரண்டு மாநிலங்களவை உறுப்பினர் பதவியை ராஜிநாமா செய்துவிட்டுத்தான், ஜெயலலிதாவைத் தூக்கி எறிவது பற்றி மக்கள் நலக் கூட்டணி பேச வேண்டும். டிராஃபிக் ராமசாமியைவிடக் குறைந்த வாக்குகளைப் பெற்றவர்களின் அழைப்பை நான் எப்படி ஏற்க முடியும். எனவே, அவர்கள்தான் என்னோடு வர வேண்டும்.

உங்களுடைய குறிக்கோளும் ஆட்சி மாற்றம்தானா?

ஆட்சி மாற்றம் அல்ல. அடிப்படை மாற்றத்தைக் கொண்டு வருவதுதான் நாம் தமிழர் கட்சியின் குறிக்கோள். வேறு தமிழகத்தை உருவாக்குவோம். நாங்கள் சீர்திருத்தவாதிகள் அல்லர், புரட்சிவாதிகள். அரசு முத்திரை, தலைநகர் என ஒட்டுமொத்தத் தமிழகத்தையே மறுகட்டமைப்பு செய்வது. அதாவது அடிப்படை அமைப்பு, அரசியல் மாற்றம்தான் எங்களது குறிக்கோள். எங்கள் கட்சியின் செயல்திட்ட அறிக்கையைப் படித்துப் பார்த்தால் எங்களுடைய கொள்கை, கோட்பாடுகளைப் புரிந்துகொள்ள முடியும்.

உங்களைப் போன்று ஒத்த கருத்துடைய வைகோவுடன் நீங்கள் இணைந்து செயல்படலாமே?

திராவிடம் என்பதையே நான் எதிர்க்கிறேன். நான் அடிமையாக வாழ முடியாது. 500 ஆண்டுகளுக்கு முன்னர் மன்னர் ஆட்சிக் காலத்தில் நாயக்கர்கள் தமிழனை அடிமைப்படுத்தி ஆண்டார்கள். இப்போது மக்களாட்சி காலத்திலும் அவர்களே தமிழர்களை ஆள்கிறார்கள் என்றால், நாம் இன்னும் விடுதலையே பெறவில்லையா? தமிழகத்தைத் தமிழன் அல்லாமல் தொடர்ந்து மற்றவர்களே ஆள வேண்டும் என நினைப்பது எந்தவிதத்தில் நியாயம்? 13 கோடி தமிழ்த் தேசிய இன மக்களில் ஒருவர் கூடவா நாட்டை ஆளும் தகுதியைப் பெற்றுவிடவில்லை. திமுக, அதிமுகவுக்கு மாற்று என்கிற பெயரில் எங்களை வைகோ, விஜயகாந்த் போன்ற தமிழரல்லாதவர்கள் எதற்கு ஆள வேண்டும்? தமிழகத்தைத் தமிழன் ஆண்டால்தான் மண்ணின் வளமும், மக்களின் நலனும் காக்கப்படும். இல்லையென்றால் பாதுகாக்கப்படாது. தமிழகத்துக்கு யார் வேண்டுமானாலும் வரலாம். வாழலாம். ஆனால், மாநிலத்தை ஆள்வது தமிழனாகத்தான் இருக்க வேண்டும்.

வரும் தேர்தலில் பலமுனைப் போட்டி ஏற்படும் நிலை உருவாகியிருக்கிறது. அதை எப்படிப் பார்க்கிறீர்கள்?

பாமக, மக்கள் நலக் கூட்டணி உள்ளிட்ட கட்சிகள் தனித்துப் போட்டியிடும் நிலையை உருவாக்கியிருப்பதற்கு நாம் தமிழர் கட்சிதான் காரணம். இன்றைக்கு தனித்துப் போட்டி என்று அறிவிக்கும் இவர்கள், கடந்த தேர்தலிலேயே அதை அறிவித்து தனித்துப் போட்டியிட்டிருந்தார்கள் என்றால், நான் கட்சி ஆரம்பித்திருக்க அவசியமே ஏற்பட்டிருக்காது. எனவே, தமிழகத்தில் இந்தச் சூழ்நிலையை உருவாக்கியிருப்பதே நான்தான்.

தமிழகத்தில் பூரண மது விலக்கு சாத்தியமா?

மது விலக்கு சாத்தியமே. அதனால் கள்ளச் சாராயம் பெருகும் என்பதை ஏற்றுக்கொள்ள முடியாது. காமராஜர் காலத்தில் கள்ளச் சாராயம் குடித்து எத்தனை பேர் இறந்துபோனார்ககள்? கடுமையான சட்டத்தை இயற்றி, காவல் துறையால் தீவிரமாக நடைமுறைப்படுத்தினால் கள்ளச் சாராயம் ஒழிக்கப்பட்டுவிடும். நாம் தமிழர் கட்சி ஆட்சிக்கு வந்தால் செயற்கை மது கிடையாது. பனம் பால், தென்னம் பால் (கள்) தேசிய மதுபானமாக அறிவிக்கப்படும். கள்ளை உணவின் ஒரு பகுதி என இந்திய அரசியலமைப்புச் சட்டம் சொல்கிறது. சங்க இலக்கியங்களிலும் தமிழர்களின் உணவு முறைகளில் கள் இடம் பெற்றிருக்கிறது. இதைக் குடித்து இதுவரை எவரும் இறந்தது கிடையாது. எந்தவொரு நகரத்திலும், கிராமத்திலும் 3 கி.மீ.க்கு அப்பால்தான் இந்த தேசிய மதுபானக் கடைகள் அமைக்கப்பட்டிருக்கும்.

உங்களுடைய அரசியல் எப்போதும் திமுகவுக்கு எதிராகவும், அதிமுகவுக்கு சாதகமாகவும் இருப்பதாகக் கூறப்படுகிறதே?

திமுகவுக்கு எதிராக அல்ல, அந்தக் கட்சியை ஒழிக்க வேண்டும் என்பதுதான் எனது லட்சியம். விழுந்த திமுக மீண்டும் எழுந்தது என வரலாற்றில் வரக் கூடாது என நினைக்கிறேன்.

நான் மோதி அழிக்க வேண்டிய எதிரி ஜெயலலிதா அல்ல. தனது கண் எதிரே நிகழ்ந்த இனப் படுகொலையை சகித்துக் கொண்டு துரோகம் செய்த கருணாநிதியைத்தான், மோதி அழிக்கப்பட வேண்டிய எதிரியாக நான் பார்க்கிறேன். திராவிடக் கட்சிகளைப் பூண்டோடு ஒழிப்பதுதான் நாம் தமிழர் கட்சியின் இலக்கு!

பேட்டி: எம். மார்க் நெல்சன்

Leave a Response