
காஞ்சிபுரத்தைச் சேர்ந்த நெசவாளர் பாபு, தமிழக அரசின் சிறந்த நெசவாளர் விருதைப் பெற்றுள்ளார். இதுபோல் சிறப்பாக வடிவமைத்தல் உள்ளிட்டவற்றுக்கு நெசவாளர்கள் விருதுகளைப் பெற்றாலும், அவர்களின் குடும்பம் மிகவும் நலிவடைந்த நிலையில்தான் உள்ளது.
காஞ்சிபுரம் கோயில் கலைகளுக்குப் பெயர் பெற்றதைப் போலவே, இங்கு உருவாக்கப்படும் பட்டுச் சேலைகள் உலக அளவில் பெயர் பெற்றவை. தமிழகத்தின் தலை சிறந்த பட்டு நெசவாளர்கள் பலர் இங்குள்ளனர். குறிப்பாக, காஞ்சிபுரம் பட்டு மட்டுமே உரிய தரத்துடன், ஒரிஜினல் ஜரிகையைப் பயன்படுத்தித் தயாரிக்கப்படுவதால், இப்பட்டுப் புடவைகளுக்கு இந்திய அளவில் மவுசு உள்ளது. தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து வந்து காஞ்சிபுரம் பட்டுப் புடவைகளையே விரும்பி வாங்கிச் செல்கிறார்கள்.
பழைமை – புதுமை இரண்டையும் அழகாக கலை நயத்துடன் இணைத்து பட்டுப் புடவைகள் நெய்வதில் காஞ்சிபுரம் நெசவாளர்கள் கைதேர்ந்தவர்கள். எனவே இங்குள்ள நெசவாளர்கள் அதற்காக விருதுகளைப் பெறுகிறார்கள்.
இந்த ஆண்டுக்கான தமிழக அரசின் சிறந்த நெசவாளர் விருது காஞ்சிபுரம், வேளிங்கபட்டரை பகுதியைச் சேர்ந்த பாபுவுக்கு (45) கிடைத்துள்ளது.
பாபு ஏழு வயதிலிருந்தே நெசவுத் தொழிலில் ஈடுபட்டு வருகிறார். காஞ்சிபுரம் அண்ணா பட்டுக் கூட்டுறவு சங்கத்தில் உறுப்பினராக உள்ள பாபு, நெசவுத் தொழிலைச் சிறப்பாக செய்து பட்டுக் கூட்டுறவுச் சங்கத்தின் வளர்ச்சிக்கு உதவியதற்காகத் தமிழகத்தின் சிறந்த நெசவாளர் விருதும், ரூ. 1 லட்சம் ரொக்கப் பரிசும் அவருக்கு வழங்கப்பட்டுள்ளது. சென்னையில் நடைபெற்ற விழாவில் கைத்தறி நெசவுத் துறை அமைச்சர் கோகுல இந்திரா இப்பரிசினை அவருக்கு வழங்கினார்.
தமிழகத்தின் சிறந்த நெசவாளர் விருது பெற்ற பாபுவின் மாதம் வருவாய் ரூ. 10,000 தான். பல நெசவாளர்களின் குடும்பங்கள் இதைவிடக் குறைவான வருமானத்தில்தான் வாழ்ந்து வருகின்றனர்.
நெசவாளர்களின் வாழ்க்கைத் தரம் உயர, உரிய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். அவர்களுக்குத் தேவையான கடனுதவிகள் கூட்டுறவு வங்கிகள் மூலம் வழங்கப்பட வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை நெசவாளர் சங்கப் பிரதிநிதிகள் வலியுறுத்தியுள்ளனர்.


