மோசடி செய்து பிரதமரானார் மோடி – இராகுல் போட்ட அணுகுண்டு

டெல்லியில் நேற்று நடந்த காங்கிரசு சட்ட மாநாட்டை மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் இராகுல் காந்தி தொடங்கி வைத்தார்.

அப்போது அவர் பேசியதாவது…

இந்தியாவில் தேர்தல் முறை ஏற்கனவே செத்துவிட்டது. பிரதமர் மோடி மிகக்குறைந்த பெரும்பான்மையை மட்டுமே கொண்டுள்ளார் என்பதை நினைவில் கொள்ளுங்கள். மக்களவைத் தேர்தலில் 10 முதல் 15 இடங்களில் மோசடி செய்யப்பட்டிருக்கிறது. ஆனால் அதன் உண்மையான எண்ணிக்கை 80 முதல் 100 தொகுதிகளாக இருக்கலாம் என நாங்கள் சந்தேகிக்கிறோம். இந்த மோசடி மட்டும் செய்யப்படாமல் இருந்திருந்தால், மோடி பிரதமராகி இருக்க முடியாது.

அடுத்த சில நாட்களில், மக்களவைத் தேர்தலில் எப்படி மோசடி செய்ய முடியும்? அது எவ்வாறு செய்யப்பட்டது? என்கிற தகவல்களை எந்தச் சந்தேகமும் இல்லாமல் நிரூபிக்கப் போகிறோம்.

கர்நாடகாவில் ஒரு சட்டப்பேரவைத் தொகுதியில் வாக்காளர்களின் புகைப்படங்கள் மற்றும் பெயர்களை ஆய்வு செய்தோம். அதில், மொத்தம் 6.5 இலட்சம் வாக்காளர்களில் 1.5 இலட்சம் வாக்குகள் மோசடி என்பது கண்டறியப்பட்டுள்ளது.

அரசியலமைப்பைப் பாதுகாக்கும் தேர்தல் ஆணையம் அழிக்கப்பட்டு கையகப்படுத்தப்பட்டுள்ளது. கடந்த 11 ஆண்டுகளாக தேர்தல் முறைகேடு பற்றி நான் பேசி வருகிறேன். ஏதோ தவறு நடப்பதாக எனக்குள் சந்தேகம் இருந்துகொண்டே இருந்தது.

குஜராத் சட்டப்பேரவைத் தேர்தல் குறித்தும் மிகுந்த சந்தேகம் இருந்தது. மக்களவைத் தேர்தலில் காங்கிரசுக்கு ஒரு இடம் கூடக் கிடைக்கவில்லை. மபி, குஜராத்திலும் ஒரு இடம் கூடக் கிடைக்கவில்லை. இது எனக்கு ஆச்சரியமாக இருந்தது.

மகாராஷ்டிரா தேர்தலுக்குப் பிறகு மிகவும் உன்னிப்பாகக் கண்காணித்து முறைகேடுகளைக் கண்டறிந்துள்ளோம்.

இதற்கு முன், என்னிடம் ஆதாரம் இல்லை.அதனால் வெளிப்படையாகப் பேச முடியவில்லை. இப்போது நம்பிக்கையுடன் கூறுகிறேன். ஏனென்றால் என்னிடம் 100 சதவீத ஆதாரம் உள்ளது. இதை யாரிடம் காட்டினாலும் அவர்கள் அதிர்ச்சி அடைகிறார்கள். இது எப்படி சாத்தியமாகும் என்று கேட்கிறார்கள். ஆனால் இது சாத்தியமாகி இருக்கிறது, உண்மையில் நடந்திருக்கிறது. இந்தத் தரவை நாங்கள் வெளியிடும் போது, தேர்தல் அமைப்பில் ஏற்படும் அதிர்ச்சி அலையை நீங்கள் காண்பீர்கள். இது உண்மையில் ஒரு அணுகுண்டு போன்றது.

இவ்வாறு இராகுல்காந்தி பேசினார்.

இராகுல்காந்தியின் இந்தப் பேச்சு ஒன்றிய அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

Leave a Response