
விழுப்புரத்தில் ஜூலை 22 அன்று செய்தியாளர்களிடம் பேசினார் சீமான்.
அப்போது அவர் கூறியதாவது…..
பாஜகவை வீழ்த்த வேண்டும் எனக் கூறி ஓர் அணியும், திமுக மீண்டும் ஆட்சிக்கு வரக்கூடாது என மற்றொரு அணியும் உள்ளது. அவர்கள் ஓரணி என்கின்றனர். நாங்கள் மட்டுமே ஓரே அணியாக உள்ளோம். திமுகவை வீழ்த்த அதிமுக அழைப்பு என்பது தீமைக்கு மாற்று தீமை கிடையாது. நெருப்பை, நெருப்பை வைத்து அணைப்பது கடினம்.
தமிழ்நாட்டை ஆட்சி செய்தவர்கள், தேசியக் கட்சிகளின் தேவையை ஏன் ஏற்படுத்துகின்றனர். மக்களின் தேவையை அதிகாரத்தில் இருந்தவர்கள் நிறைவேற்றி இருந்தால், தமிழ்நாட்டு மண்ணுக்கு தேசியக் கட்சிகள் வரவேண்டிய, வளர வேண்டிய நிலை ஏன் உருவாகிறது?
காவிரியில் இருந்து தமிழ்நாட்டுக்கு ஒரு சொட்டு தண்ணீர் கூடக் கொடுக்க முடியாது என சொல்கிறது காங்கிரசு, பாஜக. முல்லைப் பெரியாறு நதி நீரைப் பெறவும் காங்கிரசு தடையாக உள்ளது. தமிழ்நாட்டின் மண், நிலம், காடு, மலை, கடல் ஆகியவற்றைப் பாதுகாக்க தேசியக் கட்சிகள் துணை நிற்காது. திராவிடக் கட்சிகளும் கூட நிற்காது.
மீண்டும் 27 ஆயிரம் ஏக்கரை என்எல்சி கைப்பற்றப் போகிறது. மன்னார்குடி வரை தோண்டிக் கொண்டு செல்வர். போருக்குப் பிறகு கூட, அந்த இடத்தில் மக்களை மறு குடியேற்றம் செய்து விடலாம். ஆனால் நிலக்கரி, மீத்தேன், அணு உலை வெடித்த இடத்தில் மக்களை மறு குடியேற்றம் செய்ய முடியாது. நிலமற்ற அடிமைகளாக தமிழர்களை மாற்றி விடுவர். இதற்காக தேசிய மற்றும் திராவிடக் கட்சிகள் போராடாது.
தமிழ்நாட்டில் இந்தியைத் திணித்தது யார்? கல்வியை மாநிலப் பட்டியலில் இருந்து எடுத்துச் சென்றது யார்? அப்போது அதிகாரத்தில் இருந்தது யார்? மருத்துவத்தை பொதுப் பட்டியலில் கொண்டு சென்றது யார்? ஜிஎஸ்டியை கொண்டு வந்தது யார்? நீட் தேர்வை திணித்தது யார்? தமிழ்நாட்டில் எதிர்க்காமல் கையொப்பமிட்டது யார்? டிஎன்பிஎஸ்சி தேர்வை யார் வேண்டுமானாலும் எழுதலாம் என கையொப்பமிட்ட அரசியல் கட்சிகள் எது? கேரளாவில் விரட்டப்பட்ட அணு உலையை தமிழ்நாட்டில் திணித்தது யார்? ஏற்றது யார்? பரந்தூர் விமான நிலையத்துக்கு நிலத்தைக் கொடுத்தது அதிமுக, கட்டியே தீருவேன் என்கிறது திமுக, பாஜக. இந்தக் கட்சிகளிடம் எந்த மாற்றத்தையும் கண்டுபிடிக்க முடியாது. ஒருவரையொருவர் எதிர்ப்பது போன்ற தோற்றத்தை உருவாக்கி நாடகம் நடத்துகின்றனர்.
ஜெயலலிதா காலத்தில் அனுமதிக்கப்படாத ஆர்எஸ்எஸ் பேரணி, திமுக ஆட்சியில் தடையின்றி நடைபெறுகிறது. ஆனால் போராட்டம் நடத்திய பகுதி நேர ஆசிரியர்களை பிடித்து அடைத்து வைத்தது. திருப்பரங்குன்றம் மலையை பாதுகாக்கப் போராடும் பாஜக, மேற்கு தொடர்ச்சி மலையை வெட்டி எடுத்துச் செல்வதைக் கண்டித்து ஏன் போராடவில்லை? தமிழ்நாட்டின் வளம், இந்தியாவில் உள்ள அனைவருக்கும் பொதுவானது என்று கூறும்போது, கர்நாடகாவில் தண்ணீர் மட்டும் அவர்களுக்குச் சொந்தம் எனக் கூறுவது இறையாண்மையா?
தமிழ்நாட்டுக்கு பாஜக, காங்கிரசுக் கட்சிகள் எதற்காகத் தேவை? மக்களுக்குச் செய்த நலத்திட்டங்களை முன்வைத்து மீண்டும் வாய்ப்பு கொடுங்கள் என ஒரு கட்சியும் கேட்காது. கடன் வாங்கி செலவு செய்வது வளர்ச்சியா? டாஸ்மாக் மதுபானங்களை பாதுகாக்கும் தமிழ்நாடு அரசு, விளை பொருட்களைப் பாதுகாப்பது கிடையாது. பாஜகவுடன் நேரிடையாக அதிமுகவும், மறைமுகமாக திமுகவும் கூட்டணி வைத்துள்ளது. 3 முறை நிதிஆயோக் கூட்டத்துக்குச் செல்லாமல் நிமிர்ந்து நின்ற முதலமைச்சர் ஸ்டாலின், அமலாக்கத்துறை வருகிறது என்றவுடன் அடுத்த கூட்டத்துக்குச் சென்று பங்கேற்றார்.
நான் இருக்கும் வரை பாஜக வெல்லாது, வளராது. இதுபோல் வேறு யாராவது சொல்வார்களா? பாஜக வந்துவிடும் என குடுகுடுப்பைக்காரர்கள் போல் கூறுகின்றனர். பாஜகவுக்கு நான் ’பி’ டீம் என்றால், திமுக ‘ஏ’ டீம். தமிழ்நாட்டில் பெரியகூட்டணி என் கூட்டணிதான். 8 மாதம் பொறுத்திருக்கவும். அதுபற்றி மாநாட்டில் அறிவிக்கப்படும். முதலமைச்சர் விரைவாக குணமடைய வாழ்த்துகள். மக்களுடன் நின்று எனது கூட்டணிஆட்சி அமையும்
இவ்வாறு கூறினார் சீமான்.


