அம்மாவிடம் சரணடைந்த அன்புமணி – சமரசம் வருமா?

பாமக நிறுவனர் இராமதாசு அவருடைய மகன் அன்புமணி இடையே ஏற்பட்டுள்ள மோதல் கட்சியை இரண்டாக உடைத்துள்ளது. இதனால் இருவரும் பாமகவுக்கு நான்தான் தலைவர், மாழ்பழம் சின்னத்தை எங்களுக்கே ஒதுக்க வேண்டும் என்று இருவரும் தேர்தல் ஆணையத்தில் மனு கொடுத்து உள்ளனர்.

இந்த பரபரப்பான சூழ்நிலையில் தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணத்தில் தனியார் திருமண மண்டபத்தில் தஞ்சாவூர், திருவாரூர் மாவட்ட பாமக, வன்னியர் சங்க பொதுக்குழுக் கூட்டம் நேற்று காலை நடந்தது. அதற்காக அங்கு சென்றிருக்கிறார் இராமதாசு.மாலையில் மயிலாடுதுறையில் நடைபெறும் பாமக பொதுக்குழுக் கூட்டத்தில் பங்கேற்க இராமதாசு சென்றுள்ளார்.

இந்நிலையில் நேற்றிரவு தைலாபுரத்தில் உள்ள பாமக நிறுவனர் இராமதாசு இல்லத்துக்குத் திடீரெனச் சென்றார் அன்புமணி.அங்கு அவரது தாயார் சரஸ்வதி அம்மாளைச் சந்தித்தார்.சுமார் 45 நிமிடங்கள் இந்தச் சந்திப்பு நிகழ்ந்ததாகக் கூறப்படுகிறது. பாமக நிறுவனர் இராமதாசு உடன் மோதல் நீடித்து வரும் நிலையில் தனது தாயாரைச் சந்திக்க அன்புமணி வந்துள்ளார்.

அப்பா மகன் இடையேயான மோதலின் தொடக்கத்தில்,கட்சியினர் மத்தியில் அன்புமணிக்கே அதிக ஆதரவு இருப்பதுபோல் தெரிந்தது.ஆனால் போகப் போக இராமதாசு பக்கம் ஆதரவு அதிகரித்துக் கொண்டிருக்கிறதாம்.சட்டப்படியும் தார்மீக அடிப்படையிலும் அன்புமணி பக்கம் பலவீனமாகிக் கொண்டே இருப்பதாகச் சொல்லப்படுகிறது. இதனால் தன்னைத் தக்கவைத்துக் கொள்ள அம்மா மூலம் சமரசம் பேசுவதற்காக அவர் இறங்கி வந்திருக்கிறார் என்று அக்கட்சி வட்டாரங்களில் தகவல் உலவுகிறது.

இந்தச் சந்திப்பால் அப்பா மகன் இருவருக்கும் இடையேயான கருத்து வேறுபாடு முழுமையாக நீங்கி இருவரும் ஒருங்கிணைவார்களா? என்கிற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

நடந்தால் நல்லது.

Leave a Response