
அதிமுகவுக்குள் இப்போது வெளியில் தெரியாமல் கடும் குழப்பம் நடந்துகொண்டிருக்கிறது.தேர்தலையொட்டி அதிமுகவுக்குள் இருக்கும் பிரிவுகளைக் களைந்து அனைவரும் ஒருங்கிணையவேண்டும் என்று அதிமுக தொண்டர்கள் விரும்புகின்றனர்.
இப்போது எடப்பாடி பழனிச்சாமி அணியில் இருக்கிறார் மதுரையைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு.
அவருக்குத் தனிப்பட்ட முறையில் ஒரு பெரும் நெருக்கடி ஏற்பட்டதாகவும் அதிலிருந்து கொஞ்சம் கொஞ்சமாக அவர் மீண்டு வருவதாகவும் சொல்லப்படுகிறது.
இந்த நெருக்கடி நேரத்தில் கட்சி தனக்கு ஆதரவாக இல்லை என்றும் நெருக்கடிக்கே கட்சியினர்தான் காரணம் என்றும் அவர் தனக்கு நெருக்கமானவர்களிடம் வருத்தப்பட்டுச் சொல்லியிருக்கிறார் என்கிறார்கள்.
அதோடு, எடப்பாடி பழனிச்சாமி அணியிலிருந்து வெளியேறவும் அவர் முடிவு செய்துவிட்டார் என்றும் சொல்லப்படுகிறது.
எடப்பாடி பழனிச்சாமி எடுக்கும் முடிவுகளால் தென்மாவட்ட அதிமுக தொண்டர்கள் கட்சியின் மீது ஈடுபாடு இல்லாமல் பெயருக்கு மட்டுமே இருக்கின்றனர்.இது வாக்குச்சாவடி முகவர் குழு அமைக்கும் நேரத்தில் வெளிப்படையாகத் தெரிகிறது என்று சொல்கிறார்கள்.
இதனால், எடப்பாடி பழனிச்சாமி அணியிலிருந்து வெளியேறி தன் சமூகத்தைச் சேர்ந்தவர்களோடு இணைந்து இயங்குவது என்கிற முடிவுக்கு அவர் வந்திருப்பதாகச் சொல்லப்படுகிறது.
இந்தச் செய்தியை அறிந்த எடப்பாடி பழனிச்சாமி, அவரிடம் இருக்கும் மாவட்டச் செயலாளர் பொறுப்பிலிருந்து அவரை நீக்குவது அல்லது அதேஇடத்தில் இன்னொருவரையும் பொறுப்பில் நியமிப்பது என்று திட்டமிட்டிருப்பதாகச் சொல்லப்படுகிறது.
மிகவும் மேல்மட்டத்தில் இருந்த இந்தச் செய்திகள் இப்போது தொண்டர்கள் மத்தியில் பேசப்படும் செய்தியாக மாறியிருக்கிறது.
இதனால், மதுரை உள்ளிட்ட தென்மாவட்ட அதிமுக தொண்டர்களிடம் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
அதேசமயம், இந்தப் பிரிவினை நடந்துவிடக்கூடாது என்று சிலர் இருதரப்பிலும் பேசிவருவதாகவும் சொல்லப்படுகிறது.
அவர்களின் சமாதான முயற்சி வெற்றி பெற்று எடப்பாடி அணியிலேயே நீடிப்பாரா? அல்லது அணிமாறி அதிர்ச்சி கொடுப்பாரா? என்பது போகப்போகத் தெரியும் என்று அக்கட்சியினர் சொல்கிறார்கள்.


