
போதைப் பொருள் பயன்படுத்திய வழக்கில் நடிகர் ஸ்ரீகாந்த் கடந்த 23 ஆம் தேதி இரவு நுங்கம்பாக்கம் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டார். பின்னர், எழும்பூர் நீதிமன்ற மாஜிஸ்திரேட் தயாளன் முன்னிலையில் ஆஜர்படுத்தி, அடுத்த மாதம் 7 ஆம் தேதி வரை 15 நாள் நீதிமன்றக் காவலில் புழல் சிறையில் அடைக்கப்பட்டார்.
விசாரணையில், ‘தீங்கிரை’ படத்தை தயாரித்த அதிமுக தகவல் தொழில் நுட்பப் பிரிவில் நிர்வாகியாக இருந்த மயிலாப்பூரைச் சேர்ந்த பிரசாத் என்பவர் மூலம் தனக்கு போதைப் பொருள் பழக்கமானதாக ஸ்ரீகாந்த்
வாக்குமூலத்தில் தெரிவித்து இருந்தார்.
இதேபோல் திரைப்பட நடிகர் கிருஷ்ணாவும் போதைப் பொருளை பயன்படுத்தியதாகக் குற்றச்சாட்டு எழுந்தது. மேலும், அவர் ஆதாயம் இல்லாமல் நண்பர்கள் மற்றும் நடிகர், நடிகைகள் சிலருக்கு போதைப்பொருளைக்
கைமாற்றியதாகவும் தகவல் வெளியானது. இதையடுத்து, அவரை விசாரணைக்கு ஆஜராகும்படி நுங்கம்பாக்கம் காவல்துறையினர் சம்மன் அனுப்பினர். ஆனால், அவர் தலைமறைவானார். இதையடுத்து, 5 தனிப்படைகள் அமைக்கப்பட்டன.
இந்நிலையில், நேற்று மாலை நடிகர் கிருஷ்ணா தனது வழக்கறிஞர்களுடன் நுங்கம்பாக்கம்
காவல் உதவி ஆணையர் முன்னிலையில் விசாரணைக்கு ஆஜரானார். அவரிடம் தீவிர விசாரணை நடத்தினர்.
அப்போது, அவர் அளித்த வாக்குமூலத்தில்…
எனக்கு இரைப்பை தொடர்பான அலர்ஜி உள்ளது. இதயத்துடிப்பு வேகமாக இருப்பதால் சிகிச்சை எடுத்து
வருகிறேன். இதனால்,என்னால் போதைப் பொருளைப் பயன்படுத்த முடியாது.நான் பயன்படுத்தியதும் இல்லை. பிரதீப் குமார், பிரசாந்த் என எனக்கு யாருடனும் தொடர்பு இல்லை. ஆனால், நடிகர் ஸ்ரீகாந்துடன் நட்புடன் பழகி வந்தேன். அவருடன் சில பார்ட்டிகளில் கலந்து கொண்டுள்ளது உண்மைதான். ஆனால், நான் இதுவரை எந்த போதைப் பொருட்களையும் பயன்படுத்தியது இல்லை.
இவ்வாறு கூறியதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.
இந்தநிலையில் அவருக்கு மருத்துவ பரிசோதனை நடத்தி முடிக்கப்பட்டுள்ளது. அதன் முடிவுக்காகக் காவல்துறையினர் காத்திருக்கின்றனர். இதுஒருபுறம் இருக்க கிருஷ்ணா வீட்டிலும் சோதனை மேற்கொண்டனர்.
கடந்த மாதம் 22 ஆம் தேதி நுங்கம்பாக்கத்தில் உள்ள மதுபான விடுதி ஒன்றில் ஏற்பட்ட மோதல் தொடர்பாக
ஏற்கெனவே பிரசாத் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அவருக்கும் போதைப் பொருள்
விவகாரத்துக்கும் தொடர்பு இருப்பதால் இந்த வழக்கிலும் அவரை கைது செய்ய காவல்துறையினர் முடிவு
செய்துள்ளனர். மேலும், அவரையும் சிறையில் உள்ள ஆப்பிரிக்க இளைஞர் ஜான், சேலம் சங்ககிரி பிரதீப்குமார் உள்ளிட்டோரையும் காவலில் எடுக்க காவல்துறையினர் முடிவு செய்துள்ளனர்.
திரைப்படத் துறையைச் சேர்ந்த மேலும் சிலர் இதேப்போல் போதைப் பொருளை பயன்படுத்தியதாகக் குற்றச்சாட்டு எழுந்தது. அதுவும் முன்னணி நடிகர், நடிகைகள் பெயர்களும் அடிபடுகிறது. அவர்களைப் பற்றிய விவரங்களை உளவுப் பிரிவு காவல்துறையினர் சேகரித்து வருகின்றனர்.
இந்த போதைப் பொருள் பயன்படுத்தினால் சுமார் 45 நாட்கள் வரை உடலில் இருக்கும்.இந்த காலகட்டத்துக்குள் மருத்துவப் பரிசோதனை நடத்தினால் அது உறுதி செய்யப்பட்டுவிடும். இதற்குப் பயந்தே சில நடிகர், நடிகைகள் கைபேசிகளை அணைத்துவிட்டு தலைமறைவாகிவிட்டதாக கூறப்படுகிறது.அவர்கள் யார்?யார்? என்பது விரைவில் வெளிவரும் என்கிறார்கள்.


