விசாரணை முடிந்தது வந்துகொண்டிருக்கிறேன் – இயக்குநர் அமீர் தகவல்

உணவுப் பொருள் ஏற்றுமதி என்ற பெயரில், இந்தியாவில் இருந்து நியூசிலாந்து, ஆஸ்திரேலியா உட்பட பல்வேறு நாடுகளுக்கு போதைப் பொருள் கடத்தி ரூ.2,000 கோடி அளவில் வருமானம் ஈட்டியது தொடர்பான வழக்கில் தமிழ்நாட்டைச் சேர்ந்த 3 பேரை மத்திய போதைப் பொருள் தடுப்பு பிரிவு (என்சிபி) காவல்துறையினர் டெல்லியில் பிப்ரவரி 24 ஆம் தேதி கைது செய்தனர்.

அவர்களிடம் நடத்திய விசாரணையில், இதற்கு மூளையாகச் செயல்பட்டது தமிழ்நாட்டைச் சேர்ந்த ஜாபர் சாதிக் என்பது தெரியவந்தது.திரைப்படத் தயாரிப்பாளரான இவர், சென்னை மேற்கு மாவட்ட திமுக அயலக அணி துணை அமைப்பாளராகவும் இருந்தார்.

இந்த வழக்கில் சிக்கியதும், திமுகவில் இருந்து அவர் நீக்கப்பட்டார். தலைமறைவாக இருந்த அவர் மார்ச் மாதம் 9 ஆம் தேதி டெல்லியில் கைது செய்யப்பட்டார்.

இதையடுத்து, அவரை காவலில் எடுத்து விசாரித்தனர்.மார்ச் 17 ஆம் தேதி டெல்லியில் இருந்து சென்னைக்கு விமானம் மூலம் அழைத்து வந்து, இங்குள்ள மண்டல அலுவலகத்தில் 12 மணி நேரத்துக்கும் மேலாக விசாரணை நடத்தினர். பின்னர், அவர் மீண்டும் டெல்லி அழைத்துச் செல்லப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

இதற்கிடையே, ஜாபர் சாதிக் அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையில், அடுத்தகட்ட விசாரணை தொடங்கப்பட்டுள்ளது.

அதில் முதல் கட்டமாக, போதைப் பொருள் கடத்தல் வழக்கில் தமிழ்த் திரைப்பட இயக்குநரும், நடிகருமான அமீர், டெல்லியில் உள்ள போதைப் பொருள் தடுப்புபிரிவு அலுவலகத்தில் நேர் நிற்குமாறு அவருக்கு மார்ச் 31 ஆம் தேதி அழைப்பாணை வழங்கினர்.அதன்படி, டெல்லியின் ஆர்.கே.புரம் 1 ஆவது செக்டரில் உள்ள என்சிபி தலைமை அலுவலகத்தில்இயக்குநர் அமீர் தனது வழக்கறிஞர்களுடன் நேற்று காலை 8 மணி அளவில் நேர்நின்றார்.

நண்பகல் 12 மணிக்குப் பிறகு அமீரிடம் அதிகாரிகள் விசாரணையைத் தொடங்கினர். இந்த விசாரணை நேற்று நள்ளிரவு வரை தொடர்ந்தது.

விசாரணையில் மொத்தம் 3 அதிகாரிகள் குழுவினர் ஈடுபட்டிருந்தனர். சென்னையில் உள்ள என்சிபி மண்டல அலுவலக அதிகாரிகளும் இந்த விசாரணையில் கலந்துகொள்ள முன்கூட்டியே அழைக்கப்பட்டிருந்தனர்.

இறுதியாக, என்சிபி தலைமை இயக்குநர் சத்யநாராயண் பிரதான் நேரடியாக அமீருடன் விசாரணை நடத்துவார் என்றும் தகவல்கள் வெளியாகின. இதன் பிறகே அமீர், சென்னை அனுப்பி வைக்கப்படுவாரா அல்லது மேலும் விசாரணைக்காக டெல்லியில் தங்கி இருக்க வேண்டுமா என்று முடிவு செய்யப்படும் என தெரிகிறது.

இதுகுறித்து என்சிபி வட்டாரங்கள் கூறியதாவது…

அமீரிடம் ஓரளவுக்கு ஒத்துழைப்பு கிடைக்கிறது. இவர் அளிக்கும் தகவல்களின் அடிப்படையில்தான் அவர்சாட்சியமாகக் கருதப்படுவாரா அல்லது கைது செய்யப்பட்டு குற்றவாளிகள் பட்டியலில் சேர்க்கப்படுவாரா என முடிவு செய்யப்படும் என்றனர்.

இந்தச்செய்தி வெளியான அதேநேரத்தில் இயக்குநர் அமீரின் கைபேசி நிலைத்தகவலில்,

அனைத்து ஊடக நண்பர்களுக்கும் ஓர் அன்பான வேண்டுகோள்.டெல்லியில் விசாரணை முடிந்து திரும்பி வந்துகொண்டிருக்கிறேன்.இரண்டு மூன்று நாட்களுக்குப் பிறகு உங்களைச் சந்திக்கிறேன்.அதுவரை யாரும் என்னை அழைக்கவேண்டாம்

இவ்வாறு அவர் கூறியிருக்கிறார்.

Leave a Response