தமிழரின் தொன்மையைக் கண்டுபிடித்தவரை பழிவாங்கும் பாஜக – பழ.நெடுமாறன் சொல்லும் தீர்வு

2014 ஆம் ஆண்டு முதல் சிவகங்கை மாவட்டம் கீழடியில் இந்திய தொல்லியல் துறை அகழாய்வு மேற்கொண்டது. 2023 ஆம் ஆண்டு 982 பக்க ஆய்வறிக்கையை தொல்லியல் துறை நிபுணர் அமர்நாத் இராமகிருட்டிணன், இந்திய தொல்லியல் துறை இயக்குநரிடம் சமர்ப்பித்தார்.

ஆனால் போதிய ஆதாரங்கள் இல்லை என்று கூறிய ஒன்றிய அரசு, திருத்தம் செய்யக் கோரி அந்த அறிக்கையை தமிழ்நாடு அரசுக்குத் திருப்பி அனுப்பியது.

இதற்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உட்பட தமிழ்நாடு அரசியல் கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்தன.

இந்தச்சூழலில் கீழடி அகழாய்வு மேற்கொண்ட அமர்நாத் இராமகிருட்டிணனை நொய்டாவுக்குப் பணியிட மாற்றம் செய்து ஒன்றிய தொல்லியல் துறை ஜூன் 17 அன்று உத்தரவிட்டுள்ளது.

அந்த உத்தரவில், “பண்டையகால மற்றும் தேசிய நினைவுச்சின்னங்கள், தொல்பொருள்கள் அமைப்பின் இயக்குநராக இருந்த அமர்நாத் ராமகிருஷ்ணா, நொய்டாவின் தேசிய நினைவுச்சின்னங்கள், தொல்பொருள்கள் அமைப்பின் இயக்குநராகப் பணியாற்றுவார்.பண்டைய கால ஆய்வுத்துறை, எச்.ஏ.நாயக்கிடம் வழங்கப்படுகிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தப் பணியிட மாற்ற உத்தரவுக்கு தமிழ்நாட்டில் கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது.

இந்நிலையில், அமர்நாத் இராமகிருட்டிணனைத் தமிழக அரசுப் பணிக்கு அழைக்கவேண்டும் என்று தமிழ்நாடு
முதலமைச்சருக்கு உலகத் தமிழர் பேரமைப்பின் தலைவர் பழ.நெடுமாறன் வேண்டுகோள் விடுத்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,,,,,

கீழடி – வைகை நதிக்கரையின் நாகரிகம் குறித்து முதன்முதலாக அகழாய்வினை மேற்கொண்டு சங்க காலம் எனக் குறிப்பிடப்படும் தமிழ் செவ்விலக்கியத்தின் காலம் கி.மு. 6 ஆம் நூற்றாண்டிற்கு முற்பட்டது என்பதைத் தகுந்த சான்றாதாரங்களுடன் நிறுவிய அமர்நாத் இராமகிருட்டிணன் அவர்கள் 12 ஆம் முறையாகத் தொடர்ந்து வேலை மாற்றம் செய்யப்பட்டுள்ளதை வன்மையாகக் கண்டிக்கிறேன்.

தமிழரின் தொன்மை குறித்த உண்மையைக் கண்டுபிடித்து உலகறியச் செய்த ஆய்வாளரை இவ்வாறு தொடர்ந்து அநீதியான முறையில் தண்டிப்பது பா.ச.க. அரசின் உள்நோக்கத்தை அம்பலப்படுத்தியுள்ளது.

சிந்துசமவெளி நாகரிகத்திற்கும், கீழடி நாகரிகத்திற்கும் இடைவெளி என்பது அநேகமாக இல்லை. இரண்டும் ஏறத்தாழ சமகாலத்தவை என்கிற உண்மை கீழடி அகழாய்வின் மூலம் வெளிப்பட்டிருக்கிறது. இத்தகைய சிறந்ததொரு கண்டுபிடிப்பை நிறுவிய அமர்நாத் இராமகிருட்டிணனைப் பாராட்டுவதற்குப் பதில் அவரைத் தண்டிக்கும் வகையில் தொடர்ந்து இடமாறுதல் செய்வது நேர்மையற்ற செயலாகும்.

எனவே, அவரை இந்தியஅரசின் பணியிலிருந்து விடுவித்து, தமிழ்நாடு அரசின் பணிக்கு அழைத்து, கீழடியில் தொடர்ந்து அகழ்வாராய்ச்சி நடத்தும் பொறுப்பினை அவரிடம் ஒப்படைக்க ஆவன செய்யுமாறு மாண்புமிகு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களை வேண்டிக்கொள்கிறேன்.

இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Leave a Response