தமிழீழ நிலப்பரப்புகளை சிங்கள மயமாக்கும் முயற்சியில் சிங்கள அரசு தீவிரமாக ஈடுபட்டிருக்கிறது.அதன் தொடர்ச்சியாக, வடக்கு மாகாணத்தின் கரையோரப் பகுதிகளிலுள்ள சுமார் ஆறாயிரம் ஏக்கர் தமிழர் நிலங்களை சிங்கள அரசுடைமையாக்கும் உத்தரவு வெளியிடப்பட்டுள்ளது.
இதனால், தமிழ்த்தேசியப் பேரவையினர், வெளிநாட்டுத் தூதர்களுடன் அவசர சந்திப்பை மேற்கொண்டுள்ளனர். இச்சந்திப்பு 14.05.2025 அன்று கொழும்பில் நடைபெற்றுள்ளது.
பிரித்தானிய தூதர் அன்ட்ரூ பற்றிக், கனேடிய தூதர் எரிக் வோல்ஷ், இந்தியத் துணைத்தூதுவர் சத்யாஞ்சல் பாண்டே, ஐக்கிய நாடுகள் சபையின் வதிவிடப் பிரதிநிதி மார்க் ஆன்ட்ரே பிராஞ்சே ஆகியோருடன் இச்சந்திப்பு இடம்பெற்றுள்ளது.
காணி நிர்ணயக் கட்டளைச் சட்டத்தின் கீழ் வடக்கு மாகாணத்தின் கரையோரப் பகுதிகளிலுள்ள 5941 ஏக்கர்கள் அளவுள்ள காணிகளை அரசுடமையாக்கும் பொருட்டுக் கடந்த மார்ச் 28 ஆம் திகதி வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது. காணி அபகரிப்பை நோக்கமாகக் கொண்ட இந்த வர்த்தமானி அறிவித்தலை மீளப்பெறுவதற்கு இலங்கை அரசாங்கத்துக்கு வெளிநாடுகள் உடனடியாக அழுத்தம் கொடுக்க வேண்டும் என்று கோரியே இந்த அவசரச் சந்திப்பு நிகழ்ந்துள்ளது.
இச்சந்திப்பில் தமிழ்த்தேசியப் பேரவையினர் காலத்துக்குக் காலம் இலங்கை அரசாங்கத்தால் மேற்கொள்ளப்பட்டு வந்த காணி சுவீகரிப்புகள் பற்றி விரிவாக எடுத்துக்கூறி அதன் தொடர்ச்சியே இந்த வர்த்தமானி அறிவித்தல் என்று சுட்டிக்காட்டியுள்ளனர்.
மேலும், சூழல் பாதுகாப்பு என்ற பெயரில் வனவளத் திணைக்களமும், வனஜீவராசிகள் திணைக்களமும் வர்த்தமானி அறிவிப்புகளின் மூலம் கையகப்படுத்தியுள்ள காணிகள் பற்றியும் தமிழ்த்தேசியப் பேரவையினர் புள்ளி விபரங்களுடன் எடுத்துக் கூறியுள்ளனர்.
அத்தோடு, குருந்தூர் மலையில் அண்மையில் வயலை உழுதமைக்காக இரண்டு உழவர்கள் கைது செய்யப்பட்டமை, தையிட்டி உட்படத் தனியார் காணிகளில் அத்துமீறி அமைக்கப்பட்டுள்ள பௌத்த விகாரைகள் ஆகியன தொடர்பாகவும் அரசாங்கத்தின் மீது வெளிநாடுகளின் உடனடித் தலையீட்டை வலியுறுத்தியுள்ளனர்.
வெளிநாட்டுத் தூதர்களுடனான இச்சந்திப்பில் தமிழ்த்தேசியப் பேரவையின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம், தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் பொதுச் செயலாளர் செ.கஜேந்திரன், தமிழ்த் தேசியப் பசுமை இயக்கத்தின் தலைவர் பொ.ஐங்கரநேசன், தமிழ்த்தேசியக் கட்சியின் ந.ஸ்ரீகாந்தா, முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஈ.சரவணபவன் ஆகியோர் பங்கேற்றிருந்தார்கள்.
விடுதலைப் போருக்குப் பின்னர், தமிழ்த் தலைவர்கள் நேரடியாக வெளிநாட்டுத் தூதர்களைச் சந்தித்து நில அபகரிப்பைத் தடுத்து நிறுத்தக் கோரியிருப்பது மட்டுமின்றி தமிழீழ நிலப்பரப்பில் தொடர்ந்து நடக்கும் ஆக்கிரமிப்பு சிங்கள மயமாக்கல் குறித்துப் புகார் கூறியிருப்பதும் அதை அவர்கள் வாங்கிக் கொண்டிருப்பதும் சிங்கள அரசுக்குப் பெரும் அதிர்ச்சி கொடுக்கும் நிகழ்வாக அமைந்துள்ளது.