
வீட்டு உபயோக எரிவாயு உருளை விலையை ஒன்றிய அரசு திடீரென உயர்த்தியுள்ளது. இதன்படி, ரூ.818.50-க்கு விற்பனை செய்யப்பட்டு வந்த வீட்டு உபயோக சமையல் எரிவாயு உருளை விலை ரூ.50 உயர்த்தப்பட்டு, ரூ.868.50 ஆக அதிகரித்துள்ளது. இதேபோல, உஜ்வாலா திட்டத்தின்கீழ், மானிய விலையில் வழங்கப்படும் உருளையின் விலை ரூ.550 ஆக அதிகரித்துள்ளது.
இதுதொடர்பாக, ஒன்றிய பெட்ரோலியம், இயற்கை எரிவாயுத் துறை அமைச்சர் ஹர்தீப் சிங் புரி வெளியிட்டுள்ள அறிவிப்பில், ‘பொதுத் துறை எண்ணெய் நிறுவனங்களுக்கு ரூ.43 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது. இதை ஈடுகட்டவே சமையல் எரிவாயு உருளை விலை உயர்த்தப்பட்டுள்ளது’ என்று தெரிவித்துள்ளார்.
இந்த விலை உயர்வு இன்று (செவ்வாய்க்கிழமை, ஏப்ரல் 8) அமலுக்கு வருகிறது.
வீட்டு உபயோக சமையல் எரிவாயு உருளை விலை உயர்வை உடனே திரும்பப் பெற வேண்டும்” என்று ஒன்றிய அரசை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்ட சமூக வலைதளப் பதிவில்,
நாட்டு மக்களின் வீடுகளில் அடுப்பு எரிய வேண்டுமா? அல்லது அவர்களது வயிறு எரிய வேண்டுமா? உதவி செய்யாவிட்டாலும் உபத்திரவம் செய்யாமல் இருந்தாலே போதும் என்பது சேடிஸ்ட் பாஜக அரசுக்கு மிகவும் பொருந்தும். உலகளவில் கச்சா எண்ணெய் விலை சரிந்துள்ள நிலையில், பெட்ரோல், டீசல் விலையைக் குறைக்காவிட்டாலும், பரவாயில்லை, விலையை ஏற்றாதீர்கள் எனக் கெஞ்சும் பரிதாப நிலைக்கு நாட்டு மக்களை தள்ளிவிட்டார்களே? வெந்த புண்ணில் வேலைப் பாய்ச்சுவது போல், சமையல் எரிவாயு உருளை விலை உயர்வு அமைந்துள்ளது.
மக்களே, அடவடியாக விலையை உயர்த்திவிட்டு, தேர்தல் நெருங்கும் நேரத்தில் அதில் சிறு பகுதியைக் குறைத்து நாடகம் ஆடுவது பாஜகவின் வழக்கமாகிவிட்டது. அந்த நாடகத்தைப் பார்த்துப் பார்த்து நமக்கும் பழக்கமாகிவிட்டது. ஒன்றிய பாஜக அரசே தேர்தல் ஏதாவது வரும் வரை காத்திருக்காமல் இந்த விலை உயர்வை உடனே திரும்பப் பெறுக
இவ்வாறு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.
