தமிழ்நாடு சட்டப்பேரவையில் நேற்று நிதிநிலை அறிக்கை மீதான விவாதம் நடைபெற்றது. விவாதத்தைத் தொடங்கி வைத்து அதிமுக உறுப்பினர் செல்லூர் ராஜூ ஒவ்வொரு துறையாகப் பேசிக் கொண்டிருந்தார். பள்ளிக்கல்வித் துறையைப் பற்றி பேசியபோது, அதிமுக ஆட்சியில் பள்ளிக்கல்வித் துறையின் செயல்பாடுகள் குறித்து பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் குற்றம்சாட்டி பேசினார்.
இந்நிலையில், இதுபற்றிய விவரம் செங்கோட்டையனுக்குத் தெரியும் என்று எதிர்க்கட்சித் தலைவர் பழனிச்சாமியிடம் துணைத்தலைவர் ஆர்.பி.உதயகுமார் தெரிவித்தார்.
ஆனால் செங்கோட்டையன் கையைத் தூக்காமல் இருக்கையில் இருந்தபடியே சபாநாயகரிடம் செய்கை மூலம் அனுமதி கேட்டார். இதை சபாநாயகர் கவனிக்கவில்லை. அப்போது, செங்கோட்டையன் அருகில் இருந்த அதிமுக உறுப்பினர்கள் சிலர், செங்கோட்டையனை எழுந்து பதில் கூறுங்கள் என்று கேட்டுக் கொண்டனர். ஆனாலும், பதில் அளிக்காமல் செங்கோட்டையன் தயங்கியபடியே இருக்கையில் இருந்து விட்டார். இது அதிமுக உறுப்பினர்கள் இடையே சலசலப்பை ஏற்படுத்தியது.
இந்நிலையில் செங்கோட்டையனுக்கு எதிராக புதிய கோஷ்டி ஒன்றை கொண்டுவந்து பதிலடி கொடுக்க எடப்பாடி பழனிச்சாமி திட்டமிட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
எடப்பாடி பழனிச்சாமிக்கு எதிராகப் பேசாமலே புயலைக் கிளப்பியுள்ள செங்கோட்டையனுக்கு அவரது சொந்த ஊரில் எதிர்ப்புக் குரலைக் கொண்டுவர முடிவு செய்துள்ளனர். இதற்காக எடப்பாடி பழனிச்சாமியின் மைத்துனர் வெங்கடேஷ் களம் இறங்கியுள்ளார். அவர் இரகசியமாக நிர்வாகிகளைச் சந்தித்து வருகிறார்.
அவர்,முன்னாள் அமைச்சர் கே.சி.கருப்பணன் உள்ளிட்ட நிர்வாகிகளை இரகசியமாகச் சந்தித்துப் பேசியுள்ளார். செங்கோட்டையனைக் கட்சியில் இருந்து நீக்க வேண்டும். அவரது பொறுப்புகளைப் பறிக்க வேண்டும் எனவும் கோரிக்கை வைத்து கோபிசெட்டிப்பாளையத்தில் உள்ள நிர்வாகிகளே பேட்டி கொடுக்க வேண்டும் என்றும் இரகசிய உத்தரவு போட்டுள்ளாராம்.
முதற்கட்டமாக அந்தந்த மாவட்ட கட்சிக் கூட்டத்தைக் கூட்டி செங்கோட்டையனுக்கு எதிராகத் தீர்மானம் கொண்டு வரப்போவதாகவும் பேசப்பட்டு வருகிறது. இது, செங்கோட்டையனைக் கட்சியில் இருந்து அடியோடு வெளியேற்றுவதற்கு ஒரு வாய்ப்பாக இருக்கும் எனவும் கூறப்பட்டு வருகிறது.
ஆனால்,இந்த முயற்சியிலும் எடப்பாடி பழனிச்சாமிக்குப் பின்னடைவு ஏற்பட்டுள்ளது என்கிறார்கள்.ஈரோடு மாவட்டத்தில் முன்னாள் அமைச்சர் கே.சி.கருப்பணனைத் தவிர வேறு யாரும் செங்கோட்டையனுக்கு எதிராகப் பேச முன்வரவில்லை என்று சொல்லப்படுகிறது.
அடுத்து என்ன நடக்கப் போகிறது? என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும் என்று ஈரோடு அதிமுகவினர் கூறுகிறார்கள்.