5 ஆண்டுகளில் 5 இலட்சம் கோடி தங்க நகை அடகு – இந்திய நெருக்கடி அம்பலம்

இந்திய ஒன்றியம் முழுவதும் வங்கிகளில் தங்க நகைகளை அடகு வைத்து கடன் பெறுவது அதிகரித்து வருகிறது. புதிதாக நகைக்கடன் வாங்குவோர் எண்ணிக்கை ஆண்டுக்கு ஆண்டு உயர்ந்து வருகிறது. இது கடும் பொருளாதார நெருக்கடி உருவாகி இருப்பதைக் காட்டுகிறது என காங்கிரசுக் கட்சி தெரிவித்துள்ளது.

பிப்ரவரி மாதம் ரிசர்வ் வங்கி வெளியிட்ட தகவல்கள் அடிப்படையில் காங்கிரசு பொதுச்செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் கூறியிருப்பதாவது….

பிரதமர் மோடி உருவாக்கிய நெருக்கடியால் இந்திய பொருளாதாரம் சிக்கித்தவிக்கிறது. நாடு முழுவதும் தங்க நகைக்கடன் வாங்குவது உயர்ந்துள்ளது. தொடர்ச்சியான பொருளாதார தேக்கநிலை காரணமாக வெறும் 5 ஆண்டுகளில் தங்கத்தின் மீதான கடன்கள் கடந்த 2024 இல் 300% வளர்ச்சியை எட்டியுள்ளது. இதன் காரணமாக கடந்த ஆண்டு மட்டும் தங்கத்தை அடகு வைத்து கடன் பெறுவது முதன்முறையாக ரூ. 1 இலட்சம் கோடியைத் தாண்டியுள்ளது.

குறிப்பாக இந்தியாவின் பெண்களுக்கு மோசமான செய்திகள் தொடர்ந்து குவிந்து வருகின்றன. ஏனெனில் 2025 பிப்ரவரியில் மட்டும் தங்கம் வைத்து கடன் பெறுவது 71.3% அதிகரித்துள்ளதாக ரிசர்வ் வங்கியின் தரவுகள் காட்டுகிறது. அதுமட்டுமல்லாமல், சிபில்-நிதி ஆயோக் அறிக்கை, பெண்களுக்கு வழங்கப்படும் தங்க நகைக் கடன்கள் மட்டும் மொத்தக் கடன்களில் கிட்டத்தட்ட 40% என்று காட்டியுள்ளது. மேலும் தங்களுடைய நகைகளை வைத்து கடன் வாங்க வேண்டிய கட்டாயத்தில் உள்ள பெண்களின் எண்ணிக்கை கடந்த 5 ஆண்டுகளில் 22 சதவீதத்திற்கும் அதிகமாக உயர்ந்துள்ளது.

பொருளாதாரத்தை நிர்வகிப்பதில் மோடி அரசு தனது முழுமையான திறமையின்மையை மீண்டும் ஒருமுறை நிரூபித்துள்ளது. அதற்கான விலையை இந்தியாவில் உள்ள பெண்கள் கொடுக்கிறார்கள். ஏனெனில் கடந்த ஆண்டு முதல் ஏற்பட்டுள்ள தங்கத்தின் விலை உயர்வு மற்றும் கடனில் ஏற்பட்ட மந்தநிலை காரணமாக வங்கிகளின் தங்கக்கடன் 71.3 சதவீதம் உயர்ந்து, ரூ.1.72 இலட்சம் கோடியாக உயர்ந்துள்ளது.

மேலும் 2019 முதல் 2024 வரை ஆண்டுதோறும் 22% பெண்கள் தங்க நகையை வைத்து கடன் வாங்குபவர்கள் பட்டியலில் இணைந்துள்ளனர். தங்க நகைகளை வைத்து புதிதாக 4 கோடி பெண்கள், கடந்த 5 ஆண்டுகளில் மட்டும் ரூ. 4.7 இலட்சம் கோடி கடன் வாங்கியுள்ளனர்.

இது மிகவும் கவலையளிக்கும் நிகழ்வு மோடி அரசின் தோல்வி.

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

Leave a Response