தமிழீழம் குறித்த பரப்புரை தீவிரம் – உள்துறை அமைச்சகம் தகவல்

இந்தியாவில்,தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பு மீதான தடை இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை நீடிக்கப்பட்டு வந்தது.2019 இல் புலிகள் அமைப்பு மீதான தடையை ஐந்து ஆண்டுகளுக்கு நீடித்து ஒன்றிய உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டது.

இந்த உத்தரவு, மேலும் ஐந்தாண்டுகளுக்கு நீடிக்கப்படுவதாக ஒன்றிய அரசு கடந்த மே மாதம் அறிவித்தது. இதற்கிடையே, இந்த அமைப்புக்குத் தடை விதிக்கும் முகாந்திரங்களை ஆராய்ந்து முடிவு செய்ய, சட்டவிரோத தடுப்பு நடவடிக்கைகள் சட்டத்தின்படி, தில்லி உயர் நீதிமன்ற நீதிபதி ப்ரீதம் சிங் அரோரா தலைமையில் தீர்ப்பாயம் ஒன்றை ஒன்றிய உள்துறை அமைச்சகம் அமைத்தது.

இந்தத் தீர்ப்பாயமானது, சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்புச் சட்டத்தின் கீழ், புலிகள் அமைப்பைத் தடை செய்யப்பட்ட அமைப்பாக அறிவிப்பதில் ஆட்சேபனை இருப்பவர்கள் அல்லது அந்த இயக்கத்தைச் சேர்ந்தவர்கள் விளக்கமளிக்கலாம் என தெரிவித்திருந்தது.

இதையடுத்து,பழ.நெடுமாறன், ம.தி.மு.க பொதுச்செயலர் வைகோ உள்ளிட்ட பலர், விடுதலைப் புலிகள் அமைப்பு மீதான தடையை இரத்து செய்ய வேண்டும் எனக் கோரி தீர்ப்பாயத்தை அணுகினர்.

ஒன்றிய உள்துறை அமைச்சகம், தீர்ப்பாயத்தில் டிசம்பர் 6 அன்று தாக்கல் செய்த பிரமாண பத்திரத்தில், ‘புலிகள் அமைப்பினர் தனிநாடு கோரிக்கையை இன்னும் கைவிடாமல் தலைமறைவாகச் செயல்பட்டு வருகின்றனர். நிதி திரட்டுதல் மற்றும் தனிநாடு குறித்த பிரசார நடவடிக்கைகளை அந்த அமைப்பு தீவிரப்படுத்தியுள்ளது.வெளிநாடுகளில் வாழும் இந்த அமைப்பின் ஆதரவாளர்கள், பொதுமக்கள் மத்தியில் குறிப்பாக தமிழர்கள் மத்தியில் இந்திய எதிர்ப்பு பிரசாரத்தை தொடர்ந்து பரப்பி வருகின்றனர் எனத் தெரிவித்திருந்தது.

இதை அப்படியே ஏற்று கொண்ட தீர்ப்பாயம், புலிகள் அமைப்பின் மீதான ஐந்தாண்டு கால தடையை உறுதி செய்துள்ளது. இதுகுறித்து வெளியிடப்பட்ட குறிப்பில், புலிகள் அமைப்பின் நோக்கம், நாட்டின் இறையாண்மை மற்றும் பிராந்திய ஒருமைப்பாட்டை அச்சுறுத்துவதாக உள்ளது. எனவே, அந்த அமைப்பின் மீதான தடை செல்லும் எனத் தெரிவித்துள்ளது.

விடுதலைப்புலிகள் இயக்கமே இல்லை என்று சொல்லிக் கொண்டிருக்கும் அரசுகள்,அவர்கள் தொடர்ந்து செயல்படுகிறார்கள் என்றும் சொல்வது முரணாக உள்ளது என தமிழீழ ஆதரவாளர்கள் கூறுகின்றனர்.

Leave a Response