சென்னை தொலைக்காட்சி நிலையத்தின் பொன்விழா மற்றும் ‘இந்தி மாத’ நிறைவு விழா நிகழ்ச்சி அக்டோபர் 18 வெள்ளிக்கிழமை சென்னையில் நடைபெற்றது. இந்த விழாவுக்கு தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி தலைமை தாங்கினார். இந்த விழாவில் இசைக்கப்பட்ட தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடல் பாடியபோது, ‘தெக்கணமும் அதிற்சிறந்த திராவிட நல் திருநாடும்’ என்ற வரிகள் மட்டும் பாடப்படவில்லை. இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. தமிழ்நாட்டுத் தலைவர்கள் பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
நாம் தமிழர் கட்சித் தலைவர் சீமான், நாங்கள் ஆட்சிக்கு வந்தால் தமிழ்த்தாய் வாழ்த்தை தூக்கிவிடுவோம் என்று பேசியதாக சர்ச்சை எழுந்தது.
இது குறித்து தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ், நாங்கள் ஆட்சிக்கு வந்தால் தமிழ்த்தாய் வாழ்த்தை நீக்கி விடுவோம் என சீமான் பேசியிருப்பது வேதனையாக இருக்கிறது. பாராட்டுவதாக இருந்தாலும் திட்டுவதாக இருந்தாலும் தமிழ் மொழியில் பேசும் அவர் இப்படி சொல்வது வேதனைக்குரியது என்று கூறியிருந்தார்.
இந்நிலையில், இன்று காலை விமான நிலையத்தில் இதுகுறித்து விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவனிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.
அதற்கு அவர் அளித்த பதில்…
தமிழ்த்தாய் வாழ்த்தை நீக்குவோம் என்று சீமான் சொல்லவில்லை.தமிழ்த்தாய் வாழ்த்தை மேம்படுத்துவோம் என்றுதான் சொல்லியிருந்தார்.அவருக்கு திராவிடம் என்கிற சொல்லின் மீது ஓர் எதிர்ப்புணர்ச்சி இருக்கிறது.
திராவிடம் என்பது மரபினம்,தமிழர் என்பது தேசிய இனம்.திராவிட மரபினத்துக்குள் பல தேசிய இனங்கள் அடக்கம்.அவற்றில் ஒன்று தமிழினம்.அதனால் இரண்டையும் எதிரெதிராக நினைத்துக் குழப்பிக் கொள்ள வேண்டியதில்லை.பாவேந்தர் பாரதிதாசன், திராவிட இனம் என்றால் அது தமிழினம்தான் திராவிட நாடு என்றால் அது தமிழ்நாடுதான் என்று சொல்லியிருக்கிறார்.
தந்தை பெரியாருக்கு முன்பே திராவிடம் என்பதை பண்டிதர் அயோத்திதாசர் சொல்லியிருக்கிறார்.அது மரபினம் என்கிற அடிப்படையிலேயே சொல்லப்பட்டிருக்கிறது.
இவ்வாறு அவர் கூறியிருக்கிறார்.