மராட்டியத்தின் சிந்துதுர்க் மாவட்டத்தில் மராட்டிய மன்னர் சத்ரபதி சிவாஜியின் 35 அடி உயர சிலை ஒன்று நிறுவப்பட்டது. கடந்த ஆண்டு சிந்துதுர்க் மாவட்டத்தில் உள்ள கோட்டையில் டிசம்பர் 4 ஆம் தேதி கடற்படை தினத்தில் பிரதமர் மோடியால் இந்த சிலை முறைப்படி திறந்து வைக்கப்பட்டது. இந்த 35 அடி உயர சிலை ஆகஸ்ட் 26 ஆம் தேதி மதியம் 1 மணியளவில் திடீரென உடைந்து விழுந்து சிதறியது.
பல கோடி ரூபாய் மதிப்பில் கட்டப்பட்ட சத்ரபதி சிவாஜி சிலை 8 மாதங்களில் விழுந்து நொறுங்கியதால் மக்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
இதற்கு எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்தன.
இதுபற்றி மூத்த அதிகாரி ஒருவர் கூறும்போது, கடந்த சில நாட்களாக அந்த பகுதியில் கனமழை பெய்தது, பலத்த காற்று வீசியது ஆகியன சிலை உடைந்ததற்கான காரணம்.இது குறித்து நிபுணர்கள் உறுதி செய்வார்கள் என்றும் கூறினார்.
இந்த நிலையில், சிவாஜி சிலை உடைந்த விவகாரத்தை அரசியலாக்க வேண்டாம் எனவும், இந்த சம்பவத்திற்காக சத்ரபதி சிவாஜியின் பாதம் பணிந்து 100 முறை மன்னிப்பு கேட்கத் தயார் எனவும் மராட்டிய மாநில முதலமைச்சர் ஏக்நாத் ஷிண்டே தெரிவித்து இருந்தார்.
இதையடுத்து, சிவாஜி சிலை உடைந்ததற்கு மோடி மன்னிப்புக் கேட்க வலியுறுத்தி மராட்டியத்தில் காங்கிரசார் கருப்புக் கொடியுடன் போராட்டம் நடத்தினர்.மோடி மன்னிப்பு கேட்க வலியுறுத்தி மும்பையில் பல இடங்களில் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டன.எதிர்ப்பு வலுத்த நிலையில் மும்பையில் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற பிரதமர் நரேந்திர மோடி சத்ரபதி சிவாஜியிடம் மன்னிப்பு கோரியுள்ளார்.
அப்போது அவர் கூறியதாவது…
சிந்துதுர்க்கில் உள்ள ராஜ்கோட் கோட்டையில் சத்ரபதி சிவாஜி மகாராஜ் சிலை உடைந்ததற்காக மன்னிப்பு கோருகிறேன். எனக்கும், எனது சகாக்களுக்கும், எல்லோருக்கும் சிவாஜி மகாராஜ் ஓர் அரசர் மட்டுமல்ல, அவர் மரியாதைக்குரியவர். சத்ரபதி சிவாஜியை கடவுளாக வணங்கும் அனைவரின் உணர்வுகளையும் புண்படுத்தியதற்காக நான் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன். என்னுடைய ‘பண்பு’ முற்றிலும் வேறுபட்டது. எங்களைப் பொறுத்தவரை, எங்கள் வணக்கத்துக்குரிய தெய்வத்தை விட எதுவும் பெரியது அல்ல
இவ்வாறு அவர் பேசினார்.
சிலை நொறுங்கியது தொடர்பாக வழக்குப் பதிவு செய்யப்பட்டு சிலை கட்டமைப்பு ஆலோசகர் சேத்தன் பாட்டீல் நேற்று (ஆகஸ்ட் 29) கோலாப்பூரில் கைது செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.