வேலுமணியிடம் அடிபணிந்த எடப்பாடி – தேர்தல் புறக்கணிப்பு பின்னணி

விக்கிரவாண்டி சட்டமன்றத் தொகுதிக்கான இடைத்தேர்தல் ஜூலை மாதம் 10 ஆம் தேதி நடைபெற உள்ளது.
இதில் திமுக சார்பில் அன்னியூர் சிவா போட்டியிடுகிறார்.பாமக சார்பில் அன்புமணி போட்டியிடுகிறார்.நாம் தமிழர் கட்சி சார்பில் அபிநயா போட்டியிடுகிறார்.

அடுத்து அதிமுக வேட்பாளரை அறிவிக்கும் என்று எதிர்பார்த்திருந்த நிலையில், நேற்று அதிமுகவின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி விக்கிரவாண்டி சட்டமன்றத் தொகுதியில் போட்டியிடுவது குறித்தான ஆலோசனையில் மூத்த நிர்வாகிகளுடன் ஈடுபட்டிருந்தார். அந்த ஆலோசனைக்குப் பிறகு வெளியான அறிக்கையில் அதிமுக இந்த இடைத்தேர்தலை புறக்கணிக்கப்போவதாக அறிவிப்பு வெளியிடப்பட்டது.

தேர்தல் சுதந்திரமாகவும், நியாயமாகவும் நடைபெறாது என்பதன் காரணமாகவே விக்கிரவாண்டி சட்டமன்றத் தொகுதிக்கான இடைத்தேர்தலை அதிமுக புறக்கணிப்பதாக எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளார். இனிவரக்கூடிய 2026 ஆம் ஆண்டு சட்டமன்றப் பொதுத்தேர்தலில் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் அதிமுக மீண்டும் களம் காணும், அதற்கான தேர்தல் முன்னேடுப்புகளை நடத்த வேண்டும் என அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

இது அதிமுக தொண்டர்களை கடும் மனச்சோர்வுக்கு ஆளாக்கியுள்ளது.

இப்போதைய சூழலில் தேர்தல் புறக்கணிப்பு என்கிற முடிவால், தேர்தலுக்கு முன்பே நம்முடைய தோல்வியை நாமே ஒப்புக்கொண்டோம் என்றாகிறது.அதோடு,இந்தத் தேர்தலில் அதிமுகவினரின் வாக்குகளைப் பெற பாமக பல்வேறு உத்திகளைக் கையாளும்.அது அக்கட்சிக்குப் பலனளிக்கும்.நமக்கு பெரும் பலவீனமாகிவிடும்.மேலும், பாஜகவுடன் கள்ளக் கூட்டணியில் இருக்கிறோம் என்கிற எதிர்க்கட்சிகள் சொல்வதை மெய்ப்பிப்பது போல் உள்ளது.

சசிகலா, ஓபிஎஸ் ஆகியோருக்கு எதிராகச் செயல்படுவதால் ஏற்கெனவே தேவர் சமுதாய மக்கள் அதிமுகவை ஏற்க மறுக்கிறார்கள். வன்னிய சமுதாய மக்களும் அதிமுக வை ஏற்றுக்கொள்ளவில்லை என்பதும் உங்கள் முடிவின் மூலம் தெரியவருகிறது.

இந்தக் காரணங்கள் 2026 ஆம் ஆண்டிலும் நிச்சயம் எதிரொலிக்கும்.அப்போது நம்முடைய நிலைமை என்ன?உங்களை நம்பியவர்களையும் நட்டாற்றில் விடுவது நியாயமா?

இவ்வாறெல்லாம் அதிமுக தொண்டர்கள் எடப்பாடி பழனிச்சாமியை நோக்கிக் கேள்விகள் எழுப்பி வருகின்றனர்.

இன்னொரு பக்கம், எடப்பாடி பழனிச்சாமி அணிக்குள்ளேயே பாஜகவுடன் கூட்டணி வைக்க வேண்டும் என்று வேலுமணி கூறிவருகிறார்.அதை இவ்வளவுநாள் மறுத்து வந்த எடப்பாடி பழனிச்சாமி இப்போது வேலுமணியிடம் அடிபணிந்திருக்கிறார்.அதன் விளைவுதான் பாஜக பாமக கூட்டணிக்குச் சாதகமாக தேர்தல் புறக்கணிப்பு முடிவை எடுத்திருக்கிறார்கள் என அரசியல் நோக்கர்கள் கூறுகின்றனர்.

Leave a Response