சூழலைக் கேடாக்கி யாழ்ப்பாணத்தில் சர்வதேச துடுப்பாட்ட மைதானமா? – ஐங்கரநேசன் கடும் எதிர்ப்பு

தமிழ்த் தேசியப் பசுமை இயக்கத்தின் தலைவர் பொ.ஐங்கரநேசன், செம்மணியில் சர்வதேசத் தரத்திலான துடுப்பாட்ட மைதானத்தை அமைப்பதற்கான முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளமை ஆபத்தானது என எச்சரித்துள்ளார்.

இது தொடர்பாக விடுத்துள்ள அறிக்கையில்…

செம்மணியில் முன்னர் உப்பளம் இருந்த பகுதியில் சர்வதேசத் துடுப்பாட்ட மைதானம் ஒன்றை அமைப்பதற்கான பகீரத முயற்சியில் நகர அபிவிருத்தி அதிகாரசபை ஈடுபட்டுள்ளது. ஏற்கனவே செம்மணியில் கட்டுமானங்களை மேற்கொள்வதற்குப் பல்வேறு தரப்பினராலும் முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டபோது, வடக்கு மாகாணசபை அவற்றை நிராகரித்திருந்தது.

தற்போது வடக்கு மாகாணசபையில் மக்கள் பிரதிநிதித்துவம் இல்லாத நிலையில் செம்மணியில் சர்வதேசத்தரத்தில் துடுப்பாட்ட மைதானம் ஒன்றை அமைப்பதற்கான முயற்சிகள் சாதக பாதகங்களை ஆராயாது முடுக்கிவிடப்பட்டுள்ளன.

செம்மணியில் இத் துடுப்பாட்ட மைதானம் அமைந்தால் அயற்பிரதேசங்கள் மாரியில் வெள்ளத்தில் மூழ்கும் அபாயமும், கோடையில் கடும் நீர்ப்பஞ்சத்துக்கு ஆளாகும் அபாயமும் நேரிடும்.

செம்மணி உப்பளப்பகுதி குடா நாட்டின் பிரதான கடல் நீரேரிகளில் ஒன்றான உப்பாற்றுக் கடல் நீரேரியை அண்டிய தாழ்வான ஈரநிலம் ஆகும். வெளிப்பார்வைக்கு முக்கியத்துவமற்ற வெட்டவெளியாகத் தென்படும் இப்பகுதி சூழலியல் ரீதியாக இன்றிமையாத பங்களிப்புகளை வழங்கி வருகிறது.

மாரியில் சுற்றயல் கிராமங்களில் இருந்து வரும் வெள்ள நீரைத்தேக்கி வைத்து நிலத்தடி நீர் மட்டத்தைப் பேணுவதோடு, நிலம் உவராவதையும் தடுக்கிறது. கூடவே, மேலதிக நீரைக் குடாநாட்டின் இன்னுமொரு கடல்நீரேரியான யாழ்ப்பாணக் கடல் நீரேரிவழியாகக் கடலுக்குள் அனுப்புவதன் மூலம் குடியிருப்புகளையும் வயல் நிலங்களையும் வெள்ளத்தில் மூழ்காமல் பாதுகாக்கவும் செய்கிறது.

அபிவிருத்தி முதலீட்டாளர்களின் வசதிகளையும் நலன்களையும் மாத்திரமே கருத்திற் கொள்வதாயின் அது நிலைபேறானதாக ஒருபோதும் அமையாது. அபிவிருத்தியில் சுற்றுச்சூழலினதும், அது சார்ந்த சமூகத்தினதும், நலன்கள் முன்னுரிமை பெறும்போதே அது நீடித்த – நிலையான – அபிவிருத்தியாக அமையும்.

அந்த வகையில் யாழ் நகரின் நுழைவாசல் என்பதற்காக மாத்திரமே செம்மணியில் துடுப்பாட்ட மைதானத்தை அமைப்பதற்கு முற்படுவது எவ்வகையிலும் ஏற்புடையது அல்ல. இதனை இதுவரையில் அபிவிருத்திகள் எதனையும் காணாத தீவகத்தின் பகுதிகளில் ஒன்றில் நிறுவுவதே சாலச்சிறந்தது ஆகும்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Leave a Response