2006-11 திமுக ஆட்சிக் காலத்தில் உயர் கல்வி மற்றும் கனிமவளத் துறை அமைச்சராக இருந்தார் பொன்முடி. அப்போது, வருமானத்துக்கு அதிகமாக ரூ.1.72 கோடி அளவுக்கு சொத்து குவித்ததாக பொன்முடி, அவரது மனைவி விசாலாட்சி ஆகியோருக்கு எதிராக அதிமுக ஆட்சி காலத்தில் விழுப்புரம் மாவட்ட இலஞ்ச ஒழிப்புத் துறை, ஊழல் தடுப்புச் சட்டத்தின்கீழ் வழக்குப் பதிவு செய்தது.2011 ஆம் ஆண்டு இது நடந்தது.
தொடக்கத்தில், விழுப்புரம் மாவட்ட தலைமை குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் இந்த வழக்கு விசாரணை நடந்து வந்தது. பின்னர், விழுப்புரம் மாவட்ட ஊழல் தடுப்பு சிறப்பு நீதிமன்றத்துக்கு 2015 ஆம் ஆண்டு மாற்றப்பட்டது. வழக்கை விசாரித்த நீதிபதி சுந்தரமூர்த்தி, இந்த வழக்கில் பொன்முடி, விசாலாட்சி மீதான குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்படவில்லை என்று கூறி இருவரையும் விடுதலை செய்து 2016 ஏப்ரல் 18 ஆம் தேதி தீர்ப்பு அளித்தார்.
இதை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் இலஞ்ச ஒழிப்புத் துறை சார்பில் 2017 ஆம் ஆண்டு மேல்முறையீடு செய்யப்பட்டது. பல ஆண்டுகளாக நிலுவையில் இருந்த இந்த வழக்கு விசாரணை, இறுதியாக நீதிபதி ஜி.ஜெயச்சந்திரன் முன்பு நடந்து வந்தது.
இப்போது இந்த வழக்கில், தமிழக உயர் கல்வித் துறை அமைச்சர் பொன்முடிக்கும், அவரது மனைவி விசாலாட்சிக்கும் தலா 3 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், ரூ.50 இலட்சம் அபராதமும் விதித்து சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி ஜி.ஜெயச்சந்திரன் இன்று உத்தரவிட்டார்.
அதில், விழுப்புரம் சிறப்பு நீதிமன்றம் இந்த வழக்கை மேலோட்டமாக விசாரித்துள்ளது. வருமானத்துக்கு அதிகமாக ரூ.1.72கோடி அளவுக்கு, அதாவது 64.90 சதவீதம் அளவுக்கு அமைச்சர் பொன்முடியும், அவரது மனைவி விசாலாட்சியும் சொத்துகுவித்துள்ளதாக ஊழல் தடுப்புச் சட்டத்தின்கீழ் இலஞ்ச ஒழிப்பு காவல்துறையினர் சுமத்தியுள்ள குற்றச்சாட்டுகள் சரிவர நிரூபணமாகியுள்ளன. ஆனால், அவர்களது வருமானத்தை தனித்தனியாகப் பிரித்துப் பார்த்து, வருமான வரிக் கணக்கு அடிப்படையில் இருவரையும் சிறப்பு நீதிமன்றம் விடுதலை செய்தது அடிப்படையிலேயே தவறு. அந்தத் தீர்ப்பை இரத்து செய்கிறேன்.
பொது ஊழியரான அமைச்சர் பொன்முடிக்கு, கணக்கில் காட்டப்படாத வகையில் வந்த வருமானம் மூலம் அவரது மனைவி விசாலாட்சி பல்வேறு சொத்துகளை வாங்கிக் குவித்துள்ளார். இந்த மூலதன வருமானத்தை சிறப்பு நீதிமன்றம் கவனத்தில் கொள்ளவில்லை. எனவே, இந்த வழக்கில் இருவரும் குற்றவாளிகள் என்று நீதிபதி தனது தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளார்.
அதேசமயம், மேல்முறையீடு செய்வதற்காக 30 நாட்கள் இந்தத் தண்டனை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
மக்கள் பிரதிநிதித்துவ சட்டம் பிரிவு 8(1)-ன்படி, ஊழல் தடுப்பு போன்ற சட்டங்களின்கீழ் குற்றவாளி என அறிவிக்கப்பட்டாலே சம்பந்தப்பட்ட மக்கள் பிரதிநிதிகள் தகுதி இழப்புக்கு ஆளாக நேரிடும். மேலும், ஊழல் தடுப்புச் சட்டத்தின்கீழ், தண்டனை விதிக்கப்படாமல் ஒரு ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டாலும் கூட தகுதி இழப்பு செய்யப்படுவார்கள். அதுபோல, இந்த வழக்கில் சிறைத் தண்டனையை அனுபவித்து விடுதலை செய்யப்பட்டாலும், அதன்பிறகு 6 ஆண்டுகளுக்கு தேர்தலில் போட்டியிட முடியாது.
தற்போது ஊழல் தடுப்புச் சட்டத்தின்கீழ் பொன்முடி குற்றவாளி என உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்து, 3 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து உத்தரவிட்டதால், தனது அமைச்சர் பதவியை பொன்முடி இழந்துள்ளார்.
இதனால், பொன்முடி கவனித்து வந்த உயர் கல்வித் துறையை, பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத் துறை அமைச்சர் இராஜகண்ணப்பனுக்கு ஒதுக்கீடு செய்யக் கோரி ஆளுநருக்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் அனுப்பியிருந்தார். இதையடுத்து, பொன்முடி வகித்து வந்த துறைகளை அமைச்சர் இராஜகண்ணப்பனுக்கு ஒதுக்கீடு செய்ய ஆளுநர் ஆர்.என்.இரவி ஒப்புதல் அளித்தார். மேலும், அமைச்சர் இராஜகண்ணப்பன் வசம் இருந்த கதர், கிராமத்தொழில் துறை, அமைச்சர் ஆர்.காந்திக்கு கூடுதல் பொறுப்பாக வழங்கவும் ஆளுநர் ஒப்புதல் அளித்துள்ளார்.