திமுக அரசின் மோசமான இன்னொரு சட்டம் – உடனே திரும்பப் பெற கி.வெங்கட்ராமன் கோரிக்கை

நிலத்தையும் ஏரி குளங்களையும் பெருங்குழுமங்களுக்கு வாரிக் கொடுக்கும் சட்டத்தை தமிழ்நாடு அரசே திரும்பப் பெறு என தமிழ்த்தேசியப் பேரியக்க பொதுச் செயலாளர் கி.வெங்கட்ராமன் வலியுறுத்தியுள்ளார்.

அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்…..

தமிழ்நாடு அரசு, 21.04.2023 அன்று சட்டப்பேரவைக் கூட்டத்தொடரின் கடைசி நாளில், இன்னொரு மோசமான – தீய விளைவுகளை ஏற்படுத்தும் சூழல் அழிப்புச் சட்டம் ஒன்றை அவசரகதியில் நிறைவேற்றி இருக்கிறது.

“தமிழ்நாடு சிறப்புத் திட்டங்களுக்கான நில ஒருங்கிணைப்புச் சட்டம் – 2023” (Tamilnadu Land Consolidation for Special Projects Act, 2023) என்ற ஒன்றை குரல் வாக்கெடுப்பின் மூலம் நிறைவேற்றி இருக்கிறது. 100 ஏக்கருக்கு மேல் நிலம் தேவைப்படும் சிறப்புத் திட்டங்களுக்கு, அதிலுள்ள மக்கள் பயன்பாட்டுக்கான வாய்க்கால்கள், ஓடைகள், குளம், ஏரி ஆகியவற்றையும் சேர்த்து தனியாருக்கு வழங்கலாம் என்று இச்சட்டம் கூறுகிறது.

அந்த நீர் நிலைகளை அத்தனியார் நிறுவனங்களே பத்திரமாகப் பார்த்துக் கொள்ளும் என்றும் இச்சட்டம் நம்பிக்கை தெரிவிக்கிறது.

உண்மையில், பெருங்குழும நிறுவனங்கள் நீர்நிலைகளையும் சேர்த்து, விழுங்கிக் கொள்ளலாம் என்பதற்கு அரசு வழங்கும் உரிமம் தான் இச்சட்டம்!

எடுத்துக்காட்டாக, பரந்தூர் பகுதி மக்கள் கிட்டத்தட்ட ஓராண்டாக விமான நிலைய விரிவாக்கத்திற்கு தங்கள் விளை நிலங்களையும், அங்கே பாசனத்திற்கும் குடிநீருக்கும் பயன்படும் நீர்நிலைகளையும் ஆக்கிரமிப்பதை எதிர்த்து வாழ்வா, சாவா போராட்டம் நடத்திக் கொண்டிருக்கிறார்கள். பக்கத்து ஊர்களில் இருந்துகூட இப்போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து மக்கள் கூடிவிடாமல், காவல்துறை முற்றுகையில் அக்கிராமங்கள் வைக்கப்பட்டிருக்கின்றன.

இந்தக் கொடிய அடக்குமுறைக்கும், இருட்டடிப்புக்கும் இடையிலும் அம்மக்கள் விடாப்பிடியாக மண் காப்புப் போராட்டத்தை நடத்திக் கொண்டிருக்கிறார்கள். ஒரு பக்கம், இதுகுறித்து ஆய்வுக் குழு அமைத்திருப்பதாகச் சொல்லிக் கொள்ளும் தமிழ்நாடு அரசு, இப்போது நிறைவேற்றி இருக்கிற நில ஒருங்கிணைப்புச் சட்டத்தின் வழியாக பரந்தூர் பகுதியிலுள்ள நீர் நிலைகள் உள்ளிட்ட நிலங்களைப் பறிப்பதற்கான சூதான திட்டம் தீட்டியிருக்கிறது.

இதுமட்டுமின்றி, இனி எந்த நிலப்பறிப்பையும், நீர்நிலை ஆக்கிரமிப்பையும் “சிறப்புத் திட்டம்” என்ற பெயரால், தமிழ்நாடு அரசின் உதவியோடே தனியார் பெருங்குழுமங்கள் செய்ய முடியும்.

நீர்நிலைகளையும் சுற்றுச்சூழலையும் பாதுகாப்பதற்கென்று தமிழ்நாட்டில் செயலிலுள்ள எந்தச் சட்டமும் இனி இவ்வாறான சிறப்புத் திட்டப் பகுதிகளில் செல்லாது. நீர்நிலைகளை பாழாக்கி, சுற்றுச்சூழலைக் கெடுத்து, புவி வெப்பமாதலைக் கூடுதலாக்குவதற்கு இவ்வாறான சட்டங்களைப் போட்டுக் கொண்டே சுற்றுச்சூழல் பாதுகாப்பிற்கு தனி ஆய்வுக்குழு அமைத்திருப்பதாக “திராவிட மாடல்” மு.க. ஸ்டாலின் அரசு நாடகமாடுகிறது.

மக்கள் வாழ்விடத்தையும், வாழ்வுரிமையையும் நில உரிமையையும் பறிக்கிற, சுற்றுச்சூழலை நாசமாக்கிற இச்சட்டத்தை தமிழ்நாடு அரசு உடனடியாகத் திரும்பப் பெற வேண்டும் என தமிழ்த்தேசியப் பேரியக்கம் சார்பில் வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Leave a Response