தேர்தல் ஆணையத்தின் கடைசிவரியால் ஓபிஎஸ் மகிழ்ச்சி

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைவுக்குப் பின்னர், அதிமுகவின் நிரந்தரப் பொதுச் செயலாளர் பதவி ஜெயலலிதாவுக்கு வழங்கப்பட்டது. ஒருங்கிணைப்பாளராக ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளராக பழனிச்சாமி ஆகியோர் பொறுப்பேற்றனர்.

கடந்த சட்டப்பேரவைத் தேர்தலின்போது முதல்வர் வேட்பாளர் தேர்வு, தேர்தலுக்குப் பின்னர் பேரவை எதிர்க்கட்சித் தலைவர் தேர்வு, மாநிலங்களவை உறுப்பினர் தேர்வு ஆகியவற்றின்போது இபிஎஸ், ஓபிஎஸ் ஆகியோருக்கிடையே பிரச்சினைகள் ஏற்பட்டன. இதனால், கட்சிக்கு ஒற்றைத் தலைமை தேவை என முடிவு செய்த பழனிச்சாமி,2022 ஆம் ஆண்டு ஜூலை 11 ஆம் தேதி நடைபெற்ற பொதுக்குழுவில் அதிமுக இடைக்காலப் பொதுச் செயலாளராகப் பொறுப்பேற்றுக் கொண்டார். மேலும், பன்னீர்செல்வம், அவரது ஆதரவாளர்களைக் கட்சியில் இருந்து நீக்கினார்.

ஆனால், பொதுக்குழுக் கூட்டம் செல்லாது என்று அறிவிக்கக் கோரி, உச்ச நீதிமன்றத்தில் பன்னீர்செல்வம் வழக்குத் தொடர்ந்தார். இதில், பொதுக்குழு செல்லும் என்று தீர்ப்பளிக்கப்பட்டது. அதைத்தொடர்ந்து, மார்ச் மாதம் பொதுச் செயலாளர் தேர்தல் அறிவிக்கப்பட்டு, பழனிச்சாமி வேட்புமனு தாக்கல் செய்தார். இந்தத் தேர்தலையும் நிறுத்தக் கோரி பன்னீர்செல்வம் உயர் நீதிமன்றத்தை நாடினார். அதிலும் பழனிச்சாமிக்குச் சாதகமாக தீர்ப்பு வந்ததால், மார்ச் 28 ஆம் தேதி அதிமுக பொதுச்செயலாளராக பழனிச்சாமி பொறுப்பேற்றுக் கொண்டார்.

எனினும், ஒருங்கிணைப்பாளர் கையெழுத்தின்றி நடத்தப்பட்ட அதிமுக பொதுக்குழு மற்றும் பொதுச் செயலாளர் தேர்தல் செல்லாது என்று பன்னீர்செல்வம் கூறிவந்தார்.

இதற்கிடையில், பொதுக்குழு மற்றும் பொதுச் செயலாளர் தேர்வு ஆகியவற்றைத் தேர்தல் ஆணையம் அங்கீகரிக்காமல் இருப்பதை எதிர்த்து, டெல்லி உயர் நீதிமன்றத்தில் பழனிச்சாமி வழக்குத் தொடர்ந்தார். இதில் 10 நாட்களுக்குள் முடிவு எடுக்குமாறு தேர்தல் ஆணையத்துக்கு நீதிமன்றம் உத்தரவிட்டது.

இந்தச் சூழலில், அதிமுக பொதுக்குழு மற்றும் பழனிச்சாமி பொதுச் செயலாளராகப் பொறுப்பேற்றதை தேர்தல் ஆணையம் அங்கீகரித்து, அதற்கான உத்தரவை இணையதளத்தில் நேற்று வெளியிட்டது.

எனினும், இந்த உத்தரவு நீதிமன்றத்தின் இறுதித் தீர்ப்புக்கு உட்பட்டது என்று குறிப்பிட்டுள்ளது.

அதேபோல, கர்நாடகா சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிடும் அதிமுக வேட்பாளருக்கு இரட்டை இலை சின்னம் ஒதுக்குமாறு, அம்மாநில தலைமை தேர்தல் அதிகாரிக்கு தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

இதுகுறித்துக் கருத்துச் சொன்ன ஓபிஎஸ் அணியின் பண்ருட்டி இராமச்சந்திரன், இது தற்காலிகம்தான் என்று கூறியுள்ளார்.

அதோடு,கர்நாடகா தேர்தலில் எடப்பாடி பழனிச்சாமி அணிக்குப் போட்டியாக பன்னீர்செல்வமும் தனது வேட்பாளர்களை அறிவித்து விட்டார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்…

மே 10 ஆம் தேதி நடைபெறவுள்ள கர்நாடக சட்டப்பேரவை பொதுத் தேர்தலில் புலிகேசி நகர் சட்டமன்றத் தொகுதியில் நெடுஞ்செழியன்(கர்நாடக மாநில மாணவர் அணிச் செயலாளர்), கோலார் தங்க வயல் தொகுதியில் அனந்தராஜ்(கர்நாடக மாநில தலைவர்), காந்தி நகர் தொகுதியில் குமார் (கர்நாடக மாநிலச் செயலாளர்) ஆகியோர் நிறுத்தப்படுகின்றனர் என்று ஓ.பன்னீர்செல்வம் கூறியுள்ளார்.

இரட்டை இலை சின்னம் எடப்பாடி பழனிச்சாமிக்குத்தான் என்று தேர்தல் ஆணையம் கூறிவிட்டதால், ஓ.பன்னீர்செல்வம் அணி சுயேச்சை சின்னத்தில்தான் போட்டியிட வேண்டிய சூழ்நிலை உருவாகியுள்ளது.

எடப்பாடி பழனிச்சாமி அணி சார்பில், புலிகேசி தொகுதியில் அன்பரசன் போட்டியிடுவார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

அந்த ஒரு தொகுதியில் ஓபிஎஸ் அணிக்கு எவ்வளவு வாக்குகள் கிடைக்கின்றன என்பதோடு மற்ற இரு தொகுதிகளிலும் ஓபிஎஸ் அணிக்கே மொத்த வாக்குகளும் கிடைக்கும் என்று சொல்லப்படுவதால், மக்கள் எங்கள் பக்கம் என ஓபிஎஸ் அணி மார்தட்டும் என்றும் சொல்லப்படுகிறது.

Leave a Response