அடித்த அடி அப்படி – அடுத்த சில மணிநேரங்களில் ஒப்புதல் அளித்த ஆளுநர்

தமிழகத்தில் இணையதளச் சூதாட்ட விளையாட்டில் பணத்தை இழந்து பலர் தற்கொலை செய்து கொண்டதைத் தடுக்க கடந்தாண்டு அக்டோபர் மாதம், அவசரச் சட்டம் பிறப்பிக்கப்பட்டது. இந்தச் சட்டத்துக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி ஒப்புதல் அளித்தார். அதைத்தொடர்ந்து, அக்டோபர் 19 ஆம் தேதி சட்டப்பேரவைக் கூட்டத்தில், இதற்கான சட்ட மசோதா நிறைவேற்றப்பட்டு ஆளுநர் ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

மசோதாவில் சில விளக்கங்களை ஆளுநர் கேட்டார். அதற்கு உடனடியாக பதில் அளிக்கப்பட்டது. பின்னர், 4 மாதங்கள் கழித்து, அந்த சட்ட மசோதாவை, தமிழகஅரசுக்கு சட்டமியற்ற அதிகாரமில்லை என்று கூறி ஆளுநர் திருப்பியனுப்பினார்.

இதையடுத்து, இணையதளச் சூதாட்டத் தடை மசோதா சட்டப்பேரவையின் நடப்புக் கூட்டத் தொடரில் மீண்டும் நிறைவேற்றப்பட்டது. உடனடியாக மசோதா, தமிழக சட்டத்துறைக்கு அனுப்பி வைக்கப்பட்டு, அனைத்து விவரங்களும் சரிபார்க்கப்பட்டது. அந்த மசோதா மற்றும் ஆளுநர் கோரிய விளக்கங்கள் என அனைத்தும் தமிழக சட்டத்துறையின் மூலம் ஆளுநருக்கு ஒப்புதலுக்காக அனுப்பி வைக்கப்பட்டது.

அதற்கும் உடனையாக ஒப்புதல் தராமல் இருந்தார் ஆளுநர்.அதோடு, சில தினங்களுக்கு முன் ஓரு நிகழ்ச்சியில் பேசிய ஆளுநர் ரவி, “ஆளுநர் ஒரு மசோதாவுக்கு ஒப்புதல் அளிக்காமல் நிறுத்தி வைக்கிறார் என்றால், அது நிராகரிக்கப்பட்டதாகவே பொருள்” என்று பேசினார். அதும் பெரும் சர்ச்சையையும் விவாதத்தையும் கிளப்பியது.

இதன் தொடர்ச்சியாக, சட்டப்பேரவையில் நிறைவேற்றி அனுப்பப்படும் மசோதாக்களுக்கு ஆளுநர் ஒப்புதல் வழங்க குறிப்பிட்ட கால நிர்ணயம் செய்ய, ஒன்றிய அரசையும், குடியரசுத் தலைவரையும் வலியறுத்தும், அரசின் தனித் தீர்மானம் இன்று தமிழக சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டது.

இந்த நிலையில், தமிழக சட்டப்பேரவையில் மீண்டும் நிறைவேற்றப்பட்ட இணையதளச் சூதாட்டத் தடை மசோதாவுக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி ஒப்புதல் அளித்துள்ளார். இந்தச் சட்டம் விரைவில் அமலுக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தமிழ்நாடு அரசு அடித்த அடியினால் அடுத்த சில மணி நேரங்களில் ஆளுநர் ஒப்புதல் வழங்கிவிட்டதாக அரசியல்பார்வையாளர்கள் கூறுகின்றனர்.

Leave a Response