கர்நாடகா மாநிலத்தில் வரும் மே 10 ஆம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற உள்ளது. வாக்கு எண்ணிக்கை மே 13 ஆம் தேதி நடக்கிறது.
இப்போது அரசியல்கட்சிகள் வேட்பாளர் அறிவிப்பு பரப்புரை என்று வேகமாகச் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. காங்கிரசு மற்றும் ஜனதாதளம் கட்சிகள் முதல்கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியிட்டுள்ளது. ஆனால் பாஜக வேட்பாளர் பட்டியலையே அறிவிக்க முடியாமல் திணறிவருகிறது.
அங்கு எடுக்கப்படும் கருத்துக்கணிப்புகள் காங்கிரசு வெற்றி பெற்று ஆட்சியமைக்கும் என்று சொல்கின்றன. இந்நிலையில், காங்கிரசு பாராளுமன்ற உறுப்பினர் ரன்தீப் சுர்ஜ்வாலா கூறியுள்ள தகவல் அதிர்ச்சி தருவதாக உள்ளது.
அவர் கூறியதாவது….
கர்நாடகா தேர்தலில் பாஜக அமைச்சர்கள், சட்டமன்றகள் தங்களின் தொகுதிகளில் போட்டியிட மறுத்து வருகின்றனர். இதனால் வேட்பாளர்களைத் தேர்ந்தெடுக்க அக்கட்சி திணறிவருகிறது இதுகுறித்த ஆதாரம் எங்களிடம் இருக்கிறது. கர்நாடகாவில் மிகப்பெரிய அளவில் பாஜகவினர் கட்சியில் இருந்து வெளியேறி வருகின்றனர். 10க்கும் அதிமாக எம்எல்ஏக்கள், எம்எல்சிக்கள், முன்னாள் எம்எல்ஏ, எம்எல்சி.,க்கள், வாரியம் மற்றும் கார்ப்பரேஷன் தலைவர்கள் தங்களின் பதவிகளை ராஜினாமா செய்துவிட்டு காங்கிரஸில் இணைந்து வருகின்றனர்.
இதனால், பிரதமர் மோடி அவரது கடைசி அஸ்திரத்தைப் பயன்படுத்த முடிவு செய்துள்ளார். அந்த முயற்சியும் மோசமான தோல்வியைச் சந்திக்கும். மாநில காங்கிரசுத் தலைவர்கள், வேட்பாளர்கள், தேர்தலில் போட்டிய தகுதியான கட்சி உறுப்பினர்களின் வீடுகளில் சோதனை நடத்துவதற்காக நூற்றுக்கணக்கான வருமான வரித்துறை, அமலாக்கத்துறை அதிகாரிகள் கர்நாடகாவிற்கு அனுப்பப்பட்டுள்ளதாக எங்களுக்குத் தகவல் கிடைத்துள்ளது.
ஆனால், பிரதமர் மோடி மற்றும் அவரது வருமானவரித்துறை, அமலாக்கத்துறையினரால் போலியாக, மோசடியாக நடத்தப்படும் இந்த சோதனைகளால் மாநிலத்தில் ஆட்சியைப் பிடிக்கும் நிலையில் இருக்கும் காங்கிரசைத் தடுத்து நிறுத்த முடியாது.
பாஜகவின் வருமானவரித்துறை, அமலாக்கத்துறையால், மக்களின் உதவியுடன் 150க்கும் அதிகமான இடங்களில் வெற்றி பெற இருக்கும் காங்கிரசின் இந்தப் பயணத்தைத் தடுக்க முடியாது. எங்களுக்குக் கிடைத்திருக்கும் தகவலின் படி, நாளை சோதனை நடத்த இருக்கும் அனைத்து புலனாய்வு அமைப்பு அதிகாரிகளுக்கும் நாங்கள் அழைப்பு விடுக்கிறோம், நீங்கள் செய்யும் ஒவ்வொரு தவறுகளுக்கும் பாஜக அரசு கணக்குக் கொடுக்க வேண்டியதாக இருக்கும்”
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
இது பாஜகவுக்கு மேலும் பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது என்கிறார்கள்.