ஈரோடு மாவட்டம் கோபியில் கட்சி அலுவலகக் கட்டுமானப் பணியை இந்திய கம்யூனிஸ்ட் தமிழகச் செயலாளர் முத்தரசன் நேற்று ஆய்வு செய்தார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது அவர் கூறியதாவது……
மதம், ஜாதி, மொழி பிரச்னையை ஏற்படுத்தி அதன் மூலம் மக்களைப் பிளவுபடுத்தி குறுகிய அரசியல் நோக்கத்தை பா.ஜ.க நிறைவேற்றப் பார்க்கிறது. அதில் அவர்களால் வெற்றி பெற முடியாது.
பாஜக ஆட்சியில் இல்லாத மாநிலங்களில் ஆளுநர்களைப் பயன்படுத்தி அரசுகளுக்கு இடையூறு செய்து வருகின்றனர். இங்குள்ள ஆளுநர் ரவி அவருடைய வேலையைச் செய்யாமல் சர்ச்சைக்குரிய பிரச்னைகளை கையாளுகிறார், பேசுகிறார். அரசியல் சட்டத்திற்கு எதிராகவும், மதசார்பின்மைக்கு எதிராகவும் சனாதனத்திற்கு ஆதரவாகவும் செயல்பட்டு வருகிறார். அவர் திருந்தாத நிலையில் மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியில் உள்ள மக்களவை உறுப்பினர்கள் மாநிலங்களவை உறுப்பினர்கள் 50 பேர் கையெழுத்திட்டு குடியரசுத் தலைவரிடம் கொடுத்து இவரைத் திரும்பப் பெற வேண்டும் என்று வலியுறுத்த இருக்கிறோம்.
ஆளுநர் ராஜினாமா செய்து விட்டு பாஜக கட்சிப் பணியைச் செய்யட்டும். ஆளுநராக இருந்து கொண்டு பாஜகவிற்கு ஊது குழலாகச் செயல்படுவதை அனுமதிக்க முடியாது.
தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு விவகாரத்தில் நடவடிக்கையானது அதிகாரிகளோடு நின்று விடாமல் இதில் முதன்மை குற்றவாளியாக எடப்பாடி பழனிச்சாமியைச் சேர்க்க வேண்டும். தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையைப் பொருத்தவரை அவர் மோடி, அமித்ஷா தூண்டுதல் பேரில் தமிழகத்தில் சட்ட ஒழுங்கு பிரச்னை உருவாக்கி, திமுக அரசைப் பணிய வைக்கிற முயற்சியை செய்கிறார்.
இவ்வாறு அவர் கூறினார்.