மாவட்டச் செயலாளர்களுக்கு 4 கோடி – ஏறி அடிக்கும் எடப்பாடி

அதிமுகவில் தலைமைப் பதவிக்குக் கடும் சண்டை நடந்து வருகிறது. எடப்பாடி பழனிச்சாமி தனக்கு ஆதரவாக நிர்வாகிகளைத் திரட்டி வரும் நிலையில், ஓபிஎஸ் மாவட்ட வாரியாக நிர்வாகிகளைச் சந்திக்க நேற்று சொந்த ஊரான தேனிக்குச் சென்றார். சென்னையில் இருந்து விமானம் மூலம் மதுரை சென்ற அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. அங்கிருந்து தொண்டர்கள் புடைசூழு தேனிக்கு சாலை மார்க்கமாகச் சென்றார்.

ஓபிஎஸ் மற்றும் இபிஎஸ் இரண்டு தரப்பினரும் தங்களது பலத்தை நிரூபிக்க, தொடங்கி உள்ள போட்டி யுத்தத்தால், இபிஎஸ் ஆதரவாளர்கள், கட்சி அலுவலகம், சுவரொட்டி, பதாகை மற்றும் சுவர் விளம்பரங்களில் இருந்த ஓபிஎஸ் படம் மற்றும் பெயரை அழித்து வருகின்றனர். பதிலுக்கு ஓபிஎஸ் ஆதரவாளர்களும் இபிஎஸ் பெயரை அழித்தனர். அக்கட்சியின் அதிகாரப்பூர்வ நாளேடான ‘நமது அம்மா’ பத்திரிகையின் நிறுவனர்கள் பெயரில் இருந்த ஓபிஎஸ் பெயர் நீக்கம் செய்யப்பட்டுள்ளது.

இந்தச் சூழ்நிலையில்,எடப்பாடி அணியினர் தரப்பில், அதிமுக தலைமை அலுவலகத்தில் இருந்து தலைமை நிலையச் செயலாளர் அறிவிப்பு என்ற பெயரில் ஓர் அறிக்கை நேற்று வெளியிடப்பட்டுள்ளது.

அதில், அதிமுக தலைமைக் கழக நிர்வாகிகள் கேட்டுக் கொண்டதற்கிணங்க, 27.6.2022 திங்கட் கிழமை (இன்று ) காலை 10 மணிக்கு, தலைமைக் கழகம் – புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். மாளிகை கூட்ட அரங்கில், தலைமைக் கழக நிர்வாகிகள் கூட்டம் நடைபெற உள்ளது. இக்கூட்டத்தில் தலைமைக் கழக நிர்வாகிகள் அனைவரும் கலந்துகொள்ளுமாறு அன்போடு கேட்டுக்கொள்கிறேன்’ என்று கூறப்பட்டுள்ளது.

கையெழுத்து எதுவும் இல்லாமல் வெளியிடப்பட்டுள்ள இந்த அறிவிப்பு சட்டப்படி செல்லாது என்று ஓபிஎஸ் கூறியுள்ளார்.

இந்நிலையில், அனைத்து மாவட்டச் செயலாளர்களுக்கும் நான்கு கோடி கொடுப்பதாக எடப்பாடி வாக்குக் கொடுத்திருக்கிறாராம். அவர் பொதுச்செயலாளர் ஆக ஆதரவு தர வேண்டும் என்கிற நிபந்தனையோடு நான்கு கோடி கொடுக்கவுள்ளாராம். அதில் முதல்கட்டமாக இரண்டு கோடி அனைவருக்கும் கொடுக்கப்பட்டுவிட்டதாகவும் பொதுச்செயலாளர் ஆன பின்பு மீதம் இரண்டு கோடி கொடுக்கப்படும் என்று சொல்லப்பட்டுள்ளதாம்.

இத்தகவல் வெளியே கசிந்துவிட்டதால் எல்லா மாவட்டங்களிலும், ஓட்டுப்போடும் தகுதியில் உள்ள மற்ற பிரதிநிதிகள் எங்களுக்கு எதுவுமில்லையா? என்கிற அதிருப்தியில் இருப்பதாகவும் அவர்களைக் குறிவைத்து ஓபிஎஸ் ஆதரவாளர்களாக மாற்றிக் கொண்டிருப்பதாகவும் சொல்லப்படுகிறது.

இதனால் அதிமுகவில் ஒருவரையொருவர் சந்தித்துக் கொண்டாலே அவருக்கு இவ்வளவு கிடைத்ததாம் உங்களுக்கு எவ்வளவு கிடைத்தது? என்றுதான் பேசிக்கொள்கிறார்களாம்.

Leave a Response