உலகத் தமிழ் ஆராய்ச்சி நிறுவனத்துக்குப் புத்துயிர் அளியுங்கள் – மு.க.ஸ்டாலினுக்கு சிபிஎம் கோரிக்கை

முடங்கிப் போயுள்ள உலகத் தமிழ் ஆராய்ச்சி நிறுவனங்களுக்கு மீண்டும் புத்துயிர் அளித்து உயராய்வு நிறுவனமாக மாற்றிடுக என தமிழக முதலமைச்சருக்கு சிபிஐ (எம்) கடிதம் அனுப்பியுள்ளது.
 
கடந்த அஇஅதிமுக ஆட்சிக் காலத்தில் நிர்வாகச் சீர்கேட்டினால் முடங்கிப்போயுள்ள உலகத் தமிழ் ஆராய்ச்சி நிறுவனங்களுக்கு மீண்டும் புத்துயிர் அளித்து உயராய்வு நிறுவனமாக மாற்றிடவும், நிர்வாகச் சீர்கேடுகள் மற்றும் முறைகேடுகள் குறித்து விசாரிப்பதற்கு  உயர் அதிகாரிகளைக் கொண்ட குழு அமைத்திடவும் வலியுறுத்தி தமிழ்நாடு முதலமைச்சருக்கு சிபிஐ (எம்) மாநில செயலாளர் கே. பாலகிருஷ்ணன் எழுதியுள்ள கடிதம் கீழே தரப்பட்டுள்ளது.
  
பெறுநர்
                மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள்,
                தமிழ்நாடு அரசு,
                தலைமைச் செயலகம்,
                சென்னை – 600 009.

மாண்புமிகு முதலமைச்சர் அவர்களுக்கு வணக்கம்.

பொருள்:-      உலகத்தமிழ் ஆராய்ச்சி நிறுவனங்களை மீண்டும் உயராய்வு நிறுவனமாகச் செயல்பட – நடவடிக்கைகள் மேற்கொள்ள கோருவது தொடர்பாக..

தனிநாயகம் அடிகள் அவர்களாலும், பேரறிஞர் அண்ணா அவர்களாலும் தோற்றுவிக்கப்பட்டு டாக்டர் கலைஞர் அவர்களால் வளர்த்தெடுக்கப்பட்டது உலகத் தமிழ் ஆராய்ச்சி நிறுவனமாகும். தமிழில் உயர் ஆய்வுகளைச் செய்து கருவி நூல்களை உருவாக்குவதே இந்நிறுவனத்தின் முதன்மையான பணியாகும். இப்பணியினை இந்நிறுவனம் சிறப்பாகச் செய்து வந்தது. ஆனால், கடந்த 10 ஆண்டுகளில் அதிமுக ஆட்சியில் நிறுவனத்தின் ஆய்வுச் சூழல் முற்றிலும் முடங்கிப் போனது.  நிறுவனத்தின் ஆய்விற்குத் தொடர்பில்லாத திருக்குறள் காட்சிக் கூடம், பழந்தமிழர் வாழ்வியல் காட்சிக்கூடம் போன்றவற்றைத் திணித்து ஆய்வு நிறுவனத்தைக் கண்காட்சிக் கூடமாக மாற்றியதன் மூலம் நிறுவனத்தின் வளர்ச்சி முற்றிலும் தடைப்பட்டுப் போனது.

தற்போது, பல ஆய்வுகள் இருக்கைகளை உருவாக்கி முறையற்ற வழியில் அரசு மற்றும் நிறுவனத்தின் இலட்சினையைப் பயன்படுத்தி சான்றிதழ்கள் வழங்குவது, திருமூலர் ஆய்வறிக்கையின் மூலம் தமிழகம் முழுவதும் வகுப்புகள் எதுவும் நடத்தாமல் முறையற்ற வகையில் சான்றிதழ்கள் வழங்கப்பட்டு வருவதாகத் தெரிகிறது. இப்படிப் பல்வேறு நிர்வாகச் சீர்கேடுகளால் உலகத் தமிழ் ஆராய்ச்சி நிறுவனம் தன் பெருமையை இழந்து நிற்கிறது.

மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்கள் இந்நிறுவனத்தை உயர் ஆய்வு நிறுவனமாக மாற்றுவதற்கும், இதுகாறும் நடைபெற்று வரும் முறைகேடுகளைக் கண்டறிந்து நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கும், உயர் அதிகாரிகள் கொண்ட குழு அமைத்து முழுமையான விசாரணை நடத்தி அக்குழு அளிக்கும் சிபாரிசுகள் அடிப்படையில் நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டுமெனக் கேட்டுக் கொள்கிறேன்.

உலகத் தமிழ் ஆராய்ச்சி நிறுவனம் மீண்டும் சிறப்பாகச் செயல்பட, இந்நிறுவனத்திற்கு இயக்குநராக மூத்த பேராசிரியர் ஒருவரையே நியமிப்பது பொருத்தமானதாக இருக்கும். மேலும் நிறுவன வளர்ச்சிக்குத் தேவையான கோரிக்கைகள் மற்றும் ஆசிரியர்கள் கோரிக்கைகளை நிறைவேற்றித் தருவதுடன், மாணவர்கள் விடுதியில் உரிய  அடிப்படை வசதிகளை நிறைவேற்றி மாணவர்கள் ஆய்வு செய்வதற்கான நல்ல சூழலை உருவாக்கித் தர வேண்டுமென்று கேட்டுக் கொள்கிறேன்.
நன்றி.
தங்களன்புள்ள,
/ஒப்பம்
(கே. பாலகிருஷ்ணன்)
மாநிலச் செயலாளர்
 
இவ்வாறு அந்தக் கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.

Leave a Response