ஒரேயொரு பூமி – உலக சுற்றுச்சூழல் நாள் செய்தி

பருவநிலை மாற்றம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தவும், சுற்றுச்சூழலை மேம்படுத்தும் செயல்களை ஊக்குவிக்கவும், ஆண்டு தோறும் ஜூன் 5 ஆம்தேதி உலக சுற்றுச்சூழல் நாள் கடைபிடிக்கப்படுகிறது.

1974 ஆம் ஆண்டு முதல் ஐக்கியநாடுகள் சபை சார்பில் உலக சுற்றுச்சூழல் நாள் கடைபிடிக்கப்பட்டு வருகிறது. நீர்நிலைகள், காடுகள், மலைகள், அதிலுள்ள அரிய உயிரினங்கள், பறவைகள், தாவரங்கள், கடற்கரைகள் என்று அனைத்தும் இயற்கை அன்னை நமக்குத் தாரை வார்த்துக் கொடுத்த இணையற்ற பொக்கிசங்கள். இவற்றைப் பாதுகாத்து நமக்கு விட்டுச்செல்வதில் பேரறிவு கொண்டவர்களாக இருந்துள்ளனர் நமது முன்னோர்கள்.

குறிப்பாக நிலத்தை குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை என்று பிரித்தனர். அங்கு வாழும் மக்களுக்கு ஏற்ற கலாச்சாரங்களையும், தொழில்களையும் உருவாக்கினர். நம்மைச் சுற்றியிருக்கும் நிலத்தையும், நீரையும், காற்றையும் வாழ்வின் உயரிய அங்கமாகக் கருதி போற்றி வழிபட்டனர். இதனால் இயற்கையை மாசுபடுத்தாமல் போற்றிப் பாதுகாக்க வேண்டும் என்ற எண்ண ஓட்டம், இயல்பிலேயே இருந்துள்ளது. அதுவே எழில்மிகு பூமியை நம்மிடம் விட்டுச்செல்ல வழி வகுத்தது. ஆனால், இன்றைய நவீன அறிவியலின் வளர்ச்சியால் வெளிப்படும் இரசாயன கழிவுகளும், புகைமண்டலங்களும் இனிய சுற்றுச்சூழலை அடியோடு சிதைத்து வருகிறது. நம்மால் சுற்றுச்சூழல் சீரழியும் நேரத்தில், அதன் சீற்றங்களையும் ஏற்றுக்கொண்டே ஆக வேண்டும் என்பது எழுதப்படாத விதி.

ஆண்டுதோறும் அதிகரிக்கும் கத்திரி வெயிலின் தாக்கமும், திடீரென்று பெய்யும் பேய் மழையும் இயற்கையில் ஒரு ஒழுங்கற்ற தன்மை உருவாகிக் கொண்டிருப்பதை நமக்கு உணர்த்திக் கொண்டே இருக்கும் அபாய சாட்சியங்கள். வெப்பமயமாதல் பிரச்னையால் பனிப்பாறைகள் உருகி, கடல் மட்டம் உயர்ந்து வருகிறது. அதே நேரத்தில், நிலத்தடி நீர்மட்டமோ அதலபாதாளத்துக்குச் சென்று கொண்டிருக்கிறது. இது மனித குலத்தோடு அனைத்து உயிரினங்களுக்கும் ஆபத்தை விளைவிக்கும் என்பது நிதர்சனம். இந்த பூமிப்பந்தில் பயிரினங்கள், கால்நடைகள், விலங்கினங்கள், பறவைகளோடு ஒப்பிடுகையில், மனிதன் கோடியில் ஒரு துளி. ஆனால், இந்தத் துளிகளின் செயல்பாடுகளே இயற்கையை மலடாக்கிக் கொண்டிருக்கிறது.

எனவே, இதைத் தவிர்க்க வேண்டும், தடுக்க வேண்டும் என்ற எண்ண ஓட்டம் ஒவ்வொருவர் மூளைக்குள்ளும் உருவாக வேண்டும். அதோடு மரம் நடுவது, காடுகள் வளர்ப்பது, மரபுசாரா ஆற்றல் மூலங்களைப் பயன்படுத்துவது, தொழிற்சாலைகளில் இருந்து சுத்திகரிக்கப்பட்ட கழிவுகளை வெளியேற்றுவது, அதிக மாசுக்களை உருவாக்கும் திட்டங்களைக் கைவிடுவது போன்ற செயல்களால் மட்டுமே, சுற்றுச்சூழலைப் பாதுகாத்து மறுசீரமைப்பு செய்ய முடியும். எனவே, உலக சுற்றுச்சூழல் நாளில், மாற்றத்தை நம்மிடம் இருந்தே தொடங்க ஒவ்வொருவரும் உறுதியேற்க வேண்டும்.

நமக்கு இருப்பது ஒரேயொரு பூமி. அதைப் பாதுகாக்க உறுதியேற்போம்.

Leave a Response