தமிழகத்தில் 10, 11, 12 ஆம் வகுப்புகளுக்கான பொதுத்தேர்வுகள் நடந்து முடிந்துள்ளன.ஏராளமானோர் இத்தேர்வுகளை எழுதவில்லை.
முதல் நாள் நடந்த மொழிப்பாடத்தேர்வையே சராசரியாக 40 ஆயிரம் பேருக்கு மேல் எழுத வரவில்லை.
மூன்று பொதுத்தேர்வுகளும் முடிந்த நிலையில் 10 ஆம் வகுப்புப் பொதுத்தேர்வை 2 இலட்சத்து 25 ஆயிரத்து 534 பேரும், 11 ஆம் வகுப்புப் பொதுத்தேர்வை 2 இலட்சத்து 58 ஆயிரத்து 641 பேரும், 12 ஆம் வகுப்புப் பொதுத்தேர்வை 4 இலட்சத்து 95 ஆயிரத்து 292 பேரும் எழுதவில்லை என்று தெரியவந்தது.
இது பள்ளிக்கல்வித்துறையில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.
இந்த நிலையில், பொதுத்தேர்வை எழுதாமல் விட்டவர்களை உடனடித் தேர்வில் கலந்து கொள்ளச் செய்ய வேண்டும் என்று பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. இதற்கான படிவங்களையும் அது வெளியிட்டுள்ளது.
பள்ளிக்கல்வித்துறையின் இந்த நடவடிக்கை பள்ளித் தலைமை ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர்கள் மத்தியில் சிக்கலை ஏற்படுத்தியுள்ளது.
இதுதொடர்பாக ஆசிரியர் சங்கங்களைச் சேர்ந்தவர்கள் கூறுவதாவது…,
கடந்த 2 ஆண்டுகளாக நீடித்த கொரோனா கால நெருக்கடி மாணவ, மாணவிகள் மத்தியில் மனரீதியில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.இதனால் தேர்வின் மீது அவர்களுக்கு அச்சம் ஏற்பட்டுள்ளது. இது ஒருபுறம் என்றால் நடுத்தர, அடித்தட்டுக் குடும்பங்கள் கொரோனா கால நெருக்கடியால் பொருளாதார ரீதியில் சிக்கலைச் சந்தித்துள்ளன. அவர்களின் குடும்பங்களில் 15 முதல் 18 வயது வரை உள்ள பள்ளி மாணவ, மாணவிகள் குடும்ப பாரத்தைச் சுமக்கும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர். ஏற்கனவே நாங்கள் அவர்களை அணுகியபோது சரியான பதில் கிடைக்கவில்லை. அதோடு பல குடும்பங்கள் ஊர்விட்டு ஊர் சென்றுள்ளனர். அவர்களைக் கண்டுபிடிப்பது சிரமமாக இருக்கிறது என்றனர்.
இந்த விவரங்கள் நாட்டின் பொருளாதார நிலையை விளக்கும் கண்ணாடியாக அமைந்துள்ளன என்கிறார்கள்.