தமிழகத்திலிருந்து ஆறுபேர் மாநிலங்களவை உறுப்பினர்களாகத் தேர்வு – விவரங்கள்

தமிழகம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த மாநிலங்களவை உறுப்பினர்கள் 57 பேரின் பதவிக் காலம் விரைவில் முடிவடைகிறது. இந்த இடங்களுக்கு வருகிற 10 ஆம் தேதி தேர்தல் நடைபெறுகிறது.

இதற்கான வேட்புமனு தாக்கல் மே 24 ஆம் தேதி தொடங்கியது.

தமிழகத்தைப் பொறுத்தவரை, தி.மு.க. உறுப்பினர்களான டி.கே.எஸ்.இளங்கோவன், ஆர்.எஸ்.பாரதி, ராஜேஸ்குமார் மற்றும் அ.தி.மு.க. உறுப்பினர்களான நவநீதகிருஷ்ணன், எஸ்.ஆர்.பாலசுப்பிரமணியன், விஜயகுமார் ஆகிய 6 பேரின் பதவிக்காலம் நிறைவடைகிறது.

ஒரு மாநிலங்களவை உறுப்பினரைத் தேர்வு செய்ய 34 சட்டமன்ற உறுப்பினர்களின் ஆதரவு தேவை. தற்போது தி.மு.க., அ.தி.மு.க. ஆகிய கட்சிகளுக்கு உள்ள சட்டமன்ற உறுப்பினர்கள் எண்ணிக்கை அடிப்படையில் தி.மு.க. 4 இடங்களிலும், அ.தி.மு.க. 2 இடங்களிலும் வெற்றி பெற முடியும்.

காங்கிரசுக் கட்சிக்கு 18 சட்டமன்ற உறுப்பினர்கள் மட்டுமே இருந்து வரும் நிலையில் கூட்டணிக் கட்சியான தி.மு.க., காங்கிரசுக்கு ஒரு இடத்தை ஒதுக்கீடு செய்தது.

அதன்படி தி.மு.க. 3, அ.தி.மு.க. 2, காங்கிரசு 1 இடங்களில் போட்டியிடுவது என முடிவானது.

தி.மு.க. தரப்பில் கிரிராஜன், கல்யாணசுந்தரம், ராஜேஸ்குமார் ஆகியோரும், அ.தி.மு.க. சார்பில் சி.வி.சண்முகம், தர்மர் ஆகியோரும், காங்கிரசு சார்பில் ப.சிதம்பரமும் வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டு, அவர்கள் வேட்புமனு தாக்கல் செய்தனர்.

மேலும் பத்மராஜன், அக்னி ஸ்ரீ ராமச்சந்திரன், மன்மதன், வேல்முருகன் சோழகனார், தேவராஜன், கந்தசாமி, சுந்தரமூர்த்தி ஆகிய 7 பேர் சுயேச்சையாகவும் மனு தாக்கல் செய்தனர்.

ஜூன் 1 ஆம் தேதி வேட்புமனு பரிசீலனை நடந்தது. இதில் சுயேச்சை வேட்பாளர்கள் 7 பேரின் வேட்பு மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன.

தி.மு.க., அ.தி.மு.க., காங்கிரசு வேட்பாளர்களின் வேட்புமனுக்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டன.

நேற்று மாலை 3 மணி வரை வேட்புமனுக்களை திரும்ப பெற அவகாசம் வழங்கப்பட்டிருந்தது. இந்த அவகாசம் முடிவடைந்ததும் வெற்றி பெற்ற வேட்பாளர்கள் குறித்து அதிகாரபூர்வமாக அறிவிக்கப்படும் என தேர்தல் அதிகாரி அறிவித்திருந்தார்.

அதன்படி, நேற்று மாலை 3 மணிக்கு தி.மு.க., அ.தி.மு.க., காங்கிரசு வேட்பாளர்கள் 6 பேரும் போட்டியின்றித் தேர்ந்தெடுக்கப்பட்டதாக தேர்தல் அதிகாரியும், சட்டமன்றச் செயலாளருமான சீனிவாசன் அறிவித்தார்.

இதைத்தொடர்ந்து தி.மு.க. சார்பில் போட்டியிட்ட கிரிராஜன், கல்யாணசுந்தரம், ராஜேஸ்குமார் ஆகியோர் வெற்றிச் சான்றிதழைப் பெற்றுக்கொண்டனர். அப்போது அரசு கொறடா கோவி.செழியன், சுற்றுலாத்துறை அமைச்சர் மதிவேந்தன் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.

அ.தி.மு.க. சார்பில் போட்டியிட்ட சி.வி.சண்முகம், தர்மர் ஆகியோர் அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் முன்னிலையில் வெற்றிச் சான்றிதழைப் பெற்றுக்கொண்டனர். அவர்களுடன் முன்னாள் அமைச்சர்கள் வேலுமணி, தங்கமணி, அன்பழகன் உள்ளிட்டோரும் இருந்தனர்.

காங்கிரசு சார்பில் போட்டியிட்ட ப.சிதம்பரத்தின் வெற்றிச் சான்றிதழை அவரது மகனும், பாராளுமன்ற உறுப்பினருமான கார்த்தி சிதம்பரம் பெற்றுக்கொண்டார்.

Leave a Response