சென்னை சேலம் எட்டுவழிச்சாலை திமுக நிலை என்ன? – அமைச்சர் விளக்கம்

சென்னை – சேலம் 8 வழிச்சாலை விவகாரத்தில் திமுக அரசு தனது நிலைப்பாட்டில் இருந்து மாறவில்லை என பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு தெரிவித்திருக்கிறார்.

தமிழக அரசின் பல்வேறு துறைகளுக்கு நிதி ஒதுக்குவதற்கான மானியக் கோரிக்கை மீதான விவாதங்களுக்காக சட்டப்பேரவை மீண்டும் கூடியது. இன்று நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் துறை, கட்டடங்கள் (பொதுப்பணித்துறை) துறை மானியக் கோரிக்கைகள் மீது விவாதம் நடைபெற்றது.

அப்போது, சென்னை – சேலம் 8 வழிச்சாலை தொடர்பாக சட்டப்பேரவையில் கேள்வி எழுப்பப்பட்டது.

அதற்கு பதிலளித்த அமைச்சர் எ.வ.வேலு,

சென்னை – சேலம் 8 வழிச்சாலைத் திட்டத்தில் திமுகவின் நிலைப்பாடு இப்போதும் மாறவில்லை. 8 வழிச்சாலை திட்டத்தில் எதிர்க்கட்சித் தலைவராக இருந்தபோது மக்களின் கருத்து கேட்டு அதன் அடிப்படையில் திட்டத்தின் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியிருந்தார். அதே நிலைப்பாடு தான் தற்போதும் தொடர்கிறது. 8 வழிச்சாலை திட்டத்தில் மக்களின் கருத்து கேட்ட பிறகே அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

சாலைகளை மேம்படுத்த சாலைப் பணியாளர்கள் தேவைபடுகின்றனர். மாநில அரசின் நிதிநிலை எல்லோருக்கும் தெரிந்ததுதான்.உரிய காலம் வரும்போது சாலைப் பணியாளர்களைத் தேர்வு செய்ய முதலமைச்சர் அனுமதிப்பார்.

சென்னை அண்ணாசாலையில் போக்குவரத்து நெரிசலைக் குறைக்கும் வகையில், சென்னை தேனாம்பேட்டை – சைதாப்பேட்டை வரை ரூ.485 கோடியில் உயர்மட்டச் சாலை அமைக்கப்படும் எனவும் அமைச்சர் எ.வ.வேலு தெரிவித்தார்.

Leave a Response